இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்... பகுதி 5

மரங்களை மனிதன் நட்டு வளர்க்க வேண்டியது தற்போதைய தேவையாக உள்ளது. ஆனால், காடுகள் தானாக வளர்ந்தவையா?! இல்லை! அதற்குப் பின்னாலும் பலவித காரணிகள் செயல்படுகின்றன. அப்படியொரு காரணியாக பறவையினங்களும் உள்ளன. அரிய பறவை ஒன்று செய்யும் அற்புத சேவை என்ன என்பதையும், காடுகள் காட்டும் அதிசய உலகத்தைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்!

ஆனந்த்,

ஈஷா பசுமைக் கரங்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காடுகளையும் காட்டு உயிரினங்களையும் நான் சிறுவயது முதலே கவனித்து வந்தாலும், இப்போதும் காடுகள் பிரம்மிப்பாகவே உள்ளன. காடுகளில் பல வகை செடிகொடிகள் மரங்கள் மட்டுமல்லாது, பூச்சிகள், வண்டுகள், பறவைகள், விலங்குகள் என பலவித உயிரினங்களைக் காணமுடியும். தற்போது குழந்தைகள் டிஸ்கவரி சேனலிலும், கூகுலிலும் சென்று பல விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றனர். ஆனால், அவையெல்லாம் நேரடியாக கண்டுணரும் அனுபவத்திற்கு முன் வெகு சாதாரணம்.

என் அப்பாவின் நண்பர் ஞானசெல்வன் அங்க்கிள் ஒரு இயற்கை ஆர்வலர். காட்டு வாழ்க்கையில் கைதேர்ந்த அவர்தான் காடுகளையும் அங்கிருக்கும் உயிரினங்களையும் கவனிக்கக் கற்றுத்தந்தார்.
சிறுவயதில் சுமார் 6-7 நாட்கள் எங்களைக் கூட்டிக் கொண்டு அவர் மேற்குத் தொடச்சி மலைகளுக்குள் செல்வார். ஆனால், எதைப் பற்றியும் கற்றுத்தரவோ குறிப்புகள் கொடுக்கவோ மாட்டார். அங்கு நாங்கள் ஏதேனும் விநோதமான புதியதான உயிரினத்தைக் கண்டாலும் யாரும் வாய் திறக்கக் கூடாது; வெறுமனே கவனிக்க வேண்டும்.

கடைசி நாள் நாங்கள் அனைவரும் அமர்ந்து கலந்துரையாடலில் ஈடுபடுவோம். அப்போது நாங்கள் அங்கு கண்ட பறவைகள் குறித்து விவரிப்போம். அதைக் கேட்கும் ஞானசெல்வன் அங்க்கிள், அந்த பறவையின் வடிவம், நிறம், அதன் அலகு போன்றவை குறித்து கேள்விகள் கேட்பார். அதன்பின் பறவைகளின் புத்தகம் ஒன்றை எடுத்து "இதுவா நீ சொல்வது?!" எனக் கேட்பார். அது அற்புத அனுபவமாக இருக்கும்.

இந்த அத்தி மரங்கள் ஹார்ன்பில் பறவைகளால் மட்டுமே வெகுதூரத்திலும் தன் இனத்தை பெருக்கிக்கொள்கிறது.

அதுபோன்று நான் கண்டு வியந்த பறவைகளில் ஒன்றுதான் 'ஹார்ன்பில்' பறவை. ஹார்ன்பில் பறவையின் இரண்டு வகைளையும் நான் கண்டுள்ளேன். ஒன்று 'தி க்ரேட் இந்தியன் ஹார்ன்பில்' இன்னொன்று 'மலபார் பைடு ஹார்ன்பில்'. அந்தப் பறவை மிகவும் பெரிய ஒன்று. தன் சிறகுகளை விரிக்கும்போது ஆறடிக்கும் மேலே விரியும். அது காடுகளுக்கு மேலே சிறகடித்து பறக்கும்போது அதன் சிறகுகள் எழுப்பும் ஓசை 'உஷ்... உஷ்...' என்று இரைந்தபடி ராட்சத ஒலியாக இருக்கும்.

சரி! இந்தப் பறவை அப்படியென்ன சிறப்பு வாய்ந்தது எனக் கேட்கத் தோன்றுகிறதா? ஆம்! இதன் சிறப்பு என்னவென்றால், இது அத்தி பழத்தை உண்டு வாழக்கூடியது. சுமார் 150 வகை அத்தி மரங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கின்றன. குரங்குகளும் வேறு பல பறவையினங்களும் அத்திப் பழங்களை உண்டாலும் கூட, ஹார்ன்பில் பறவைகளுக்கு அத்திப் பழங்கள் பிரதான உணவாக உள்ளது.

இந்த அத்தி மரங்கள் ஹார்ன்பில் பறவைகளால் மட்டுமே வெகுதூரத்திலும் தன் இனத்தை பெருக்கிக்கொள்கிறது. இந்த அத்தி பழ விதைகள் கீழே விழுந்து தானே முளைக்காது. ஆம்! நீங்கள் காடுகளுக்கு சென்று அங்கே இருக்கும் அத்திப்பழ விதையை நட்டால் அது முளைக்காது. அவை ஹார்ன்பில் பறவையின் வயிற்றுக்குள் சென்று ஜீரணமாகி வெளிவரும்போது மட்டுமே முளைக்கின்றன.

ஹார்ன்பில் பறவைகள் வெகுதூரத்திற்கு பயணம் செய்வதால், அத்தி மர இனத்தைப் பரப்புவதோடு காடுகளின் பாதுகாவலராகவும் விளங்குகின்றன. காடுகளில் அரங்கேறிக் கொண்டிருக்கும் இன்னும் பல சுவாரஸ்யங்களை தொடர்ந்து சொல்கிறேன், காத்திருங்கள்!

இயற்கை இன்னும் பேசும்!

இத்தொடரின் பிற பதிவுகள்: இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்