ஜனவரி 5ல் ஒரு பசுமை சாதனை!

தமிழக அரசின் துணையுடன் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் துவக்கியதுதான் "பசுமைப் பள்ளி இயக்கம்". இது ஆரம்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி தற்போது ஒரு மிகப் பெரும் பசுமை சாதனையை ஜனவரி 5ம் தேதியன்று நிகழ்த்தவுள்ளது. அதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...
 

தமிழக அரசின் துணையுடன் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் துவக்கியதுதான் "பசுமைப் பள்ளி இயக்கம்". இது ஆரம்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி தற்போது ஒரு மிகப் பெரும் பசுமை சாதனையை ஜனவரி 5ம் தேதியன்று நிகழ்த்தவுள்ளது. அதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பள்ளி வாழ்க்கையை யாராலும் எளிதில் மறக்க முடியாது. "மழையால் இன்று பள்ளி விடுமுறை!" என்ற அறிவிப்பு; "இன்று கணக்கு டீச்சர் லீவு...!" என்ற நண்பனின் குரல்; வீட்டுப்பாடம் செய்யாமல் போன அன்று, வீட்டுப்பாடத்தை கேட்க மறந்த ஆசிரியர் என சின்ன சின்ன நிகழ்வுகள் தந்த சந்தோஷத்தை, பெரிய ஆளாகிவிட்ட பிறகு கிடைக்கும் பணமோ பதவியோ கொடுத்துவிடுவதில்லை.

அதுபோல், பள்ளிக்கூடத்தில் பழகும் பழக்கங்களும் கற்ற பாடங்களும் நம் வாழ்நாள் உள்ளவரை மறப்பதில்லை. அவை ஒவ்வொன்றும் நெஞ்சில் பதிந்தே கிடக்கின்றன. அந்த வகையில், பள்ளிப் பருவத்திலேயே ஒரு மாணவன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் பெற்றுவிட்டால், அந்த மாணவனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இதனை மனதில் கொண்டு, 2011ம் ஆண்டு ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து 'பசுமைப்பள்ளி இயக்க'த்தை துவங்கியது.

பசுமைப்பள்ளி இயக்கம்

இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தை மையப்படுத்தி செயல்படுகிறது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தொடர்புகொள்ளப்பட்டு, பின்னர் அந்தப் பள்ளிகளின் தேசியப் பசுமைப்படை மூலமாக ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 2 மாணவர்கள், ஒரு ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பின்னர், ஈஷா நாற்றுப் பண்ணைகளில் வைத்து மரக்கன்றுகள் உருவாக்கக் கற்றுத்தரப்படுகிறது. விதை விதைத்தல், பாக்கெட்டுகளில் மண் நிரப்புதல், நாற்று ஊன்றுதல், நீர்விடுதல், களையெடுத்தல் போன்ற அனைத்திலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்படிப் பயிற்சி பெற்ற மாணவர்கள் பிறகு தங்கள் பள்ளிக்குச் சென்று பிற மாணவர்களுக்குத் தாங்களாகவே பயிற்சியளித்து, பள்ளியில் சிறிய நாற்றுப்பண்ணை உருவாக்கி, மரக்கன்றுகளை உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் இந்தச் செயல்திட்டத்தின் மூலம் 2000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையான விதைகள், பிளாஸ்டிக் பைகள், தொழில்நுட்ப உதவி, நிகழ்விற்குப்பின் கண்காணிப்பு ஆகியவை ஈஷா பசுமைக் கரங்களால் வழங்கப்படுகிறது.

இதற்கு முந்தைய வருடங்களில் கோவை, ஈரோடு, திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில் இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது.

ஒரே நாளில் 9 லட்சம் மரக்கன்றுகள்!

சேலம் மாவட்டத்தில் பசுமைப் பள்ளி இயக்கத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 447 பள்ளிகளைச் சேர்ந்த, சுமார் 22,000 பள்ளி மாணவர்கள் மூலமாக, 9 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த 9 லட்சம் மரக்கன்றுகளும் வரும் ஜனவரி 5ம் தேதி அன்று, ஒரே நாளில் நடப்படவிருப்பது இன்னொரு சிறப்பம்சம். இந்த சாதனை நிகழ்வு லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெறுவதற்கான சாத்தியமுள்ளது.

ஜனவரி 5ஆம் தேதியன்று, மதியம் 12.30 மணியளவில் சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில், கடைசி மரக்கன்றை மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ரோஸையா அவர்களும், சத்குரு அவர்களும் நட்டு நிறைவுசெய்ய உள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் திரு. மஹரபூஷணம் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்த வாருங்கள்!

விவரம் பெற: 94422 15030