பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 17

‘அதென்ன ஐந்தடுக்கு மாதிரிப் பண்ணை?’ என்று சாமானிய மனிதர்கள் கேட்பதைப்போல வழக்கமான விவசாயம் மேற்கொள்ளும் பரம்பரை விவசாயிகளும்கூட கேட்கத்தான் செய்வார்கள். இயற்கை வேளாண் வித்தகர் பாலேக்கர் ஐயாவின் இந்த ஐந்தடுக்கு விவசாய உத்தியை பின்பற்றும் ஒரு விவசாயியின் வெற்றிக்கதை மூலம் நீங்களும் அதனை அறிந்து கொள்ளலாம்!

ஈஷா விவசாயக் குழு, அதன் தென்மாவட்ட விவசாய பயணத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகில் மைலாடி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி திரு.செல்வம் அவர்களைச் சந்தித்தது.

மொட்டைமாடியில் திராட்சைக்கொடி

சுசீந்திரத்தில் உள்ள செல்வம் அவர்களது வீட்டில் எங்களைக் கவர்ந்தது மொட்டைமாடியில் இருந்த திராட்சைக் கொடிகளே! தரையில் நடப்பட்டிருந்த கொடிகள் மொட்டைமாடியில் இருந்த நிரந்தர பந்தலில் ஏற்றப்பட்டிருந்தன, திராட்சைக்கொடிகள் அழகாக படர்ந்து மொட்டைமாடியை குளிர்வித்ததோடு, நிழல்தரும்படியும் இருந்தது. திராட்சைக்கொடியில் பிஞ்சுகளும், பழங்களும் கொத்துத்கொத்தாக தொங்கிக்கொண்டிருந்தன.

2015ல் ஈஷா ஒருங்கிணைத்து நடத்திய 8 நாள் ஜீரோபட்ஜெட் இயற்கை விவசாய வகுப்பில் பாலேக்கர் ஐயா அவர்கள் கற்றுக்கொடுத்த எளிமையான தொழில் நுட்பங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. இந்த வகுப்பில் கலந்துகொண்ட பிறகுதான் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினேன்.

செல்வம் அவர்கள் இதைப்பற்றி கூறும்போது "இந்தப் பழங்கள் அனைத்தும் குருவிகளுக்கும், அணில்களுக்காகவும்தான்; எங்களுக்காக கிடையாது. நாங்கள் பழங்களை பறிப்பதில்லை! பறவைகள் உண்பதை பார்ப்பதே எங்களுக்கு மனநிறைவாக இருக்கிறது" என்று தெரிவித்தார். அவர் சொன்னதைப் போலவே அதிகாலையில் சில அணில்களும், குருவிகளும் திராட்சையைத் தின்றுகொண்டிருந்தன. அதிகாலையில் கன்னியாகுமரி சூரிய உதயத்தைக் கண்டுவிட்டு, சுசீந்திரம் தானுமாலய சுவாமியையும் தரிசித்துவிட்டு மைலாடியில் உள்ள பண்ணைக்குப் பயணித்தோம்.

“கூரமேல சோறு போட்டா ஆயிரம் காகம் தன்னால வருமுன்னு... என்ற ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்கோ. அட பாருங்கண்ணா இந்தக் கன்னியாகுமரிக்காரரு எம்புட்டு கருசணயா பறவைக அல்லாத்துக்கும் பழங்கள போட்ருக்காருன்னு! பண்ணிய பயிருல புண்ணியத்த தேடுன்னு சொல்றமாதிரி, நாம மத்த சீவன்களுக்கெல்லாம் கொடுத்து நாமளும் வாழ்ந்தா அந்த இயற்கையே நம்ம வாழ்த்தும் இல்லீங்களா?! ஆனா... இப்ப மனுசங்க ரொம்பபேரு கெரகத்துக்கு இந்த ரசாயனப் பூச்சிக்கொல்லிய அடிச்சு அல்லா புழு, பூச்சியையும் ஒட்டுக்க கொன்னு போடுறாங்கோ. அட பூச்சிகல்லயே நன்மைசெய்யும் பூச்சி, தீமைசெய்யும் பூச்சின்னு இருக்குறது கூட நெறயபேத்துக்கு தெரியறதில்லீங்கோ!”

பண்ணையை சுற்றிப்பார்த்துக் கொண்டே பேச்சைத் துவங்கினோம், செல்வம் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை, "எங்களுக்கு பூர்வீகம் சுசீந்திரம் அருகில் உள்ள தேரூர் கிராமம். நான் வெளிநாட்டில் கணினி தொடர்பான வேலை செய்து கொண்டிருந்தேன், கடந்த இரண்டரை வருடமாத்தான் விவசாயம் செய்கிறேன். ஆரம்பத்தில் ஒரு வருடம் இரசாயன விவசாயம்தான் செய்தேன். மோனோகுரோட்டோபாஸ், திம்மட், ப்யூரிடான் என பல பூச்சிமருந்துகளை நானும் பயன்படுத்தி இருக்கேன். ப்யூரிடான் குருணை மருந்தின் நாற்றம் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயமாக இருந்தது, உடலையும் மண்ணையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று படிப்படியாக புரிந்தது.”

இயற்கை விவசாயத்தின் தொடக்கம்

2015ல் ஈஷா ஒருங்கிணைத்து நடத்திய 8 நாள் ஜீரோபட்ஜெட் இயற்கை விவசாய வகுப்பில் பாலேக்கர் ஐயா அவர்கள் கற்றுக்கொடுத்த எளிமையான தொழில் நுட்பங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. இந்த வகுப்பில் கலந்துகொண்ட பிறகுதான் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினேன். அதன் பின் பண்ணையில் சில மாற்றங்களைச் செய்தேன்.

இரண்டு வருடத்திற்கு முன்பு வாங்கிய தென்னந்தோப்பில் மரங்கள் சீராக இல்லாமலும் காய்ப்பு இல்லாமலும் இருந்தது. நல்ல மரங்களையும் ஓரளவு சுமாரான மரங்களையும் விட்டுவிட்டு மற்ற காய்ப்பில்லாத மரங்களை வெட்டி நீக்கிவிட்டேன். தற்போது 80 தென்னைமரங்கள் மீதி உள்ளது.

“மேயுறமாடுகள நக்குறமாடுக கெடுக்கும்னு சொல்லுவாங்க இல்லீங்கோ... அது மாதிரி காய்ப்பில்லாத மரங்கள்லாம் தேவையில்லாம தண்ணியையும், சத்தையும் உறிஞ்சிகிட்டு நல்ல காய்ப்புள்ள மரங்கள கெடுக்குமுங்க. அதான் அண்ணா வெகரமா அந்த மரங்கள பாத்து வெட்டிருக்காருங்கோ. சரியான மரத்த வைக்குறது மட்டுமில்லீங்கோ, தேவையில்லாதத வெட்டுறதும் விவசாயம்தாங்கோ!”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மூடாக்கு மரம் வளர்ப்பு

தென்னந்தோப்பில் நீர் ஆவியாவதை சமாளிக்க வேலியோரங்களில் கிளைரிசிடியா போத்துகளை நடவுசெய்தேன். அவை தற்போது நன்றாக வளர்ந்திருக்கு. அதிலிருந்து கிளைகளை வெட்டி தென்னைமரங்களுக்கு இடையிலும் நட்டு வருகிறேன். கிளைரிசிடியாவை நாற்றுக்களாக நட்டு வளர்த்ததைவிட போத்துக்களாக நட்டுவச்சது நல்லா வளருது. தொடக்கத்தில் மூடாக்கு போடுவதற்கு எந்தக் கழிவுகளும் இல்லை. அதனால் தென்னைமட்டை வெட்டும் இயந்திரத்தை வாங்கினேன். தற்போது தென்னைமட்டைத்தூளை மூடாக்காக பயன்படுத்துகிறேன். கிளைரிசிடியா வளர்ந்தபிறகு மூடாக்கு போட இலைதழைகள் நிறைய கிடைக்கும். நாட்டு மாடுகள் இல்லாம ஜீவாமிர்தம் செய்யக் கஷ்டமா இருந்தது. அதனால நாட்டுமாடு ஒன்று வாங்கியிருக்கேன்.

வாழையில் ஊடுபயிர்

பக்கத்தில் இருந்த 45 சென்ட் நிலத்தில் இயற்கை முறையில் ரசகதளி மற்றும் செவ்வாழை இயற்கை முறையில் பயிர்செய்தேன், அதில் ஊடுபயிர்களைப் பயிர்செய்து அதில் ஓரளவு விளைச்சலும் எடுத்திருக்கிறேன். செடிஅவரை, கொடிஅவரை, கொத்தவரை, கத்தரிக்காய், வெள்ளரிக்காய், பொறியல் காராமணி போன்ற ஊடுபயிர்களில் இருந்து 450 கிலோ வரை மகசூல் கிடைத்தது.

ஐந்தடுக்கு மாதிரி

வாழை இருந்த 45 சென்ட் நிலத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியில் மா மாதிரியும், மறுபாதியில் தென்னைமாதிரியும் என தற்போது பயிர் செய்துள்ளேன். மா மாதிரியில் மாங்கன்றுகள் 10, வாழை 100, முருங்கை 50, பப்பாளி 30, சீதா 20, சப்போட்டா 10, மாதுளை 20, பெ.நெல்லி 10, சிறுநெல்லி 10, கொய்யா 5, எலுமிச்சை, நார்தை, அகத்தி என பல்வேறு மரங்களை நட்டுள்ளேன். ஊடுபயிராக கொடிஅவரை பயிர் செய்துள்ளேன்.
தென்னைமாதிரியில் தென்னை 20, பாக்கு 40, வாழை 100, முருங்கை 50, பப்பாளி 30, அதோடு கிளைரிசிடியாவையும் நட்டுள்ளேன். கிளைரிசிடியா வாழைக்குத் தேவையான தழைச்சத்தைக் கொடுக்கும் என்பதால் அதையும் சேர்த்து நட்டிருக்கேன். பாலேக்கர் ஐயா சொன்ன தென்னை மாதிரியை கொஞ்சம் மாற்றி நடவு செய்திருக்கேன்.

“அடசாமி பாத்தீங்ளா, கன்னியாகுமரி செல்வம் அண்ணா எவ்வளவு வெகரமா ஐந்தடுக்கு மாதிரிய உருவாக்கியிருக்காருன்னு! இன்னும் நம்ம ஊர்ப்பக்கமெல்லாங் உழுது வெதச்சு ஒட்டுக்ககளையெடுத்து மருந்தடிச்சு செய்யுற அதே முறையிலதான் ரொம்பபேரு பாக்குறாங்கோ! அவிகளுக்கெல்லாம் இந்த கள்ளிப்பட்டி கலைவாணி அப்பப்போ எடுத்துச் சொல்றேனுங்க. ஆனாலும் புத்தியுள்ள புள்ள பொழச்சுக்கும்னு சொல்றது மாதிரி கேக்குறவங்கதானுங்க கேக்குறாங்கோ. மித்தவிகல்லாம் நா எதோ பொழுது போகாம பேசுறதா நெனச்ருகிறாங்கோ! அட அல்லாத்தையும் ஒருநாளு மாத்தாம விடக்கூடாதுங்கறதுல நானும் இஸ்டெடியா இருக்கேணுங்க!”

இயற்கை விவசாயத்தில் ஐந்தடுக்கு மாதிரி, குமரி விவசாயியின் வெற்றிக்கதை!, iyarkai vivasayathil ainthadukku mathiri kumari vivasayiyin vetrikkathai

இயற்கை விவசாயத்தில் ஐந்தடுக்கு மாதிரி, குமரி விவசாயியின் வெற்றிக்கதை!, iyarkai vivasayathil ainthadukku mathiri kumari vivasayiyin vetrikkathai

இயற்கை விவசாயத்தில் ஐந்தடுக்கு மாதிரி, குமரி விவசாயியின் வெற்றிக்கதை!, iyarkai vivasayathil ainthadukku mathiri kumari vivasayiyin vetrikkathai

இயற்கை விவசாயத்தில் ஐந்தடுக்கு மாதிரி, குமரி விவசாயியின் வெற்றிக்கதை!, iyarkai vivasayathil ainthadukku mathiri kumari vivasayiyin vetrikkathai

படிப்படியாக வரும் வருமானம்

இந்த 45 சென்டில் ஐந்து அடுக்குமாதிரி அமைக்க இதுவரைக்கும் ரூ.22 ஆயிரம் செலவு செய்திருக்கிறேன். இதில் உழவோட்டவும், பாத்தி அமைக்கவும் ஆன செலவு குறைவுதான், பழமரக்கன்றுகள் வாங்குவதற்கான செலவுதான் அதிகம். இந்த ஐந்தடுக்கு மாதிரியமைத்து 10 மாதம் ஆயிடுச்சு, படிப்படியா வருமானமும் வருது. இதுவரை 13 ஆயிரம் வருமானம் வந்திருக்கு.

சில வருஷங்கள் கழித்து மா, எலுமிச்சை, நார்த்தை, கொய்யா போன்றவைகளால் ஆன ஒரு பழத்தோட்டமாக இது இருக்கும். தற்போது வாரம் ஒருமுறை முருங்கை 50 கிலோ, பப்பாளி 50 கிலோ, நேந்திரவாழை 5 தார், அவரைக்காய் 1 கிலோ என்ற அளவுக்கு அறுவடை செய்கிறேன்.

நண்பர்கள் கொடுக்கும் ஊக்கம்

இயற்கை விவசாயத்துக்கு வந்ததினால் என் உடம்பு இப்போது ஆரோக்கியமா இருக்கு. நண்பர்களுக்கு இயற்கையான காய்கறிகளைக் கொடுப்பது எனக்கு மனத்திருப்தியை தருகிறது. என் மனைவியும் எனது நண்பர்களும் எனக்கு நல்ல ஊக்கத்தைத் தருகிறார்கள். இடுபொருள்களை எப்படித் தயாரிப்பது என்பதை எனக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன், வீட்டுத் தோட்டங்களுக்கு நிறையபேர் இந்த இடுபொருள்களை இப்போது பயன்படுத்துகிறார்கள். வேலியோரத்தில் வெட்டிவேர் வைத்துள்ளேன். வெட்டிவேர் ஊறவைத்த தண்ணீர் தாகத்திற்கு நல்லது. அதனால் விரும்பிக் கேட்கும் நண்பர்களுக்கு வெட்டிவேர் கன்றுகளையும் தருகிறேன்.

ஈஷாவின் ஒருங்கிணைப்புப் பணிகள் சிறப்பாக உள்ளன. பல்வேறு தகவல்கள் எங்களுக்கு கிடைக்கின்றன. இது எங்களைப் போன்ற புதிய விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. பலதரப்பட்ட விவசாயிகளோட தகவல்கள் ஊக்கம் தருவதாக இருக்கிறது.

“அட... கள்ளு வித்து கள்ளப்பணம் சம்பாதிக்குறதுக்கு கற்பூரம் வித்து கால்பணம் சம்பாதின்னு என்ற ஊர்ல பெரியவூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ! இரசாயன விளைபொருளெல்லாங் கள்ள விட மோசமானதுங்ணா! நம்ம ஆரோக்கியமும் கெட்டு மித்த மனுசங்க ஆரோக்கியத்தையும் கெடுக்குறதுக்கு பதிலா, இயற்கை விவசாயத்த கடைபிடிச்சோம்னா அல்லாருமே நல்லா இருக்கலாம்னு செல்வம் அண்ணா சொல்றாருங்கோ. அட வாங்கண்ணா அவர் சொல்றத முழுசா கேட்டுப்போட்டு வரலாம்!”

விவசாயத்தில் எனக்கு அதிக அனுபவம் கிடையாது; ஆனால் இந்த இரண்டு வருடங்களில் நான் புரிந்துகொண்டது என்னவென்றால், இயற்கை முறையில் விவசாயம் செய்யும்போது காலநிலை சாதகமாக இருந்ததென்றால் எல்லா மண்ணுக்கும் எல்லா பயிரும் நன்றாகவே வளர்கிறது. இது என்னோட அனுபவம். நிறையப்பேர் இயற்கை விவசாயத்துக்கு வருவதற்குத் தடையாக இருப்பது பூச்சிகளைப் பற்றிய பயமும் பூச்சிகளை மேலாண்மை செய்யத் தெரியாததும்தான். இயற்கை விவசாய முறைகளில் பூச்சிகளின் தொல்லை மிகவும் குறைவாத்தான் இருக்கு. பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை விவசாயம் ஒரு நல்ல தீர்வாக உள்ளது. கடந்த ஒன்றரை வருஷத்தில் பூச்சிவிரட்டி அடிக்கும் தேவைகூட எனக்கு ஏற்படவில்லை, அந்த அளவுக்கு பூச்சிகள் குறைவாகவே இருக்கு.

விவசாயத்திற்கு புதிதாக வந்திருந்தாலும், இயற்கைமீதும் சுற்றுச்சூழல்மீதும் மிகுந்த அக்கறையோடு இருந்த திரு. செல்வம் அவர்களுக்கு ஈஷா விவசாயக்குழு வாழ்த்துக் கூறி விடைபெற்றது.

தொடர்புக்கு:

திரு. செல்வம்: 89031 09316

தொகுப்பு:

ஈஷா விவசாய இயக்கம்: 83000 93777