நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 19

மனிதன் எப்போதும் இயற்கையை அடக்கி ஆழப்பார்க்கிறான். அதனால்தான் இன்று பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளது நம் பூமி. மனிதனின் இந்த அறியாமையைச் சுட்டிக்காட்டும் விதமாக உள்ளது நம்மாழ்வாரின் இந்த எழுத்துக்கள்.

நம்மாழ்வார்:

இயற்கைக்கு மனிதன் கடிவாளம் போட முடியாது. இயற்கை மீது மனிதன் குதிரை சவாரி செய்ய முடியாது. அப்படிச் செய்ய முயன்றால், இயற்கை திருப்பித் தாக்கும்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் கண்களையும், காதுகளையும் மூடிக்கொள்வதால் சிக்கல் தானே விலகிவிடாது.

நமது நாடு மட்டுமல்ல, வளரும் நாடுகள் அனைத்தும் இதுவரைத் திட்டமிட்டுச் செயல்படுத்திய திட்டங்களாலேயே இயற்கைப் பேரிடர்களுக்கு மக்கள் இலக்காகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் இயற்கையே பேரிடர்க்கு ஆளாகி உள்ளது.

இந்திய நாட்டு நடுவண் அரசோ, மாநில அரசுகளோ தங்களைக் குற்றம்சாட்டுவதாகக் கருதத் தேவை இல்லை. அப்படிப் பார்ப்பது உண்மையை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முட்டுக்கட்டையாய் அமைந்துவிடும். 2004ம் ஆண்டு தொடங்கி இன்று வரை சுமத்திரா தீவை நில நடுக்கம் உலுக்கி எடுத்து உயிர்ப்பலி கொள்கிறது. அண்மையில் இப்படிப்பட்ட ஒரு நிலநடுக்கம் அஸாம் மாநிலத்திலும் அதிர்வை ஏற்படுத்தியது.
3

பிலிப்பைன்ஸ் நாடு 7,000 தீவுகளைக்கொண்டது. அண்மையில் இங்கு தாக்கிய புயல் அந்த நாட்டின் வடபகுதியைச் சூறையாடி ஆயிரக்கணக்கில் பலிகொண்டது. அமெரிக்காவில் வெளிப்பட்ட ஆழிப் பேரலை (சுனாமி) நூற்றுக்கணக்கில் மனிதர்களைக் காவுகொண்டது. இரண்டு தீவுகளைத் துடைத்துப்போட்டது. தமிழ்நாட்டிலோ மேற்குத் தொடர் மலைகள் மொட்டை அடிக்கப்பட்டுவிட்டன. வங்கக் கடலோரம் இருந்த அலையாத்திக் காடுகள் வெட்டி எரிக்கப்பட்டுவிட்டன. இனி தமிழ்நாட்டுக்குப் பருவ மழையே கிடையாது. புயல் மழை மட்டுமே உண்டு என்று தேசியச் சுற்றுச்சூழல் கழக இயக்குனர் மெர்ஓம்ஜி சொல்லி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் கண்களையும், காதுகளையும் மூடிக்கொள்வதால் சிக்கல் தானே விலகிவிடாது. நெருப்புக் கோழி தனது தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்வதால் எதிரிகள் மறைந்துவிட மாட்டார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு எடுத்துள்ள ஆய்வறிக்கை சில விவரங்களை முன்வைக்கிறது. தேசத்தில் 60% பகுதி நிலநடுக்கத்துக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. 10 கோடி ஏக்கர் நிலப்பரப்பு வெள்ளத்துக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. 8% நிலப்பரப்பு புயல் சேதத்துக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. 68% நிலப்பரப்பு வறட்சிக்கு இலக்காகும் பரப்பாக உள்ளது.
4

கிருஷ்ணா நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் நெடுஞ்சாலைகளைப் பேர்த்தெடுத்தது. சிற்றூர், பேரூர்களைத் தெப்பக்குளமாக்கியது. இது போலவே கர்நாடகத்திலும் 200-க்கும் மேற்பட்ட மனிதர்களைக் கொன்றுபோட்டது. இரண்டு மாநில முதல்வர்கள் 2000 கோடி ரூபாய்க்கு மேல் நிவாரணம் கேட்டு மைய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.

சுந்தர்லால் பஹுகுணா ஆற்றின் குறுக்கே அணை கட்டும்போதெல்லாம் ஆறு சாகடிக்கப்படுகிறது என்று சொன்னார். உண்மைகளை எதிர்கொள்ளும் மனிதர்களாக நாம் இருக்கிறோம். பேரிடர் பாதிப்பைக் குறைப்பதற்கு நிறையக் கருத்தரங்குகள் நடத்திவிட்டோம். முறையாகச் செயலில் இறங்க ஒரு பேரியக்கம் தேவைப்படுகிறது. அது மக்கட் பெருங்கடலாக அமைய வேண்டும்!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவு என தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை நலனிற்காவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள். அவருக்கு ஒரு அர்ப்பணிப்பாக இங்கே அவரது எழுத்துக்களைப் பதிகிறோம்!

UCL Mathematical and Physical Sciences, Phillippe Put @ flickr