இயற்கை மரவள்ளியில் இனிய வருமானம்!
ஈஷா விவசாயக்குழு அவினாசி வட்டத்தில் நடுவச்சேரியில் உள்ள இயற்கை விவசாயி திரு.சாமிநாதன் அவர்களை சந்தித்தபோது அவர் பகிர்ந்துகொண்ட சில வேளாண் தொழிற்நுட்பங்களை கள்ளிப்பட்டி கலைவாணியுடன் இங்கே சுவைபட பகிர்கிறோம்!
 
இயற்கை மரவள்ளியில் இனிய வருமானம்!, Iyarkai maravalliyil iniya varumanam
 

பூமித் தாயின் புன்னகை!-இயற்கை வழி விவசாயம்- பகுதி 3

ஈஷா விவசாயக்குழு அவினாசி வட்டத்தில் நடுவச்சேரியில் உள்ள இயற்கை விவசாயி திரு.சாமிநாதன் அவர்களை சந்தித்தபோது அவர் பகிர்ந்துகொண்ட சில வேளாண் தொழிற்நுட்பங்களை கள்ளிப்பட்டி கலைவாணியுடன் இங்கே சுவைபட பகிர்கிறோம்!

பகுதிநேர விவசாயியான திரு.சாமிநாதன் திருப்பூரில் சிறு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். கடந்த ஆறு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்துவரும் இவர், தனது நிலத்தில் மரவள்ளிக் கிழங்கு, தென்னை மற்றும் வாழை ஆகியவற்றை பயிர் செய்கிறார். இவருக்கு 200 தென்னை மரங்கள் உள்ளன.

அட திருப்பூர்தானுங்க தொழில் வளம் நெறஞ்ச நகரம்... அப்புறம் சாமிநாதன் அண்ணா சும்மா விட்ருவாப்படியா?! தொழிலையும் விவசாயத்தையும் ஒட்டுக்க பாக்குறதுக்கு ஒரு தெறம வேணுமுங்க! அதுசரி... சாமிநாதன் அண்ணா என்ன சொல்றாப்டினு கேப்போம் வாங்கோ!

இயற்கை மரவள்ளியில் இனிய வருமானம்!, Iyarkai maravalliyil iniya varumanam

"மகசூலை அதிகரிக்கும் கொள்ளு"

நான்தான் சொன்னேன் இல்லீங்கோ... நம்ம சாமிநாதன் அண்ணா கெட்டிக்காரருனு! எப்படி மரவள்ளியையும் கொள்ளையும் மாத்தி மாத்தி போட்டு ஒரு புது டெக்னிக் கண்டுபிடிச்சிருக்காரு பாருங்கோ!

தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தற்போது ஒரு ஏக்கரில் மட்டுமே மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்துள்ளார். மீதியுள்ள நிலத்தில் கொள்ளுப் பயிரை உயிர் மூடாக்காக விதைத்திருக்கிறார்.

அடுத்த ஆண்டில் கொள்ளு விதைத்த நிலத்தில் மரவள்ளிகிழங்கையும், மரவள்ளி நட்டஇடத்தில் கொள்ளையும் மாற்றி பயிர் செய்ய இருப்பதாகக் கூறுகிறார். கொள்ளுபயிர் செய்வதால் அந்த இடத்தில் தழைச்சத்து நிலைப்படுத்தப்படுவதோடு தேவையற்ற களைகள் முளைப்பதில்லை என்றும், கொள்ளு விதைத்து அதன்பின் மரவள்ளிக்கிழங்கை பயிர் செய்வதால் மகசூல் நன்றாக உள்ளது என்றும் கூறுகிறார்.

இயற்கை முறையில் பயிர் செய்வதால் கிழங்கு பெரிதாக வருகிறது என்றும் கூறுகிறார்.

சாதாரணமாக மரவள்ளிக் கிழங்கை 9 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். இதற்குமேல் தாமதமானால் கிழங்குகள் முற்றி வேர்கள் தடித்துவிடும். அதை சிப்ஸ் செய்யவோ, ஜவ்வரிசி செய்வதற்கோ விற்கஇயலாது.

ஆனால், "இயற்கை முறையில் சாகுபடி செய்யும் கிழங்குகள் 13 மாதங்கள் ஆனாலும் வேர் முற்றுவதில்லை. இதனால் அறுவடை செய்ய ஓரிரு மாதங்கள் தாமதமானாலும் விற்பனையில் பாதிப்பில்லை" என்று கூறுகிறார்.

நான்தான் சொன்னேன் இல்லீங்கோ... நம்ம சாமிநாதன் அண்ணா கெட்டிக்காரருனு! எப்படி மரவள்ளியையும் கொள்ளையும் மாத்தி மாத்தி போட்டு ஒரு புது டெக்னிக் கண்டுபிடிச்சிருக்காரு பாருங்கோ!

"விதைகரணை"

கிழங்குகள் அறுவடையான பின் மரவள்ளித் தண்டின் நுனியை கழித்து 3 முதல் 4 கணுக்கள் உள்ள கரணையாக வெட்டி 20 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டி ஓலையால் மூடி நிழலில் வைக்கவேண்டும். இதனால் விதை கரணைகளை 30 நாட்கள் வரை பாதுகாக்க முடியும்.

கரணைகளை பச்சையாக நடுவதனால் முளைப்புத்திறன் குறைவதாகவும், 10 நாட்கள் இப்படி கட்டி வைத்த கரணைகளின் முளைப்புத்திறன் நன்றாக இருப்பதாகவும் கூறுகிறார்.

"இல்லை பூச்சி தொல்லை"

பொதுவாக மரவள்ளிப் பயிரை கள்ளிப்பூச்சி எனப்படும் மாவுப்பூச்சி தாக்கும். ஆனால் இயற்கை முறையில் பயிர் செய்வதால் கள்ளிப்பூச்சி தாக்குதல் இல்லை என்று கூறுகிறார்.

கடந்த ஆண்டு மரவள்ளிகிழங்கு ஏக்கருக்கு 30 டன் மகசூல் கிடைத்தது என்றும், தற்போது மழை மிக குறைவாக இருந்தபோதும் 70% செடிகள் வரை பிழைத்துள்ளன என்றும் கூறுகிறார்.

நம்ம சாமிநாதன் அண்ணா சொல்றது ரைட்டுதாங்ணா, இயற்கை விவசாயத்துல வளர பயிர்களுக்கு பூச்சி தாக்குதல சமாளிக்குற சக்தி அதிகமுங்க! இந்த கள்ளிப்பட்டி கலைவாணி அதைய நல்லா தெரிஞ்சு வச்சிருக்குறதனாலதானுங்க பாலேக்கர் ஐயா வழியில இயற்கை விவசாயத்த கடைபிடிக்குறேன். எங்க ஊரு கோபிக்கு ஒருநாள் வாங்க நிலத்த காட்டுறேன். இப்போ சாமிநாதன் அண்ணா சொல்றத கேப்போம்!

தென்னையில் ஊடுபயிராக வாழை உள்ளது. வாழைக்கு மட்டும் தண்ணீர் விடுவதாகவும், தென்னைக்கு தனியாக தண்ணீர் விடுவதில்லை, வாழைக்கு விடும் தண்ணீரைத் தென்னையும் எடுத்துக்கொள்கிறது என்று கூறுகிறார்.

நேந்திரன் வாழையை தனியாகவும் பயிர் செய்துள்ளார். முதல் கட்டையில் காய்ப்பு நன்றாக உள்ளது. வறட்சியான பகுதியாக உள்ளதால் இரண்டாவது கட்டை வாழையில் காய்கள் சரியாக பிடிக்கவிலை, இலைகளை மட்டுமே அறுத்து விற்கிறேன், இதன் மூலம் ஓரளவு வருவாய் வருகிறது என்று கூறுகிறார்.

‘இடிக்குற வானம் பெய்யாது, குலைக்குற நாய் கடிக்காது’னு எங்க ஊர்யிருக்குற பெரிய வீட்டு ஆத்தா ஒரு சொலவடைய அடிக்கடி சொல்லுவாங்கோ! அதுமாரி பாருங்க சாமி இந்தவருசம் மழையே இல்லாம போச்சுது! தமிழகமே வறட்சியாய் கெடக்கும்போது சாமிநாதன் அண்ணா இந்த அளவுக்கு ரோசன பண்ணி விவசாயம் பண்றாருன்னா நம்ம கண்டிப்பா பாராட்டனுமுங்க!

"ஜீவாமிர்தம்"

அனைத்து பயிர்களுக்கும் ஜீவாமிர்தம் மட்டுமே விடுகிறார். ஜீவாமிர்தம் செய்யும்போது சர்க்கரை செலவை குறைப்பதற்காக அழுகிய வாழைப்பழங்களை பயன்படுத்துவதாகவும், சொட்டுநீர் குழாய்மூலம் பாசனத்துடன் ஜீவாமிர்தத்தையும் கலந்து விடுவதாகவும், வென்சுரி இல்லாமல் ஜீவாமிர்தத்தை வடிகட்டி பாசனநீரில் கலந்துவிட எளிமையான ஒரு வழிமுறையை அவரே செயல்படுத்தியுள்ளதையும் தெரிவித்தார்.

விவசாயத்திற்கான வரவு செலவுகள் அனைத்தையும் எழுதி வைத்திருக்கிறார். “உழுதவன் கணக்கு பார்த்தால் தான் உழைப்புக்குமேல் மிஞ்சும்” என்ற புதுமொழிக்கேற்ப, இயற்கை விவசாயிகள் அனைவரும் விவசாயத்துக்கான வரவு செலவுகளை எழுதி வைப்பது அவசியமாகும் என்பதையும் தெரிவித்தார்.

இந்தவாட்டி இந்த கலைவாணி பழமொழி சொல்றதுக்குள்ளார சாமிநாதன் அண்ணாவே ஒரு பழமொழிய சேத்து சொல்லிட்டாருங்ணா! அளக்குற நாழி அகவிலை அறியுமான்னு சொல்லுவாங்க எங்க ஊர்ல... அதுமாதிரி இந்த விவசாயிங்க படுற கஷ்டம் சொகுசா ஏசியில உக்காந்துகிட்டு கம்யூட்டர் டப்பாவ தட்டுற பிள்ளைகளுக்கு எங்க தெரியுது?! அதானுங்க எங்க வீட்டு பிள்ளைகள இப்பவே வயலுக்கு கூட்டிவந்து பழக்கப்படுத்துறோம்!

2015 டிசம்பரில் ஈஷா நடத்திய ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய வகுப்பு நல்ல சூழ்நிலையில் அமைதியாக நடைபெற்றதால், பாலேக்கர் ஐயா கூறிய விஷயங்களை தன்னால் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது எனவும், அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டு செய்யப்பட்டிருந்தன என்பதையும் நினைவு கூர்ந்த திரு.சாமிநாதன் அவர்கள், ஈஷாவின் இந்தப் பணி தொடர வேண்டும் என்று சொல்லி விடைபெற்றார்.

தொடர்புக்கு: திரு. சாமிநாதன் -9442570699

'பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1