கைப்பிடித்து பள்ளிக்குக் கூட்டிச் செல்வது முதல் பொருத்தமான வரன்தேடி திருமணம் செய்துவைத்து பொறுப்புகளை நிறைவேற்றுவது வரை ஒரு மகளுக்கும் தந்தைக்குமான உறவு மிகவும் உணர்ச்சி மிக்க ஒன்றுதான்! ஆனால், மரணம் எனும் பிரிவு அனைவரும் தவிர்க்க இயலாதது. அதற்காக நாம் உடைந்து விட வேண்டுமா? தேவையில்லை என்று உணர்த்துகிறது இந்த அனுபவப் பகிர்வு!

புவனா, மயிலாடுதுறை

ஒரு குரு தன் பக்தனுக்கு அதிகபட்சமாக என்ன கொடுக்க முடியும்? பேரானந்தம், பரிசுத்தமான அன்பு, தெளிவான வாழ்க்கை சூழல்.. இன்னும் என்னென்னவோ தரலாம். ஆனால் மரணம் கற்றுத் தர முடியுமா? மரணம் பற்றிய தகவல்கள் தரலாம். அதனை உணர, எதிர்கொள்ள, அனுபவிக்க சொல்லித் தர முடியுமா? முடிந்ததே! என் வாழ்வில் உண்மைக்கு நெருக்கமாய் ஒவ்வொரு நொடியும் மரணத்தை உணர்ந்தேனே!

இதைவிட ஒரு அப்பாவிற்கு என்ன செய்துவிட முடியும்?!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என் பெயர் புவனா. மயிலாடுதுறையில் நல்லத்துக்குடி எனும் ஊரில் வாழ்கிறேன். கடந்த 2008ம் வருடம் ஈஷா வகுப்பில் சேர்ந்தேன். தொடர்ந்து வாலண்டியரிங் செய்வேன். என்னுடன் சேர்த்து எங்கள் வீட்டில் ஏழு பெண்கள். நான்தான் கடைசி பெண். இத்தனை பெண்பிள்ளைகள் இருந்தாலும், அனைவருக்கும் நல்ல கல்வியும், வாழ்க்கையும் கொடுத்தே தீர்வது எனப் பிடிவாதமாக வாழ்ந்து சாதித்தவர் என் அப்பா. இன்று அனைவரும் நல்ல நிலையில் வாழ்கிறோம்.

பூ மலர்வது போல் மிக மிக அழகாய், அற்புதமாய் ஒரு மரணம். அழக்கூட தோன்றாமல் அமர்ந்திருந்தேன்.

நடுத்தர குடும்பத்தில் வறுமையும், போராட்டமுமாய் வாழ்ந்த காலத்திலும்கூட நேர்மையும், துணிவும், ஒழுக்கமும் சொல்லிக் கொடுத்த அன்புத் தகப்பன். எல்லா சகோதரிகளுக்கும் திருமணமாகிவிட்டது. நான் அப்பா, அம்மாவுடன் வசித்தேன். அப்பாவுக்கு ஏழு வருடங்களாக ஆஸ்துமா இருந்தது. தொடர் மருத்துவ கண்காணிப்பில்தான் இருந்தார்.

மார்ச் 2010ல் அப்பா உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவமனையில் அனுமதித்து, நல்லபடியாக தேறி வந்தார். வீட்டுக்கு வந்ததும் நல்ல ஆரோக்கியமாக நன்றாகவே இருந்தார். எப்போதாவது திடீரென மூச்சிரைப்பு இருக்கும். இன்ஹேலர் வைத்தால் சரியாகிவிடும். அப்படியொரு சமயம், மூச்சிரைப்புடன் படுத்திருந்தார். எதிரில் அமர்ந்து சும்மா அப்பாவை பார்த்துக் கொண்டேயிருந்தேன். மனதுக்குள் சத்குருவுடன் பேச்சுவார்த்தை ஒடியது, இப்படி...

“சத்குரு... அப்பா ஒருவேளை தன் கடைசி காலத்தை நெருங்குகிறார் என்றால் அதனை எதிர்கொள்ள எனக்குச் சொல்லிக் கொடுங்கள். இதுவரை நான் நெருக்கமாக குடும்பத்திற்குள் எந்தவொரு மரணமும் பார்த்ததேயில்லை. மொத்த வாழ்க்கையையும் எங்களுக்காகவே அர்ப்பணித்த இந்த உயிர் கஷ்டமில்லாமல், தூக்கத்திலே பிரியணும். அதற்காக அப்பா தனியாக யாருமில்லாமல் (நாங்களும் தூங்கும்போது) போகக்கூடாது. நாங்கள் கூடவே இருக்கணும். அப்பா எந்த கஷ்டமுமில்லாமல் போகணும், பாத்துக்கங்க.” இவ்வளவுதான். சும்மா விளையாட்டா இப்படி 2 நிமிடம் யோசிச்சிட்டு விட்டுட்டேன்.

அதன்பிறகு 1 வாரம் நல்லவிதமாக போனது. திரும்பவும் உடல்நிலை சரியில்லை. மருத்துவமனை செல்ல பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை வெந்நீர் வைத்து குளிக்கச் சொன்னேன். தன்னால் குளிக்க முடியவில்லை என்றார். சரியென்று ஒரு கப் தண்ணியெடுத்து அப்பா மேல் ஊற்றி நெஞ்சில் கை வைத்து நீவிவிட்டேன். அந்த விநாடியே சுரீரென்று என் நெஞ்சில் ஒரு வலி, அவ்வளவுதான். அதன்பிறகு என் செயல்களுக்கு நான் சத்தியமாக பொறுப்பே இல்லை. இனி அப்பாவுக்கு நாட்களில்லை, நேரங்கள் மட்டுமே என ஆழமான ஒரு எண்ணம் தீவிரமடைந்தது. புதன் காலை நல்லவிதமாக பேசிக் கொண்டு அப்பா அருகில் இருக்கும்போதே நான் போன் டைரி எடுத்து சொந்தக்காரர்கள் லிஸ்ட் எழுதினேன். தனியாளாக இருக்கிறோம், எதற்குமே அந்த நேரத்தில் அலையக்கூடாது என்று ஒரு எண்ணம்.

நம்புவீர்களா தெரியவில்லை. அடுத்த 2 நாட்களில் ஐஸ் பெட்டி, அமரர் ஊர்தி வாகனம் என அனைத்து போன் நம்பர்களையும் வாங்கி விட்டேன். வியாழன் இரவு 12 மணி முதல் 12.30 மணி வரை அப்பா அருகில் அமர்ந்து முதுகைத் தடவிக் கொடுத்தேன். உள்ளங்கைகளை நீவிவிட்டேன். பயப்படாதீங்க அப்பா, உங்களுக்கு ஒன்றுமில்லை என்று சொல்லி பேசிட்டிருந்தேன். நீ போய் தூங்கு என நன்றாகவே பேசினார்.

திடீரென 3 மணிக்கு விழிப்பு வந்தது. (படுத்தால் உலகமே அழிந்தாலும் தெரியாத அளவுக்கு உறங்குவது என் பழக்கம்) அப்பா எழுந்து உட்கார்ந்திருந்தார். பாத்ரூம் போகிறேன் என எழுந்தவரால் நடக்க முடியவில்லை. மிக லேசான சுவாசம். அம்மாவிடம், “அம்மா! அப்பா... கிளம்பத் தயாராகிவிட்டார்ம்மா!” என்றேன். உடனேயே தரையில் காவி வேட்டியை விரித்து (அப்பா பிரியமாக காவி வேட்டி கட்டுவார்) வடக்கு பக்கம் தலையிருப்பதுபோல் படுக்க வைத்து (காட்டுப்பூவில் படித்திருக்கிறேன்) துளசி தண்ணீர் கொடுத்தோம்.

ஈஷா விபூதி எடுத்து, உடல் முழுவதும் சக்கரங்களில் பூசினேன். சத்குரு, தியானலிங்கம் இருவரது போட்டோ எடுத்து அப்பா கண்ணில்படும்படி எதிரில் வைத்து 3.15 மணியிலிருந்து ‘ப்ரம்மானந்த ஸ்வரூபா...’ சொல்ல ஆரம்பித்தேன். 4.45 மணிக்கு உட்சாடனை போதுமென்று நிறுத்த சொல்லி கை காட்டினார். பிறகு ஆழ்ந்த உறக்கம். அசையாமல் அருகிலேதான் அமர்ந்திருந்தேன். 5.27 மணிக்கு புரண்டு படுத்து, மிக ஆழமானதொரு மூச்சு, அவ்வளவுதான். பூ மலர்வது போல் மிக மிக அழகாய், அற்புதமாய் ஒரு மரணம். அழக்கூட தோன்றாமல் அமர்ந்திருந்தேன்.

உடன் எழுந்து, பரபரவென வேலைகள் செய்ய ஆரம்பித்துவிட்டேன். மா க்ஷேமா விடம் தகவல் சொன்னேன். அவர்கள் ‘ப்ரம்மானந்த ஸ்வரூபா’ விடாமல் தொடர்ந்து உச்சரிக்கச் சொன்னார்கள். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எங்கள் கிராமத்திலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள இடுகாட்டுக்கு செல்ல வாய்ப்பே இல்லை, இருந்தாலும் இந்த உயிரின் கடைசி விநாடிவரை கூடவேயிருப்பது என்பதில் உறுதியாக இருந்தேன். அமரர் ஊர்தியில் அப்பாவின் அருகிலேயே அமர்ந்து ஒன்றரை மணிநேரம் தீவிரமான மந்திரத்துடனேயே சென்று, தகனம் வரை இருந்து முடித்துவிட்டு வந்தேன்.

இது எப்படி சாத்தியம்? 2 வருடமாகியும் எனக்கு நேர்ந்த அனுபவங்களை என்னாலேயே நம்பமுடியவில்லை. குருவின் எல்லையில்லாத்தன்மை இவ்வளவு பரந்து விரிந்த வானம் போன்றதா? என் வாழ்வில் நான் சந்தித்த முதல் மரணமே எனக்கு இப்படியொரு அனுபவமா? இத்தனைக்கும் குருவிடம் இது வேண்டுமென்று பணிந்துகூட கேட்கவில்லையே... சும்மா விளையாட்டாக பேச்சு வார்த்தைதானே நடத்தினேன். அதற்கே அச்சு பிசகாமல் அப்படியே நடத்திக் காட்டினாரே! இப்படியொரு பெருங்கருணையா?

இத்தனைக்கும் குரு வேண்டும் எனும் எண்ணமோ, ஏக்கமோ கூட எனக்கு இருந்ததில்லை. ரொம்பவும் சாதாரண, முரட்டு முட்டாள் நான். எனக்கு ஏன் வாழ்வில் இவ்வளவு பெரிய கொடை? இந்த பெருங்கருணைக்கும் நான் ஏதாவது திரும்ப செய்ய முடியுமா? நன்றியுணர்ச்சியை வெளிக்காட்டவும் கூட வழி தெரியவில்லையே! ரொம்ப பிரியமான தந்தைக்கு தேவையானதை என் மூலம் நடத்திய கருணைக் கடலான சத்குரு எனக்கு யார்? குருவா, கடவுளா, எல்லாமுமா? அதெல்லாம் எனக்கு விளங்கவில்லை. இப்போதைக்கு என் இன்னோர் தகப்பன் சத்குருதான்.
தேங்க்ஸ்ப்பா...!