ஈஷாவும் நானும் - திருமதி. சுஜாதா
திருமதி சுஜாதா - திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர். ஈஷா தனக்கு அறிமுகமான விதம், ஈஷா வகுப்புகளில் கலந்துகொண்ட போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சத்குருவை நேரடியாக சந்தித்த நிகழ்வு ஆகியவற்றை நம்முடன் இங்கே பகிர்ந்துகொள்கிறார்...
 
 

முன்னாள் மேயர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

திருமதி சுஜாதா - திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர். ஈஷா தனக்கு அறிமுகமான விதம், ஈஷா வகுப்புகளில் கலந்துகொண்ட போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சத்குருவை நேரடியாக சந்தித்த நிகழ்வு ஆகியவற்றை நம்முடன் இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

திருமதி. சுஜாதா:

10 வருடங்களுக்கு முன்பு திருச்சியில் ஈஷா யோகா வகுப்பு நடைபெற்றது. அப்போது பதிவுசெய்யச் சென்றேன். 13 நாட்கள், ஒரு நாள் கூட விடாமல் வர வேண்டும் என்று சொன்னார்கள். பொது வாழ்வில் பல பணிகளில் ஈடுபட்டிருந்த நான், ‘இதெல்லாம் நமக்குச் சரிப்படாது’ என்று வந்துவிட்டேன். ஆனால், ஈஷா வகுப்புகளில் கலந்துகொண்டு பலர் என்னிடம் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது ஏக்கமாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் ஈஷா வளர்ந்துகொண்டே போனது, அதில் பயன்பெற்றவர்களின் அனுபவங்களும் நான் அறிய நேர்ந்தது. எனவே அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்தேன்.

எதற்கெடுத்தாலும் கோபம், வெறுப்பு, மனக்கவலை, தோல்வி பற்றிய பயம் இவற்றை எல்லாம் உடைக்க முடிந்தது.

2007 ஏப்ரல் மாதம் என் பையனுக்குக் கோடை மாத விடுமுறை வந்தபோது கோயம்புத்தூருக்குச் சென்றோம். ஊருக்குத் திரும்பும் வழியில் ஈஷா யோக மையம் சென்று தியானலிங்கத்தைத் தரிசித்து வந்தேன். அப்போது இருந்தே சத்குருவை நேரில் பார்க்க ஆசைப்பட்டேன். எதற்காகச் சொல்கிறேன் என்றால் தியானலிங்கத்தின் சக்திநிலை நான் விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சி நிலைக்கு என்னை எடுத்துச் சென்றது.

சத்குருவைப் பார்ப்பதற்கு முன்னால் ஈஷாவைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம் என உணர்ந்தேன். இந்த நினைவை எனக்குள் நான் தீவிரமாக்கிய உடனேயே ஈஷா யோக வகுப்பு பற்றிய ஓர் அறிவிப்பை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. மேலும் 13 நாட்கள் வகுப்பை தற்போது 7 நாட்கள் வகுப்பாகக் குறைத்திருந்தார்கள். எனவே இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று சேர்ந்தேன். வகுப்பு நடந்த அந்த ஏழு நாட்களும் என் வாழ்வின் வித்தியாசமான, அற்புதமான, அருமையான, திருப்புமுனையான நாட்கள். பல நிலைகளில் என் வாழ்க்கைப்போக்கு மாறுவதற்குக் காரணமாக இருந்த நாட்கள்.

சத்குருவின் அழுத்தமான, யாராலும் மறுக்க முடியாதபடி இருந்த, அந்தக் கருத்துக்கள் என் மனதில் கல்வெட்டுக்கள் போலப் பதிந்தன. வகுப்பில் அவரது கருத்துக்களை ஒலி பரப்பினார்கள். அவரை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் அவரது குரலைக் கேட்பதே ஆனந்தமாக இருந்தது. யோகா என்றால் வெறுமனே உடற்பயிற்சி என்று நினைத்திருந்தேன். ஆனால், யோகா என்பது ஒருவர் தனது வாழ்க்கையைப் புதிதாகத் திரும்பிப்பார்க்க உதவுவது என்றும் ஒருவரை எப்போதுமே புத்துணர்ச்சியாக இருக்கச் செய்வது என்றும் உணர்ந்தேன்.

என்னுள் பல நாட்களாக இருந்த பிரச்னைகளுக்கும் தற்போது சுலபமான, தெளிவான தீர்வுகளைக் காண முடிந்தது. எதையும் ஏற்கவும், மற்றவர்களைப் புரிந்துகொள்ளவும் முடிந்தது. மேலும் வகுப்புகளிலும் ஈஷாவின் திட்டங்களிலும் தன்னார்வத் தொண்டராக இருந்து தன்னலமற்றுச் சேவை செய்தது என்னை மிகவும் கவர்ந்தது. எனவே, தொடர்ந்து நடந்த ஈஷா வகுப்புகளில் முடிந்த அளவு நானும் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டு வந்தேன்.

முதல் வகுப்பே என்னை மிகவும் மாற்றியதால், அடுத்த வகுப்பான பாவஸ்பந்தனா எப்படியும் செய்ய வேண்டும் என்று காத்திருந்தேன். மேலும் அந்த வகுப்பில் ஏற்கனவே பங்கேற்றிருந்தவர்கள், தங்கள் வாழ்க்கையில் அந்த வகுப்பு ஏற்படுத்திய மாற்றங்களை விவரித்தது என் ஆர்வத்தை மிகவும் தூண்டியது. ஆகஸ்ட் மாதம் பாவ ஸ்பந்தனாவில் பங்கேற்றேன். என் வாழ்க்கையிலும் அந்த வகுப்பு பலவகைகளில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. பொதுவாக நான் வீட்டைவிட்டு தனியாகச் செல்வதென்றாலே பயப்படுவேன். அனைத்தையும் மாற்றியது அந்த மூன்று நாட்கள். மிகவும் அற்புதமான நாட்கள்.

அன்று முதல் இன்று வரை நான் ஈடுபடும் எதிலும் வெற்றிதான் காண்கிறேன்.

எதற்கெடுத்தாலும் கோபம், வெறுப்பு, மனக்கவலை, தோல்வி பற்றிய பயம் இவற்றை எல்லாம் உடைக்க முடிந்தது. பயிற்சி நடைபெற்ற நாட்களில் சத்குரு சொன்ன ஒவ்வொரு விஷயமும் எனக்கு உண்மையாக நடந்தது. உன்னை முழுமையாகக் கொடுக்கும்போது, நீ நினைத்ததை எல்லாம் சாதிக்கலாம் என்ற சத்குருவின் கருத்தை எடுத்துச் சொன்னார்கள். வகுப்பில் ஒரு கேள்வியும் கேட்டார்கள். உனக்கு என்ன ஆசை. எவ்வளவு ஆசை. எவ்வளவு பெரிய ஆசை என்று. விளையாட்டாக நான் சொன்னேன். “50 லட்சம் ரூபாய் கடனாகக் கிடைத்தால் போதும்”. வகுப்பு எடுத்தவர், “இது போதுமா?” என்றார்கள். “இல்லை 1 கோடி, வசதியான வீடாகக் கட்ட வேண்டும்” என்றேன். அதை நினைத்தால் இப்போதும் எனக்கு பயமாகவும் வியப்பாகவும் இருக்கிறது.

நிகழ்வு நடைபெற்றது 28/08/2007. பயிற்சி முடிந்த மூன்று மாதங்களுக்குள்ளேயே நானே எதிர்பாராதவிதமாக 24/11/2007 அன்று வீடு கட்டுவதற்காக இடம் பதிவுசெய்தேன். இது இன்றளவும் நான் ஆச்சரியப்படும் விஷயம். ஏனென்றால், அரசியல்வாதி என்றால் வங்கியில் கடன் தரமாட்டார்கள். என்னைத் தெரிந்து அழைத்து, கடன் வாங்கி, வீட்டையும் கட்டி விட்டேன்.

அடுத்து திருச்சியில் ஆனந்த அலை சங்கமம் சத்சங்கம் நடைபெற்றபோது சத்குருவை நேரில் சந்தித்துப் பேச முடிந்தது. அன்றைய சந்திப்பில் என் அரசியல் வாய்ப்புகள், இழப்புகளைப் பற்றி சத்குருவிடம் கூறினேன். சத்குரு என்னை ஆசிர்வதித்தார். அன்று முதல் அவர் சொன்ன ஒரு கருத்தை மட்டும்தான் இன்று வரை நினைக்கிறேன். அந்தக் கருத்துதான் இன்றைக்கு என்னை இந்த அளவுக்கு உயர்த்தி வைத்துள்ளது. பெருமைக்காகச் சொல்லவில்லை. நான் ஆசைப்பட்ட போதெல்லாம் கிடைக்காதது, எதிர்பாராமல் நடந்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிகம் பேசக்கூடிய என்னை அமைதியாக இருக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

மற்ற ஆன்மிகவாதிகள் ஆசையை ஒழித்தால் மோட்சத்தை அடையலாம் என்று கூறியபோது, சத்குரு, ஆசையை ஒழிக்க நினைப்பதே ஒரு பேராசைதானே. எனவே ஆசைப்படுங்கள், முழுமையாக ஆசைப்படுங்கள் என்று சொன்னார். இந்தக் கருத்து எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வருகிறது.

பொது வாழ்வில் எனக்குக் கிடைத்திருக்கும் தற்போதைய வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு நன்மைகள் செய்ய சத்குருவின் ஆசிகள் எனக்கு எப்போதும் வேண்டும்!

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1