தான் ஒலி வடிவமைப்பு செய்த ‘Slumdog Millionaire’ படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவர் ரெசுல் பூக்குட்டி. சிறு அசைவுகளுக்கும் சுரம் பிரிக்கும் சவுன்ட் என்ஜினியர். அவருக்கு பிரபஞ்சத்தின் சூட்சும ஒலியை ஈஷா யோகா நிகழ்ச்சி அறிமுகப்படுத்த, அவரது அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...

Question: ஆன்மீக தேடல், குருமார்கள் இவற்றில் உங்களுக்கு அனுபவம் உண்டா?

ரெசுல் பூக்குட்டி:

முன்னமே, நிறைய குருமார்களை பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. நிறைய படித்திருக்கிறேன். அவர்களின் கருத்துகள் என்னுள் புது ஒளியை பாய்த்தது. ஒருவிதத்தில் பார்த்தால், பள்ளி வாழ்க்கைக்குபின், வழக்கமான பாதையை விடுத்து, புதிய விஷயங்களை தேர்ந்தெடுக்க எனக்கு அது உதவியது.

Question: உங்கள் திரைத்துறை பயணம் பற்றி சொல்லுங்களேன்...?

ரெசுல் பூக்குட்டி:

கிட்டத்தட்ட 15, 16 வருட மிகக் கட்டுக்கோப்பான கல்விமுறையிலிருந்து நான் திரைக்கல்லூரிக்கு சென்றேன். திரைக்கல்லூரியில் நான் செலவழித்த அந்த 3 வருடங்களில் என் வாழ்வில் மக்கள் நுழைந்தனர், உணர்வுகள் ஏற்பட்டது, திரைத்துறை ஜாம்பவான்கள் தங்கள் கலைப்படைப்புகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு காரணமாக முக்திநிலையை எட்ட முயல்வதெல்லாம் எனக்குள்ளும் ஆழமாய் சென்றது. எனக்கும் இவற்றிற்குள் தீட்சை கிடைத்தது.

மூன்று வருட திரைத்துறை கல்வி என் அடிப்படை வாழ்வை முழுவதுமாக மாற்றியது. அதன்பின், திரையுலகத்திற்குள் நுழைந்தேன். நான் திரையுலகிற்கு தேவைப்படவில்லை. ஆனால், நான் திரைத்துறைக்கு தேவை என்பதை அனைவருக்கும் உணர்த்த, என்னையே நான் உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. கடந்த பதினைந்து வருட காலமாக அதற்காக உழைத்தேன். இன்று என்னை ஒரு சாதனையாளன், கடின உழைப்பாளி என அனைவரும் அழைக்கிறார்கள். அது அவர்களின் பார்வை. என்னைப் பொருத்தவரையில் வேலையையும் வாழ்க்கையையும் நான் பிரிப்பதில்லை. வெவ்வேறாக பார்ப்பதில்லை.

Question: இந்த வகுப்பில் சத்குருவை சந்தித்த அனுபவம் எப்படியிருந்தது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ரெசுல் பூக்குட்டி:

இங்கே வந்தபொழுது பலவிதமான முன் அறிவோடு வந்தேன். இதுநாள் வரை நான் கேள்விப்பட்டிருந்த, படித்து தெரிந்து வைத்திருந்த, மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருந்த “குரு” என்னும் மனபிம்பத்தை தாங்கியவாறே அவரை சந்தித்தேன். “குரு” என்னும் மனிதருக்கு முன் நான் அமரப்போகிறேன் என்பதை முதலில் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அவர் பேசப் பேச கேட்டேன், கவனித்தேன். அவருடைய பெரும்பாலான சொற்கள் இனிமையாக இருந்தது, அனுபவிக்க சுகமாக இருந்தது. என்னைத் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம், அவர் என் மனதில் இருப்பதை குத்திவிடுவதுபோல் இருந்தது. என் ஆழ்மனதிற்குள் பொதிந்திருந்த சில உண்மைகளை அவர் கிளறிவிட்டார்.

Question: ஈஷா யோகா வகுப்பு செய்ய வேண்டுமென எண்ணம் ஏற்பட்டது எப்படி?

ரெசுல் பூக்குட்டி:

இந்த வகுப்பிற்கு நான் வந்த விதமே மிக சுவாரசியமானது. ஈஷா துறவி ஒருவர் என்னைச் சந்தித்து, எனக்கொரு வீடியோ காண்பித்தார். சத்குரு சொல்வதை நான் கவனித்தேன். அவர் பேசுவது நதியோட்டம் போல் சரளமாய் இருந்தது. அவரிடம் எனக்கு மிகப் பிடித்த ஒரு விஷயம் அவரது சப்தம். அவரது ஒலியில், கேட்போரை வசீகரிக்கும் அந்தத் தொனி எனக்கு மிகப் பிடித்திருந்தது. தன் அனுபவத்தில் உள்ளவற்றை மட்டுமே பேசுகிறார் என்பது புரிந்தது. அவரது பேச்சு கட்டிற்குள் இருந்தது என்னை மிகவும் கவர்ந்த ஒரு அம்சம் இது. வகுப்பு செய்ய முடிவு செய்தேன்.

Question: வகுப்பில் உங்களை ஈர்த்த சில அம்சங்களைப் பற்றி சொல்ல முடியுமா?

ரெசுல் பூக்குட்டி:

ஒலி நிர்மானிக்கும் தொழிலில் இருக்கும் என்னுள், சத்குருவின் ஒலி எளிதாக ஊடுருவிவிட்டது. தான் செய்பவற்றில் அவருக்குள் தெளிவு இருக்கிறது. தான் சொல்வது என்ன என்று அவருக்கு தெரிகிறது. அதுமட்டுமல்ல, அவர் tech savvy ஆகவும் இருக்கிறார். வாழ்வின் அத்தனை அம்சங்களையும் அறிவியல்பூர்வமாக அவர் அலசுகிறார். யாரோ ஒருவர் புராணங்களில் எழுதி வைத்துவிட்டு போனதை அவர் பேசுவதில்லை, உங்களுக்கு தெரிந்த விஷயங்களையும் அவர் பேசுவதில்லை.

உதாரணத்திற்கு, சார்ல்ஸ் டார்வினின் கூற்றை அவர் தசாவதாரத்தோடு ஒப்பிட்டு விளக்கியது அற்புதம். கூலாக இருந்தது. குறிப்பாக, வகுப்பில் ஒலியைப் பற்றி அவர் பேசியதை நான் அதிகமாக ரசித்தேன். அவர் சொல்வதை, நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஒலித்துறையிலேயே இருப்பதால், இதனை அனுபவப்பூர்வமாக உணர்ந்த மக்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களுடன் வேலை செய்திருக்கிறேன். இந்தப் பிரபஞ்சத்தின் சப்தத்தை ஒரு வகையில் உணர்ந்திருக்கிறேன். அவை எல்லாவற்றையும் அவர் மிக அழகாக எங்களுக்கு வகைப்படுத்தி சொன்னார்.

அவர் பேசுவது அனைத்தும் குறிப்பால் எனக்கு ஏதோ சொல்வது போலவே இருந்தது. அவரது பேச்சு, எனக்குள் அனுபவமாய் இருந்த சில விஷயங்களை இன்னும் ஆழமாய் தெளிவுபடுத்தியது. எனக்கு ஆன்மீக குருமார்களைப் பிடிக்காது. இந்த குருமார்கள் சாதாரண மனிதர்களை தாழ்ந்தவர்களைப்போல் நடத்துவது எனக்கு அறவே பிடிக்காது. மனிதர்கள் சராசரி வாழ்க்கையில் சிக்கி, அதனை வெட்டியாக செலவழிப்பது போன்ற உணர்வினை இவர்கள் நமக்கு ஏற்படுத்திவிடுவது உண்டு.

ஆனால், சத்குரு இதில் மிகவே மாறுபட்டவர். இன்றைய காலகட்டத்தில் வாழ்பவர்களுடைய மனநிலைக்கு ஏற்றவாறு அவர் இதமாய் விவரிக்கும் விதம் அலாதியானது. எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தில் அவரது ஆளுமை, அணுகுமுறை, அந்த விஷயத்தை அவர் நமக்கு கொண்டு வந்து தரும் விதம் மிகவும் மதிநுட்பமுடையதாய் இருக்கிறது. அவருடைய விளக்கங்கள் எனக்கு பிடித்திருந்தது. இவர் போன்றவர்கள் சொல்லாவிட்டால் பல அம்சங்கள் நமக்கு தெரியாமலே போய்விடும். எனக்கு அவருடைய உள்ளம் பிடித்திருந்தது. அவர் சிந்திக்கும் விதம் பிடித்திருந்தது. அவர் வகைப்படுத்தி பேசும் விதம், அனைத்திலும் உள்ள காரணத்தினை சொல்லும் விதம் பிடித்திருந்தது. அவரது மனம் அறிவியல் மனம்.

Question: இந்த வகுப்பில் உங்கள் மீது தாக்கம் ஏற்படுத்திய ஒரு விஷயத்தைப் பற்றி சொல்ல முடியுமா?

ரெசுல் பூக்குட்டி:

நான் முதலில் படித்தது இயற்பியல். அதனால், ஒரு குறிப்பிட்ட காலம்வரை, வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் காரணத்தினை தேடும் மனம் எனக்கு உண்டு. என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பது உப்பு சப்பற்ற ஒரு கோட்பாடு மட்டுமே. என்னால் கைநீட்டி இதுதான் கடவுள் என்று காட்ட முடியுமா என்ன? இதனை இன்னொரு விதத்தில் பார்த்தால், இது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. பிறகு என்னுடைய அறிவு இதனை தத்துவங்கள், கோட்பாடுகள் சார்ந்து புரிந்துகொள்ள முற்பட்டது.

ஆனால், சத்குரு இவற்றை கையாண்ட விதம், சீராக இருந்தது. நவீன மனது கேட்கும் கேள்விகளுக்கு அவரிடம் பதில்கள் இருந்தன. 3 நாட்கள் சத்குருவுடன் நடந்த அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் என் மனது அவரை சிரம் தாழ்த்தி வணங்கியது.

Question: ஷாம்பவி தியான அனுபவத்தை பற்றி கூறுங்களேன்...?

ரெசுல் பூக்குட்டி:

எல்லோருக்கும் மிக அற்புதமாக அது வேலை செய்கிறது. இப்போதுதான் தீட்சை பெற்றிருக்கிறேன். அடுத்த 6 மாதங்களுக்கு இதனைத் தொடர்ந்து செய்வேன். என் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறதா எனப் பார்க்கப் போகிறேன்.

நிகழ்ச்சியின் முடிவில் சத்குரு எல்லோருக்கும் தாமரைப் பூவை கொடுத்தார். அதைக் கண்ட பொழுது இவர் மிக அற்புதமான மனிதர் என்று எனக்குள் ஆழமாய் உரைத்தது. அவர் அன்பானவர், கருணையானவர். அவரிடமிருந்து நான் தாமரை மலரை பெற்றபோது... ஒருவேளை எனக்கு எதிலாவது தடங்கல் ஏற்பட்டால், அவருக்கு ஒரு அழைப்பு விடுத்தால் போதும், அவர் என்னை அதிலிருந்து விடுவிப்பார் என்று உறுதியாக தோன்றியது. தாமரையைப் பெற்றுக்கொண்ட அதே இடத்திலிருந்து முழு மனதோடு சொல்கிறேன்... இங்கு எனக்கு கிடைத்த அனுபவம் மிக ஆழமானது. மிக மிக ஆழமானது.