நிறுவனர் www.shaadi.com

யோகத்தை இன்று குக்கிராமம் முதல் மேலை நாட்டு நகரம் வரை ஈஷா விதைத்து வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, பெரும்பாலான திருமணங்களை நிச்சயிக்கும் ஷாதி.காம் என்னும் நிறுவனத்தின் நிறுவனரான அனுப்பம் மிட்டல் அவர்களுக்கு ஈஷா யோகா எப்படிப்பட்ட மாற்றத்தை விளைவித்தது? அவரின் அனுபவத்திலிருந்து சில..

யோகாவுடனான உங்கள் அறிமுகம் எப்படி இருந்தது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான் பல வருடங்களாக யோகாவை பழகி வருகிறேன். ஆனால், இதுநாள் வரை எதற்காக செய்கிறேன், ஏன் செய்கிறேன் என்று யோசித்து கூட பார்த்ததில்லை. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு என் பார்வை மாறி இருக்கிறது.

எது போன்ற மாற்றம் அது?

நம் விரல்களை வைத்து கொள்ளும் முறை, நாம் உட்காரும் முறை இவைகளால் நம் உடலுக்குள் நிகழும் மூச்சு எந்தவிதமாக நிகழும் என்கிற அறிவியல் காரணங்கள் என சத்குருவின் விளக்கங்கள் என்னை வேறு விதமான கோணத்தில் சிந்திக்க வைத்துவிட்டது.

உங்கள் உள்நிலையில் ஏதேனும் மாற்றங்கள்?

காரணம் தேடும் என் அறிவு ஆரம்பத்தில் அதிகமாகவே செயல்பட்டது. சத்குருவின் உரை அதை அசைத்துவிட்டது. இதற்கு முன் எத்தனையோ அனுபவங்கள், ஆனால் சத்குரு ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் தரும் விளக்கங்கள் என் மனதில் எழும் கேள்விகளுக்கு விடையாக அமைந்துவிடும். அவரிடம் யாரும் வாதிட்டு ஜெயித்து விட முடியாது. அங்கே நிகழ்ந்த அறிமுக உரையிலேயே ஒரு ஆன்மீகப் பயணத்தை ஆரம்பத்தை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்.

ஷாம்பவி தியான தீட்சை பற்றி ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

தீட்சை கொடுத்தபோது எனக்குக் கிடைத்த அனுபவத்தைக் கூற வேண்டும்... நீண்ட நேரமாக உட்கார்ந்து இருந்ததால் முதுகில் வலி, அவ்வளவு நேரம் உட்கார்ந்து பழக்கம் இல்லை. எனக்குள் ஓடிக்கொண்டிருந்த பலவிதமான சிந்தனைகளுக்கு நடுவே ஷாம்பவி தீட்சை பெற்றேன். இது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் என்னை இரண்டாய் உடைத்து விடுவது போல் பல கலவர யோசனைகள் மறுபுறம். ஒரு வழியாக நானும் சத்குருவும் மட்டுமே அந்த அறையில் என்ற முடிவோடு அங்கே அமர்ந்தேன். அங்கு கொடுக்கப்பட்ட குறிப்புகளை பின்பற்றி அங்கே சும்மா அமர்ந்தபோது, நான் இந்தப் பிரபஞ்சத்தின் தாய் என்கிற ஒரு பெரும் சரணாகதி உணர்வு உண்டானது.

இதற்குமுன் இதுபோன்ற அனுபவத்தை நான் பெற்றதில்லை. இடையில் என்னை அறியாது ஒரு புன்னகை என் உதட்டில் வந்து உட்கார்ந்து கொண்டது. என் அறிவு என்னை கிண்டல் செய்து கொண்டே இருந்தது. “ஹேய் முட்டாள்! சிரிக்காதே எல்லோரும் உன்னை பார்க்கிறார்கள், ஒரு கோமாளியாகி விடாதே” என எச்சரித்துக் கொண்டே இருந்தது. அதையும் மீறி, புன்னகை பெருஞ்சிரிப்பாக வெடித்தது. அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தேன். வியர்த்தது, கண்ணீர் கன்னங்களில் வடிந்தது. பத்துப் பதினைந்து நிமிடம் சத்குருவை பார்த்தவாறே அமர்ந்திருந்தேன். என்னுள் அந்த அதிர்வு அடங்கிய பிறகுதான், வீட்டுக்குப் போக வேண்டும் என்ற உணர்வே எழுந்தது. வகுப்பில் அந்த மூன்று நாட்களாய் நிகழ்ந்த முன்னோட்டத்திற்கு ஒரு உச்சகட்ட அனுபவமாய் ஷாம்பவி தீட்சை அமைந்திருந்தது.

மலைத் தேனை ருசித்த மயக்கத்தில் திரு. மிட்டல் அவர்கள் இருக்க, அவரது அனுபவமும் கேட்பதற்கு தேனாய் இனித்தது.