திரு. ஸ்வரண் சிங் IAS - தமிழ்நாடு தொழில் துறை ஆணையர். ஈஷா யோகா வகுப்புகளில் கலந்துகொண்டதால், தன் மனைவிக்கு ஏற்பட்ட அபரிதமான மாற்றத்தைக் கண்டு, தானும் ஈஷாவில் இணைந்ததைப் பற்றியும், ஈஷா பயிற்சிகளால் தான் அடைந்த பலன்களைப் பற்றியும் இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஸ்வரண் சிங் IAS:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எங்களை சத்குருவுக்கு அறிமுகப்படுத்தியவரின் பெயரோ, அந்தத் தேதியோ நினைவில் இல்லை. 1998ல் ஈஷாவின் 13 நாள் வகுப்பில் என் மனைவி கலந்துகொண்டார். அது, சத்குரு அவர்கள் நேரடியாக நிகழ்த்திய கடைசி 13 நாள் வகுப்பு. அதை அவள் மிகவும் ரசித்ததோடு, கிட்டத்தட்ட ஈஷாவின் கொள்கை பரப்புச் செயலாளராகவே மாறிவிட்டார். எப்போதும் அதே பேச்சு. அவ்வளவு பிடித்திருந்தது அவளுக்கு. உண்மையில் அவள் சிந்திக்கும் விதத்திலிருந்து பலவற்றைக் கையாள்வது வரை அவளிடம் பயங்கர மாற்றம், முன்னேற்றம். இதைப் பார்த்து எனக்கும் அதன் மேல் ஆசை உருவாகியது.

ஞாயிறு உட்பட தினமும் குறைந்த பட்சம் 18 மணி நேரம் களைப்பில்லாமல் அலுவலக வேலையைப் பார்க்க முடிகிறது.

எனக்குச் சமயம் வாய்த்தது 2001-ல் சென்னை மகாபலிபுரத்தில் சத்குருவுடன் மூன்று நாள் வகுப்பில் கலந்துகொண்டேன். பலவிதத்தில் அது என் கண்களைத் திறந்தது. பொங்கிவரும் அந்த கடல் அலைகளுக்கு இடையில், அந்த 3 அழகான பகலும், அமைதியான இரவுகளும், வாழ்விற்கே அழகு சேர்த்தது. சத்குருவின் நகைச்சுவை உணர்வுடன் கூடிய கூர்மையான உரையும் முழு விவாதமுமாக என் வாழ்வின் புது அத்தியாயம் துவங்கியது. யோகாவை ஒரு முழுமையான விஞ்ஞானமாகச் சொல்லிக் கொடுத்தது எனக்குப் பிடித்திருந்தது. சில பிராணாயாமப் பயிற்சிகளும் க்ரியாக்களும் ஆசனப் பயிற்சியும் கற்றுக் கொண்டேன்.

உணவுமுறை பற்றி வகுப்பில் கூறியது முழுமையாக இருந்தது. அதன்படி உணவுமுறையில் மாற்றம் கொணர்ந்தால் பலன் கை மேல் இருந்தது. சொல்லிவிட்டேன், குட்பை அசைவத்துக்கு! 8 வருடமாகி விட்டது. பஞ்சாபிலும் இங்கேயும் என் குடும்பமும் சுற்றத்தாரும் அசைவமெடுத்துக் கொள்பவர்களாக இருப்பினும் நான் சுகமான சைவப் பிரியனாக இருக்கிறேன். டீ, காபி, குளிர்பானங்கள் போன்ற நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் எந்த உணவையும் எடுத்துக் கொள்வதில்லை. யோகா பயிற்சிகள் என் உடலையும் மனத்தையும் சோர்வில்லாமலும் அதிக சக்தியுடனும் இயங்க வைக்கின்றன. ஞாயிறு உட்பட தினமும் குறைந்த பட்சம் 18 மணி நேரம் களைப்பில்லாமல் அலுவலக வேலையைப் பார்க்க முடிகிறது. மனதளவில் சிறு ஆயாசம் கூட ஏற்படுவதில்லை. உடலின், மனத்தின் செயல்திறனைத் தூண்டி விட சூரிய நமஸ்காரப் பயற்சி ஆச்சரியமூட்டும் கருவியாக இருக்கிறது. சுருங்கச் சொன்னால் குடும்பம், வேலை உட்பட வாழ்வில் ஏற்படும் அனைத்து மன அழுத்தச் சூழ்நிலைகளையும் அமைதியாகவும் சுலபமாகவும் இந்தப் பயிற்சிகளினால் கையாள முடிகிறது. இப்போதெல்லாம் பிரச்சினைகள் என்னுள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தெளிவாகச் சிந்தித்து செயல்பட முடிவதால், பிரச்சினைகள் இப்போதெல்லாம் சுவாரஸ்யமான பொழுதுபோக்காக மாறிவிட்டன.

மனஅழுத்தம் என்று பேசுபவர்களுக்கு யோகா பயிற்சிகளைவிட சிறந்த மருந்து இருக்க முடியாது என்பது என் அனுபவம்.

எங்கேனும் சத்குருவை சந்தித்தாலோ, அவர் உரையைக் கேட்டாலோ அடுத்த ஒரு வருடத்திற்கு என் பாட்டரி ரீசார்ஜ் ஆகிவிடும். 2004-ல் நடந்த 13 நாள் வகுப்பில் தன்னார்வத் தொண்டராக என்னை இணைத்துக் கொண்டேன். சத்குருவிற்குச் சற்றும் குறைவில்லாமல், ஈஷாவில் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள், வகுப்பு நடத்துவதைக் கண்டு வியந்தேன்.

நாம் சந்தோஷமாக இருக்கும்போதுதான் நம் திறமை முழுமையாக வெளிப்படும் என்று சத்குரு கூறுவது என் அனுபவ உண்மை. ஈஷாவின் மதமில்லாத, இனமில்லாத, நிறமில்லாத, ஏன் கடவுளில்லாத தன்மை என்னை மிகவும் கவரும்.

மனஅழுத்தம் என்று பேசுபவர்களுக்கு யோகா பயிற்சிகளைவிட சிறந்த மருந்து இருக்க முடியாது என்பது என் அனுபவம். ஆசனப் பயிற்சி செய்யும்போது நம் உடல் அவயவங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு அற்புதமானது என்று தினமும் உணர்ந்து கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

இறுதியாக எனக்குப் பிடித்த சத்குருவின் மொழி: ‘உலகில் படைப்பாக நிற்கும் அனைத்து உயிர்களும் படைத்தவனின் வெளிப்பாடே!

நீங்கள் விருப்பத்தோடு இருந்தால் ஒவ்வொரு உயிரும் படைத்தவனை நோக்கிய சொர்க்கவாசல்!’