ஈஷாவும் நானும் - நாஞ்சில்நாடன்
தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் திரு. நாஞ்சில் நாடன். ஆன்மீகத்தில் ஈடுபட்டால், தன் படைப்புத் திறனுக்கு ஏதாவது தடை வருமா என்ற கேள்வியை சத்குருவிடம் கேட்க, அதற்கு தான் சற்றும் எதிர்பாராத பதில் அவரிடமிருந்து கிடைத்ததையும், ஈஷாவுடனான தனது தொடர்பையும் பற்றி இக்கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...
 
 

எழுத்தாளர்


தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் திரு. நாஞ்சில் நாடன். ஆன்மீகத்தில் ஈடுபட்டால், தன் படைப்புத் திறனுக்கு ஏதாவது தடை வருமா என்ற கேள்வியை சத்குருவிடம் கேட்க, அதற்கு தான் சற்றும் எதிர்பாராத பதில் அவரிடமிருந்து கிடைத்ததையும், ஈஷாவுடனான தனது தொடர்பையும் பற்றி இக்கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...

நாஞ்சில் நாடன்:

நண்பரும், கவிஞரும், இலக்கியச் சொற்பொழிவாளருமான மரபின் மைந்தன் முத்தையா, வெப்பம் மிகுந்திருந்த ஒரு காலையில் ஈஷா போய் வரலாமா எனக் கேட்டார். 1998-ம் ஆண்டின் முன்பாதி. அவர் அப்போது சத்குரு ஜகி வாசுதேவ் பற்றிய வரலாற்று நூல் ஒன்றை எழுதிக் கொண்டு இருந்தார், ‘உயிரென்னும் பூ மலரும்‘ என்ற தலைப்பில்.

“ஏற்கெனவே எல்லாம் இருக்கின்றன. பதிவு செய்வதும் பரிமாறுவதும் தவிர, எதையும் நீ படைப்பதில்லை!”

அப்போது நான் கோவை வந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டிருந்தன. ஈஷா பற்றி அறிந்திருந்தேனே அன்றி, போய்ப் பார்த்ததில்லை.

கோவை நகர எல்லையைத் தாண்டிப் பயணமானோம். சாலையில் இரு பக்கங்களும் அடர்வான மரஞ்செடி கொடிகள், நிழல், தணுப்பு, இளங்காற்று மனதுக்கு நிறைவாக இருந்தது. ஆசிரமத்தை நாங்கள் அடைந்தபோது, காலை ஒன்பது மணி இருக்கும். அப்போது முக்கோண வடிவத்தில் ஒரு கட்டடம் ஆசிரமமாக இருந்தது. ஆசிரமவாசிகளுக்கு காலை உணவு நேரம். நாளில் இரண்டு வேளை எளிய உணவு என்பது அங்கு போன பிறகே தெரிந்தது.

Nanjil Naadan, Sadhguru, isha, yoga, meditation, kriya

முன்மாலை நான்கு மணி அளவில் சத்குருவைக் காணும், தனியாக எதிர் அமர்ந்து உரையாடும் பேறு வாய்த்தது. எழுதிக்கொண்டு இருந்த புத்தகம் பற்றி மரபின் மைந்தன் நிறையக் கேட்டுக்கொண்டு இருந்தார். பிறகு எனக்கான நேரம் வந்தது. எனக்கு அப்போது ஆசிரமங்கள், துறவிகள், ஆன்மீகம் பற்றி எல்லாம் நிறைய நம்பிக்கையின்மைகள் இருந்தன. நம்பிக்கைகள் பற்றிய நம்பிக்கை அற்றிருந்த காலம்.

சத்குரு சொல்லச் சொல்ல, தெளிவொன்று பிறந்து வளர்ந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக உரையாடல் அமைந்தது. ஆன்மீகப் பாதையில் பயணமானால் எனது படைப்பு ஊக்கத்துக்குப் பங்கம் வருமா என்று கேட்டேன். சிரித்தவாறு சொன்னார், “ஏற்கெனவே எல்லாம் இருக்கின்றன. பதிவு செய்வதும் பரிமாறுவதும் தவிர, எதையும் நீ படைப்பதில்லை!” என்று.

அன்றைய கணக்கில் எழுத ஆரம்பித்து, 20 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. எனக்குக் கிடைத்த பெரிய உடைவு அது. நீண்ட நாட்கள் என்னுள் மீண்டும் மீண்டும் அலைகளை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. ஆம், படைப்பதற்கு நான் யார்? படைப்பு என்பதும் படைப்பு சக்தி என்பதும் வேறு. இன்று படைப்பாளிகள் எனும் பெயரில் எழுத்தாளர்கள் அழைக்கப்படுவதைப் பரிகசித்துச் சிரிக்கும் ஒலி எனக்குள் கேட்டது. வறியவன் பெற்றதோர் பெரும் செல்வம் போல், எனக்குள் அந்தக் கேள்வி இன்றும் சுழன்றுகொண்டு இருக்கிறது.

எனது இயல்பிலேயே எப்போதும் நம்புவதற்குச் சிரமப்படுதலும் நம்பத் தயாராக இருப்பதுமான இரண்டு நிலைகள் உண்டு. ஆன்மீகம் பற்றி, யோகம் பற்றி, தியானம் பற்றி எல்லாம் கேட்டேன். இறுதியாக ஒன்றைக் கேட்டேன், “எனது குரு என எவரைத் தேர்வது, நம்புவது, புரிந்து கொள்வது, பின்பற்றுவது?”

அன்றும் பிற்பாடு பல சத்சங்கங்களிலும் அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். “யாருடைய அருகாமையில் threatened ஆக ஒருவன் உணர்கிறானோ, அவர் குருவாக இருக்கப் போகிறவர்,” என்று. இதுவும் நான் திரும்பத் திரும்ப யோசித்த விஷயம். அன்றெனக்குத் தோன்றியது நான் குருவைக் கண்டுகொண்டேன், அல்லது குரு என்னைக் கண்டுகொண்டார் என்பது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் டி.விக்காக மரபின் மைந்தனுடன் சத்குருவை நேர்காணல் செய்தபோதும் நான் உணர்ந்த ஒன்று, இந்தப் பதற்றம்தான். மூன்று வாரமும் தொடர்ச்சியாக அதைப் பார்த்தவர் பலர் என்னிடம் கேட்டதும் அந்தப் பதற்றம்பற்றித்தான்.

பல சந்தர்ப்பங்களில் நான் சத்குருவின் அருகாமையில் உணர்ந்தது அது. சமீப காலங்களில் எனது கட்டுரைகளில் தொனிக்கும் கோபத்தின் அடிப்படையும் அதுதான் என்று எனக்குத் தெரியும்.

ஈஷா விழாக்களின்போது, மகாசிவராத்திரிகளின்போது, பலமுறை நான் ஈஷா போனது உண்டு. அங்கே இருக்கும் துறவிகளின், பிரம்மச்சாரிகளின், தொண்டர்களின் பரிவும், நேசமும், அரவணைப்பும் அன்புமயமானது என்பதை நான் கண்டது உண்டு.

முதன்முறை ஈஷாவுக்குச் சென்று வந்து 8 ஆண்டுகள் கழிந்த பின்பே என்னால் முறையான 13 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள வாய்த்தது. அந்தப் பயிற்சியில் அவர்கள் சொன்ன 3 விஷயங்கள் என்னைப் பெரிதாகப் பாதித்தன.

ஈஷா குடும்பத்தினருக்கு இயற்கையின் மீதும் பிற உயிரினங்களின் மீதும் உள்ள நேசம் வியப்பளிப்பது. லட்சக்கணக்கில் மரம் நடுதல், கிராமப் புத்துணர்வு இயக்கம், கிராமச் சுகாதாரம், கல்விப் பணிகள் யாவும் தனித்து எண்ணத்தக்கவை. ஓராண்டு முன்பு நாகர்கோவில் ஆரியபவன் உரிமையாளர் திரு ரமேஷ், நாங்குநேரி பக்கமுள்ள தனது சொந்தக் கிராமமான காடங்குளத்தில், சுற்றிலுமுள்ள கிராமத்தாரைக் கூட்டி பெரிய அளவிலான முகாம் ஒன்று நடத்தியபோது, நானும் கலந்துகொண்டேன். மக்கள் அன்று காட்டிய ஆர்வம், இன்று அவர்கள் கிராமங்கள் அடைந்திருக்கும் மாற்றம் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

புதர்களை அகற்றி, திடல் அமைத்து, நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு இருந்தபோது, மாவட்ட ஆட்சியர், காவல் துறைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மேடையில் அமர்ந்திருந்தபோது, சிறப்பு விருந்தினராகப் பாம்பு ஒன்றும் வந்தது.

கூட்டம் கலவரப்படுவதும், நாற்காலியைத் தூக்கிப் பாம்பை அடிக்க முயல்வதும் இயல்புதானே! பாம்பு எனக் கேட்ட மறுநொடியில், மேடையில் இருந்த ஈஷாவின் பிரம்மச்சாரி குதித்து, இரண்டே எட்டில் பாம்பைப் பாதுகாத்துப் பிடித்து மேடைக்குத் தூக்கிக்கொண்டு வந்தார். அன்றிரவு, ரகசியமாக, முன்பதிவு செய்யாத, பயணச்சீட்டு வாங்காத பயணியாகப் பாம்பும் நெல்லையில் இருந்து கோவைக்கு எங்களுடன் பயணம் செய்தது ஈஷா நோக்கி!

கடந்த 50 ஆண்டு காலமாக, எழுத்தைப் போல், இசையையும் நான் நேசிப்பவன். ஈஷா இசைக் குழுவின் பன்னாட்டு இசை என்னை மெய்மறக்கச் செய்ததுண்டு. ஹரிபிரசாத் சௌராஸ்யாவின் புல்லாங்குழல், பண்டிட் சிவ்குமார் சர்மாவின் சந்தூர், பண்டிட் ஜஸ்ராஜ், வீணா சகஸ்ர புத்யே, பாலமுரளி கிருஷ்ணா ஆகியோரின் வாய்ப்பாட்டு போன்றவை, கோவை வந்து சேர்ந்த என்னால் வேறு எங்கே கேட்டு அனுபவிக்க முடியும், ஈஷா யோக மையம் தவிர்த்து?

இந்தியச் சூழலில், தமிழ்ச் சமூகச் சூழலில், யோகா, தியானம், ஆன்மீகம் பற்றிய மிகத் தவறான புரிதல்கள் உண்டு. மனத் தடைகள் உண்டு. அவற்றைக் கடந்து வர ஈஷா எனக்கு மிக உதவியது. எனது இந்தப் புரிதல்கள் காரணமாக, மதுவையும் மாமிசத்தையும் வெகுவாக விரும்பிய நான், கடந்த ஓராண்டாக இரண்டையும் தவிர்த்து வருகிறேன்!

மேலும் ஒன்று, 18 ஆண்டுகளாக நீரிழிவு நோயாளியான, 7 ஆண்டுகளாக இதய நோயாளியான எனக்கு, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, ஈஷா கற்றுத்தந்த யோகா பயிற்சிகளும் தியானமும் நன்கு உதவுகின்றன!

 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

நான் எனது iphone -ல் எந்த Isha பதிவையும் பார்க்க முடிவதில்லை காரணம் எல்லா fontகளும் distort ஆகிவிடுகின்றன. இதற்கு எதாவது தீர்வு கிடைக்குமா ?

4 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

வணக்கம் செந்தில் குமரன்,

i
pad, i phone ல் பார்போருக்கு இந்தச் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. சில
தொழில்நுட்பக் காரணங்களால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இன்னும் சில
நாட்களில் இது சரி செய்யப்படும் என்று நம்புகிறோம். தயவு செய்து காத்திருக்கவும்.

நன்றி

4 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

தங்களின் உடனடி பதிலுக்கு மிக்க நன்றி.
- செந்தில்குமரன்