பத்திரிக்கை ஆசிரியர்


மஞ்சுளா ரமேஷ் - தமிழ் எழுத்து உலகில், தனக்கென ஒரு முத்திரைப் பதித்த பெண் எழுத்தாளர். மங்கையர்களின் மலராக வலம் வந்தவர். ஒரு பத்திரிக்கையாளராக சத்குருவை எதிர்கொண்டு, பிறகு ஈஷாவின் தியான அன்பராக மாறிய கதையை, தனது எழுத்து நடையில் நம்மோடு இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

மஞ்சுளா ரமேஷ்:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு குணம் உண்டு. எதிராளியை மடக்கும்விதத்தில் கேள்வி கேட்டு, அவர்கள் ஒரு வினாடி விழித்தாலும் பரம சந்தோஷம். எனக்கும் அந்த குணம் இருந்தது. அப்போது இந்த அளவு ‘ஈஷா’ பேசப்படாத காலம். சென்னைக்கு வந்திருந்த சத்குருவை பேட்டி எடுக்க, ஒரு இல்லத்தில் சந்தித்தேன். ஒரு மயிலிறகு நடந்துவருவது போல வந்து அமர்ந்தார். மனதில் குறுகுறுத்த கேள்வியைக் கேட்டேன்...

“நீங்கள் ‘யோகா’ கற்றுக் கொடுப்பதாகச் சொன்னார்கள். உடம்பிலே 6 வகைச் சக்கரங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே, அதையெல்லாம் உங்களால் காட்ட முடியுமா?”அவர் என்னைப் பார்த்துவிட்டுச் சிரித்தார். “நீங்கள் எங்களுடைய வகுப்புகளில் சேருங்கள். உணரமுடியும்!”

நம்மிடையே எளிமையாக, புன்னகையுடன் நிற்கும் சத்குரு உண்மையில் மனிதர்தானா என என்னுள் ஆச்சர்யம் எழும்.

அடுத்து அவருடைய சந்திப்பு நடந்தது மறக்கமுடியாத ஒரு நாளில். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து சத்குருவை அவர்களிடையே பேச வைப்பதான நிகழ்ச்சி. எல்லா ஏற்பாடுகளும் முடிந்து நிகழ்ச்சியன்று பார்த்தால், தெருவில் ஒரு ஈ.காக்கா இல்லை. முந்தைய நாள் இரவு கலைஞரைக் கைது செய்திருந்தார்கள். எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்தில் வெளியில் நடமாட்டமே இல்லை.

எப்படியோ நாங்கள் நிகழ்ச்சி நடக்க வேண்டிய இடத்துக்குச் சென்றுவிட்டோம். குறித்த நேரத்தில் சத்குருவும் வந்துவிட்டார். நாங்கள் மட்டும்... எங்களுடைய தவிப்பைப் பார்த்த அவர் புன்னகையுடன் என்னுடைய தோளில் தட்டி, “ஐயாம் வெரி ஸாரி மஞ்சுளா...” என்றார். எப்படியோ ஒருவாறாகக் கூட்டம் சேர்ந்து, தாமதமாக நடைபெற்றாலும்,நகைச்சுவையுடனான அவருடைய பேச்சு மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது!

அதேபோல மற்றொரு தடவை லட்சக்கணக்கானவர்கள் சென்னை கடற்கரையில் கூடி, அவருடைய பேச்சை ஆரம்பிக்கும் நேரத்தில் ‘மைக்’ தகராறு செய்தது. அவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். இது எல்லாமே சத்குருவால் மட்டுமே முடியும்!

இப்படித் தன்னை வென்ற மனிதராக அவரைப் பார்த்து வியந்த நான், ஈஷா வகுப்பிலும் கலந்துகொண்டேன். தன்னெதிரே இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சரியான விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும் என்பதில் அவர் காட்டிய தீவிரம் என்னை பிரமிக்கச் செய்தது. நகைச்சுவையோடு கூடிய அவருடைய ஆழ்ந்த பொருள்கொண்ட பேச்சு ஒரு புதிய உலகை என்னுள் திறந்தது.

கோவை வெள்ளியங்கிரி வகுப்புக்களில் கலந்துகொண்டபோது, மேலும் பல கதவுகள் என்னுள் திறந்துகொண்டன. குறித்த நேரத்தில் வகுப்புக்களில் அவர் உள்ளே நுழையும்போது இந்த உலகம் மறந்து போகும்.

ஒரு நாள் அதிகாலை வகுப்பில் வந்தவுடன் அனைவரையும் அவர் குறுகுறுவெனப் பார்த்துவிட்டு,“நாம எல்லோரும் ஒருநாள் செத்துப் போவோம்,” என்று ஆரம்பித்தார். சாவைப் பற்றியே நினைக்க விரும்பாத சாதாரண மக்களாகிய எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது, ‘காலங்கார்த்தால இது என்னபேச்சு?’ என்று. ஆனால் தொடர்ந்த அவருடைய பேச்சில் மரணத்தையும் தாண்டி எங்களை அழைத்துச் சென்றார்!

நம்மிடையே எளிமையாக, புன்னகையுடன் நிற்கும் சத்குரு உண்மையில் மனிதர்தானா என என்னுள் ஆச்சர்யம் எழும். ஒரு மனிதரால் இத்தனை குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான மனிதர்களை ஈர்த்து,அவர்களுக்குள் இப்பேர்ப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமா எனப் பிரமிப்பாக இருக்கிறது. இவ்வளவு பரந்த சமூகப் பணிகளைச் செய்ய முடியுமா என்று வியப்பாக இருக்கிறது.

அவரால் தன்னுள் மலர்ந்த பல மனிதர்களை நான் பார்த்து இருக்கிறேன். சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் எப்படியெல்லாம் பக்குவப்பட்டு வாழ்வைப் பார்க்கின்ற நோக்கையே மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இல்லை, இயல்பாக மாறி இருக்கிறார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். காந்த சக்தியுடனான தியானலிங்கமும், அவரும் ஒன்றுதானோ. வடிவங்களில்தான் வேறுபட்டு இருக்கின்றன போலும்!

அந்த ‘கன்னட’ மொழி பாணியில் வருகின்ற தமிழ்க்குரல் என்னுள் உற்சாகத்தையும், உத்வேகத்தையும், கூடவே நெகிழ்வையும் ஏற்படுத்துகிறது என்பது நிஜம்!