தமிழ் எழுத்தாளர்களில் தற்போது முக்கியமான எழுத்தாளராக முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர் திரு.அஜயன் பாலா. பல தமிழ் கட்டுரைகள், திரைப்பட வசனங்கள் போன்றவற்றில் தன் தனித்துவத்தை தொடர்ந்து காட்டிவரும் இவர், ஈஷாவில் இணைந்து தான் பெற்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

என்னை ஈர்த்த ஈஷா...

ஈஷா.. இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே மனதுக்குள் ஒரு மூலிகைக் குளியல். அந்தக் குளியலை முதல் முறையாக அனுபவித்தது சரியாக எட்டு வருடங்களுக்கு முன்...

இறுதி நாளின்போது ‘நகரத்தின் அழுக்கினால் அவலமாகிப்போன மனித மனங்கள் சுத்தப்படுத்திக்கொள்ள குளித்தெழும் மாய நதி’ என ஈஷாவை வர்ணித்தேன்.

நண்பர்கள் இருவரும் என் கல்லூரி காலத்துத் தோழர்கள். அவர்களிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உணர முடிந்தது. முகத்தில் ஒரு தேஜஸ். கண்களில் எப்போதும் இல்லாத புத்தொளி. உடலிலும் புதிய சுறுசுறுப்பு. அவர்களின் இந்தத் திடீர் பரபரப்புக்கும், தோற்றத்தின் மாற்றத்துக்கும் இடையில் ஒரு ரகசியச் சமன்பாடு இருப்பதைப் புரிந்துகொண்டேன். அது என்ன என அறிந்துகொள்ளும் ஆவல் என்னை உந்தித்தள்ளியது. அவர்கள் சொன்ன காரணம்... ஈஷா. 13 நாட்கள் வகுப்பில் கலந்துகொண்டு சில யோகப் பயிற்சிகளை கற்றதாகவும், வாழ்க்கையில் அது ஓர் அற்புத நிகழ்வு என்றும் புகழ்ந்தனர்.

எழுத்தாளனின் தர்க்க அறிவு

அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். உலகில் உள்ள அனைத்தின் மீதும் தர்க்கரீதியான கேள்விகள் கொண்டவன். எனக்கு சரியான பதில் கிடைக்கப் பெறாத எதையும் அத்தனை சுலபமாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதேசமயம் காரண அறிவு தோற்றுப் போகும் இடத்தையும் அறிந்தவன். ஆன்மிகம், கடவுள் குறித்து எனக்குள் சில உறுதியான சுய சிந்தனை உருவாகி இருந்தது. அப்போது என் உடல் பருமன் எனக்கு ஒரு முக்கியமான பிரச்சனையாக இருந்த காரணத்தால், ‘சரி, சென்றுதான் பார்ப்போமே’ என முடிவெடுத்தேன். முதல் நாள் வகுப்பில் என்னிடம் இருந்த ஈகோவைக் கழட்டிவைக்க மிகவும் சிரமப்பட்டேன்.

அந்த 13 நாட்கள் பயிற்சியில் என் உடலில் மாற்றங்களை உணர்ந்தேன். எனது கட்டற்ற, திட்டமில்லாத வாழ்க்கைக்கு அந்த வகுப்புகளின் நேரக் கட்டுப்பாடுகள் சிரமத்தைத் தோற்றுவித்தன. ஆனாலும் வகுப்புகளில் ஆசிரியர்கள் பழகியவிதம், பயிற்சிகள் கடற்கரை விளையாட்டு போன்றவை மனதுக்கும், உடலுக்கும் மின்சாரத்தை பாய்ச்சியிருந்தன. வகுப்புகள் முடிந்தபோது பயிற்சிகள் என் உடலை மாற்றியிருந்ததை உணர்ந்தேன். மற்றபடி வகுப்புகளில் அவர்கள் சொன்ன பல விஷயங்களில் என் தர்க்க அறிவே உயர்ந்திருந்த காரணத்தால், எனது அனுபவத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

மேலும் ஆன்மிகப் பாதையில் முதல் நிலையில் நிற்பவர்களுக்கான ஆரம்ப காலப் பயிற்சி அது என உணர்ந்திருந்தேன். ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. சாதாரண மக்களிடம் அவர்கள் கொண்டுவரும் யோகக் கலை ஒருவகையில் ஆன்மிக உலகில் இதுவரை யாரும் செய்யாத புரட்சி என்றுகூட சொல்லலாம். அதனால்தான் இறுதி நாளின்போது ‘நகரத்தின் அழுக்கினால் அவலமாகிப்போன மனித மனங்கள் சுத்தப்படுத்திக்கொள்ள குளித்தெழும் மாய நதி’ என ஈஷாவை வர்ணித்தேன்.

சத்குருவின் கட்டுரைகள் ஏற்படுத்திய தாக்கம்...

இது நிகழ்ந்து எட்டு வருடங்களில் என் வாழ்க்கை சில பல மாற்றங்களை அடைந்திருந்தது. இப்போது நான் தமிழகம் அறிந்த எழுத்தாளனாக மாறியிருந்தேன். சேகுவேரா, மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி பெரும் வாசகப் பரப்பை அடைந்திருந்தேன். மேற்சொன்ன அனைவருமே மதங்களையும், அதன் நெறிகளையும், அதன் அடையாளங்களையும் தீவிரமாக எதிர்த்தவர்கள். மேலும் இக்காலத்தில் என் தர்க்க அறிவு ஆன்மிக உணர்வுகளை விழுங்கிச் செரிமானம் கண்டிருந்தது. நான் என்னை சமூகத்தின் முழுமையான பிரதிபிம்பமாக உணரத் துவங்கி இருந்தேன். அதேசமயம் நான் எழுதிக்கொண்டு இருந்த அதே ஆனந்த விகடனில் சத்குரு அவர்களின் தொடரும் வெளியாகவே, அதனைப் படிக்க நேர்ந்தது. அவர் எழுதியதோ ஆன்மிகம். நான் எழுதியதோ சமூகப் புரட்சி.

ஆன்மிகத்துக்குள் சமூகப் புரட்சிக்கான நிலை எவ்வளவு தூரமோ, எனக்குத் தெரியாது. ஆனால், சமூகப் புரட்சியாளர்கள் பலர் மதம் மற்றும் ஆன்மிக வாழ்க்கையை கடுமையாக எதிர்த்தனர். சமூகத்தின் இறுக்கமான நிலைக்கு ஆன்மிகமும் ஒரு காரணம் என்பது அவர்கள் நிலைப்பாடு. அப்படியான எனது பயணத்துக்கு எதிர்நிலையில் இருந்தபோதும் சத்குருவின் கட்டுரைகள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கின.

நான் சென்ற இமாலய யாத்திரை

இந்த நிலையில் ஒருநாள் ஈஷாவில் இருந்து பாலச்சந்தர் அண்ணா என்னை போனில் அழைத்தார். அவர் கூறிய தகவல் எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியையும், இன்னொரு பக்கம் ஆச்சரியத்தையும் உண்டு பண்ணியது. தியான யாத்ரா பற்றி குறிப்பிட்ட அவர், “இம்முறை ஒரு பத்திரிக்கையாளரை அழைத்துச் செல்ல விரும்புகிறோம். நான் உங்களின் பேரைப் பரிந்துரைத்திருக்கிறேன்” என்றார்.

கேட்ட நிமிடத்தில் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காரணம் பலமுறை நான் இது போன்ற பயணத்துக்குத் திட்டமிட்டிருந்தும், நேரம் காரணமாக என்னால் அதனைச் செயல்படுத்த முடிந்ததில்லை. துவக்கத்தில் சில மனத்தடைகள் இருந்தன. பெரியார் தொண்டர்களிடம் என் மேல் மிகுந்த அபிப்ராயம் இருந்து வந்தது. இந்த விஷயம் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற தயக்கம் எழுந்தது. ஆனாலும், அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், பெரியார் ஆன்மிகத்தைத் தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராகத்தான் போராடினார். மேலும் பழுத்த ஆன்மிகவாதிகளான திரு.வி.க ஆகியோருடன் அவர் நெருங்கிய நட்பு பாராட்டியும் வந்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் காட்டிலும் எனது இயல்பையும், சுய சிந்தனைகளையும் அடியொற்றி வாழ்வதுதான் என்னை மேலும் உண்மையுள்ளவனாக பொது வாழ்வில் முன்னெடுத்துச் செல்ல உதவும் எனத் திட்டமாக முடிவெடுத்தேன்.

இந்தச் சமயத்தில் பாலசந்தர் அண்ணாவிடம் இருந்து வந்த மற்றொரு அழைப்பு. சில பயிற்சிகளை நீங்கள் எடுத்துக் கொண்டால்தான் முழுமையாக மலைகளில் ஏற முடியும் என ஒரு குண்டைப் போட்டார். உண்மையில் அது எனக்கு சங்கடமாக இருந்தது. காரணம் கட்டற்ற எனது மனம் மற்றும் ஒழுங்கற்ற எனது அன்றாடப் பணிகள். உண்மையில் நான் மேற்கொள்ளவிருக்கும் பயணம் வாழ்வின் பேரற்புதமான தருணங்களில் ஒன்றாக மாறப்போகிறது என்பதை அப்போது அந்த நிமிடத்தில் உணரவில்லை. துவக்கத்தில் மறுத்து, பின் என் அம்மா மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் பயிற்சியில் கலந்துகொள்ளச் சம்மதித்தேன். எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு இயற்கையின் முழுச் சம்மதத்தோடு சத்குரு அவர்களின் ஆசியுடன் நிகழ்ந்தது என்பதை பிற்பாடு உணர்ந்தேன்.

ஒருவழியாக ஏழு நாட்கள் பயிற்சி முடிந்தது. எட்டு வருடங்களுக்கு முன் நான் எடுத்த பயிற்சிக்கும், இதற்கும் பல வித்தியாசங்கள் இருந்தன. இப்போதும் எனக்குள் கேள்விகள் எழுந்தன என்றாலும் முந்தைய வகுப்பில் இருந்த எதிர்ப்புக் குணம் இல்லை. மாறாக சத்குருவின் மேல் ஈடுபாடும், ஈர்ப்பும் துவங்கியது. தியான யாத்ராவுக்கான ஏற்பாடுகள் துவங்கின.

குறிப்பிட்ட தினத்தன்று சென்டரல் ரயில் நிலையத்தில் தயாராக இருந்த ரயிலில் என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன். சுற்றிலும் இதுவரை நான் பார்த்திராத முகங்கள். டெல்லியில் இறங்கியதும்தான் நாங்கள் சுமார் 172 பேர் என்பதை அறிந்தேன். எங்களுக்காக ஏழு பேருந்துகள் காத்திருந்தன. நம்மோடு பயணிக்கும் இந்த முகங்களுக்கு பின்னால் அளவற்ற சக்தியும், எல்லையற்ற அன்பும் இருக்கிறது என்பதை அப்போது என்னால் உணர முடியவில்லை. பேருந்து புறப்பட்ட சில நொடிகளில் என் வாழ்வில் எங்கும் உணர முடியாத பரிசுத்தமான மகிழ்ச்சி அல்லது இன்பம் அல்லது பேரமைதி. அப்போது துவங்கி நான் அனுபவித்த உணர்வை எப்படி வேண்டுமானாலும் விவரிக்கலாம். நான் என்ன மனநிலையில் இந்த பயணத்தை உணர்ந்தேனோ, அதில் எள்ளளவும் குறையாத நிலையில் என்னோடு பயணித்த இதர சாதகர்களும் இருந்தனர். புற உலகில் வெறெங்கும் அனுபவிக்க முடியாத இந்த சமநிலைக்கு ஈஷாவின் பயிற்சிகள் ஒரு முக்கியக் காரணம். இமயமலையில் நான் தரிசித்த மூன்று முக்கிய இடங்களைக் கடந்து நான்காவது புண்ணியத்தலமாக என்னோடு பயணித்த சாதகர்களின் கூட்டு உணர்வலைகள் பயணம் முழுக்க இருந்ததை பயணத்தின் இறுதி நாளின் போது என் ஆன்மிக உணர்வு எனக்கு அறிவுறுத்தியது. அதற்குக் காரணமாக, எண்ணற்ற நிகழ்வுகள், இடங்கள், மனிதர்கள்.

சத்குருவும், இமயமலையும், இன்னும் எனக்குள் அன்று உருவான, உருவாக்கப்பட்ட புதிய மனிதனை தங்களது அன்பினால் பாதுகாத்து வருகின்றனர்.

எப்போதும் அந்தப் பாதுகாப்பு எனக்குக் கிடைக்கும் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன்!