"சத்குரு..! நீங்க அரசியலுக்கு வரலாமே!" என சிலர் சத்குருவிடம் கேட்கும்போது, ஆன்மீகத்தில் உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை விட, அரசியலில் இருப்பவர்களுக்கு ஆன்மீகம் வழங்கினால் நாடு சிறப்படையும் என சத்குரு கூறுவதுண்டு. அதிகாரம் மிக்கப் பதவியில் இருப்பவர்களை ஆன்மீகம் தொட்டுவிட்டால் மக்களுக்கு நல்லதுதானே?! திரு.J.M.பாலமுருகன், ஐ.ஏ.எஸ் அவர்களின் வாழ்வில் ஈஷா யோகாவால் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? தொடர்ந்து படியுங்கள்!

பாலமுருகன், ஐ.ஏ.எஸ்:

நான் ஐ.ஏ.எஸ். தேர்வாகி பஞ்சாப் மாநிலத்தில் பணியில் இருந்தேன். என் தாயார் மிகவும் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால், அவர்களைக் கடைசி நேரத்தில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று சென்னைக்கு மாறுதல் வாங்கி வந்தேன். தாட்கோவில் நிர்வாக இயக்குனராகப் பணி. அம்மா மரணவாயிலில் நான்கு வருடம் இருந்தார்கள். அப்போது என் மனதில் எழுந்த கேள்விகளே என் தேடுதலாக மாறியது. ஏற்கெனவே எனக்கு யோகா பற்றிய ஆர்வம் இருந்தது. அந்த நேரத்தில், அதாவது 2004ம் ஆண்டில் சென்னையில் ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்தேன்.

ஈஷாவின் மிகப் பெரிய சொத்து, தன்னார்வத் தொண்டர்கள். அவர்களிடம் மிகப் பெரிய அளவில் ஊக்கமும் தூண்டுதலும் இருக்கிறது. நிதி, கட்டமைப்பு என்ற அளவில் இதைவிட மிகப் பெரிய அமைப்புகள் இருக்கலாம். ஆனால், இந்த அளவு ஈடுபாடும், பொறுப்பும், நேர்மையும் வேறு எங்கும் இருக்க முடியாது. அந்த வகையில் ஈஷா நிறுவனம் இணையில்லாதது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மக்கள் எதையெல்லாம் வெற்றி என நினைப்பார்களோ, உடல் நலம், நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குடும்பம், நல்ல பொருளாதாரம் என எனக்கு எல்லாமே அமைந்திருந்தது. ஆனாலும் ஈஷா யோகா என் வாழ்க்கையையே மாற்றியது. எனக்கு இருக்கும் வேலைப் பளுவிலும் தவறாமல் நேரம் ஒதுக்கி முழு ஈடுபாட்டுடன் தொடர்ந்து யோக பயிற்சிகள் செய்தேன். மூன்று மாதத்துக்குள்ளேயே என்னுள் பல மாறுதல்கள். குறிப்பாக, சக்திநிலை, மனம் குவிப்பு ஆகியவற்றில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. உடனே அதற்கடுத்த வகுப்பிலும் சேர்ந்தேன்.

வாழ்க்கையை அனுபவிக்கக்கூடிய ஒரு விழிப்புணர்வே அப்போதுதான் ஏற்பட்டது. மனிதர்களிடம் நான் பழகும் விதமே மாறிப்போனது. எங்கள் வேலையில் பல சவால்கள் இருக்கும். எப்போதும் ஏராளமான முக்கியமான வேலைகள் துரத்திக்கொண்டே இருக்கும். அரசியல் தலையீடு அதிகமாக இருக்கும். பல பிரச்னைகளுக்கு எங்களுக்கு விடை தெரியாது. ஆனால், பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பஞ்சாப்பில் சில நேரம் மக்களைக் கையாள்வது மிகவும் கடினம். ஆனால், வகுப்புக்குப் பிறகு ஒவ்வொன்றிலும் தானாகவே தடைகள் அகன்றன. இது எனக்கு மிக வியப்பாக இருந்தது. மேலும் நாள் முழுக்க வேலை செய்தாலும் களைப்பு ஏற்படவில்லை.

உயர் அதிகாரிகள் யோக வகுப்பு செய்வது அவர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும் நன்மையாக இருக்கும். எனவே, குறிப்பாக ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அலுவலர்களுக்காகவே, சென்னையில், ஈஷா யோகா வகுப்புக்கு ஏற்பாடு செய்தேன். சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். இப்போது எங்கள் குடும்பத்திலும் அனைவரும் வகுப்பு செய்துவிட்டார்கள்.

2008ல் நான் பஞ்சாப்பில் பணியில் இருந்தபோது சத்குரு என்னை அழைத்து ஈஷாவின் திட்டங்களை விரிவாகச் சொன்னார்கள். வருங்காலத்தில் ஈஷா எந்தத் திசையில் எப்படிச் செல்ல வேண்டும், அதற்கு என்னென்ன வேலைகள் செய்யத் தேவை இருக்கிறது என்றெல்லாம் விவரித்து அதில் நானும் பங்குபெற முடியுமா எனக் கேட்டார். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். ஏனெனில், ஈஷாவில் எனக்குரிய பங்கு இருப்பது தெளிவாகப் புரிந்திருந்தது.

ஓர் அரசு செய்ய வேண்டிய பணிகளையே ஈஷா தனது சமூக நலத் திட்டங்களாக, மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல் என்று பலவகைகளில் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு அனுமதி அளித்தால், தலைசிறந்த மக்கள் இயக்கங்களில் ஐந்து வருடங்கள் வரை நாங்கள் பணிபுரிய முடியும். எனவே, அரசின் அனுமதியுடன் அரசுப் பணியில் இருந்து தற்காலிகமாக விலகி ஈஷாவுக்கு 2009 அக்டோபரில் இருந்து சில மாதங்களுக்கு முன்புவரை முழு நேரமாக உதவி வந்தேன்.

ஈஷாவின் மிகப் பெரிய சொத்து, தன்னார்வத் தொண்டர்கள். அவர்களிடம் மிகப் பெரிய அளவில் ஊக்கமும் தூண்டுதலும் இருக்கிறது. நிதி, கட்டமைப்பு என்ற அளவில் இதைவிட மிகப் பெரிய அமைப்புகள் இருக்கலாம். ஆனால், இந்த அளவு ஈடுபாடும், பொறுப்பும், நேர்மையும் வேறு எங்கும் இருக்க முடியாது. அந்த வகையில் ஈஷா நிறுவனம் இணையில்லாதது.

சத்குருவின் கனவுகள்... அது ஆன்மீகத் திட்டங்களாகட்டும், சமூகநலத் திட்டங்களாகட்டும், எப்போதுமே பிரம்மாண்டமாகத்தான் இருக்கின்றன. அடிப்படை மனிதநலனைப் பார்க்காமல் ஆன்மீகம் இருக்க முடியாது. பல சமூகநலத் திட்டங்களை எடுத்துக்கொண்டு அதை மிகப் பெரிய அளவில் ஈஷா செய்திருக்கிறது. 2010ம் ஆண்டு, ஈஷாவின் பசுமைக் கரங்கள் திட்டத்துக்காக மத்திய அரசின் விருது கிடைத்திருப்பதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். இந்தச் சமூகநலத் திட்டங்களில் ஈஷா அன்பர்கள் பல நிலைகளில் தொண்டு செய்கிறார்கள். சாதிக்க வேண்டும் என்னும் உறுதி, அர்ப்பணிப்பு அனைவரிடமும் சமமாக இருக்கிறது. இதுபோன்ற அர்ப்பணிப்பான தொண்டர்களோடு சேர்ந்து வேலை செய்ய நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

சத்குரு எந்த விஷயத்தை எடுத்தாலும் அதனுடைய ஆரம்பமும் முடிவும் அவருக்குத் தெரிந்தேதான் இருக்கிறது. அவர் சில நேரங்களில் இலக்கை மிக அதிகமாக வைக்கும்போது, அது நிச்சயமாக முடியாது என்றே நாங்கள் நினைப்போம். ஆனால் அதை நம்மைச் செய்யவைத்து, நம்முள் இருக்கும் பல தடைகளை அவர் உடைப்பதை எங்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கு ஒவ்வொரு நாளுமே ஒரு வளர்ச்சி. அந்த வளர்ச்சியில் இருந்துதான் எனக்கு அதிகப்படியான சக்தி கிடைப்பதாக உணர்கிறேன்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தெளிவான முடிவு உடனேயே அவரிடமிருந்து வரும். ஒரு முறை அவருடன் காரில் சென்றபோது, கட்டட வரைபடங்களை வைத்து அவருடன் உரையாடிக் கொண்டு வந்தோம். அவர் எப்போதும்போல் வண்டியை மிக விரைவாக ஓட்டிக் கொண்டு இருந்தார். ஆனால், நாங்கள் சொன்ன தீவிர பிரச்சனைகளுக்கெல்லாம் வண்டியின் வேகத்தைக் குறைக்காமலேயே வினாடிக்கு வினாடி தீர்வு சொல்லிக் கொண்டு வந்தார். மிக வியப்பாக இருந்தது.

யோக மையத்துக்கு, குறிப்பாக தியானலிங்கத்துக்குச் சென்று வெளிவரும்போது, புத்துணர்ச்சியாகவும், மிகவும் சக்தியாகவும் உணர்கிறேன். லிங்கபைரவியை சத்குரு பிராணப் பிரதிஷ்டை செய்து உயிர்பித்த செயல்முறையில் 5,000 பேர் முழு ஈடுபாட்டோடு கலந்துகொண்டபோது, நானும் ஒருவனாக அதில் இருந்து, கண்ணீருடன், என்னையே மறந்திருந்தேன். மேலும் நான் தவறாமல் ஈஷா காட்டுப்பூ படித்து வருகிறேன். பழைய இதழ்களைக் கூட பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் எப்போதுமே நமது வாழ்க்கைக்குத் தொடர்புடையதாக இருக்கிறது.

நமது சமூகத்தில் பலவற்றின் தரம் தொடர்ந்து குறைந்து வருவதைப் பார்த்து வருகிறோம். பல தீர்வுகள் முயற்சித்துவிட்டார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வுதான் இருக்கிறது என்று சத்குரு மிகவும் தெளிவாகச் சொல்கிறார். அதைத்தான் ஈஷாவின் நோக்கமாகவும் வைத்திருக்கிறார். அதுதான் ‘அசத்தோமா சத்கமய’ அதாவது ‘பொய்மையில் இருந்து மெய்மை’க்கு என்கிறார். இதை ஏற்கனவே பல குருமார்கள் சொல்லி இருந்தாலும், மக்கள் மத்தியில் பரவலாக நிலைநாட்டக்கூடிய தொழில்நுட்பம் சத்குருவுக்குத்தான் தெரியும்.

சத்குருவின் இந்தப் பணியில் எனக்கும் சிறு பங்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். சத்குரு சொல்வார், ‘உங்கள் வாழ்க்கை உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் வாழ்க்கை அர்த்தம் இல்லாதது’ என்று. என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகச் செய்துகொள்ள ஒரு வாய்ப்பு அளித்த சத்குருவுக்கு எப்போதும் நன்றி சொல்வேன்!