"பொறாமையா இருக்கு!
போட்டியா இருக்கு!
ஆசையா இருக்கு!
இப்படி எதெல்லாம் இருக்கக் கூடாதோ, அதெல்லாம் இருந்தது,"
எதையுமே வித்தியாசமாக சொல்லிப் பழக்கபட்ட நடிகர் பார்த்திபன் தான் இப்படி ஆரம்பிக்கிறார் தன் ஈஷா அனுபவத்தை! தொடர்ந்து படியுங்கள்

திரு. பார்த்திபன்:

‘பொறாமையா இருக்கு!
போட்டியா இருக்கு!
ஆசையா இருக்கு!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

... இப்படி எதெல்லாம் இருக்கக் கூடாதோ, அதெல்லாம் இருந்தது, நான் ஈஷா மையத்தில் இருக்கும்போது!’

ஈஷாவைப் பற்றி ஒரு நேர்காணலில் நான் பெருமிதமாகப் பகிர்ந்துகொண்ட வரிகள் இவை.
எனது இத்தனை வருடத் திரை வாழ்க்கையில், ‘கொஞ்சம் அமைதி கிடைக்குமா?’ என்று நான் தேடியலைந்த காலங்கள் உண்டு. ஒருமுறை வெளியூர் படப்பிடிப்புக்காக, காரில் பயணம் செய்தபோது, டிரைவர் ஒரு பாட்டை ஓடவிட்டு, சட்டென்று அடுத்த பாட்டுக்குத் தாவினார். உடனிருந்த என் உதவியாளர், ‘இதுக்கு முன்னாடி இருந்ததே இருக்கட்டும்!’ என்றார். நான், ‘அதுக்கும் முன்னாடி இருந்ததே இருக்கட்டும்!’ என்றேன். நான் குறிப்பிட்டது, எதுவுமே கேட்காத நிசப்தத்தை. காரணம், நிம்மதியில்லாத மனசுக்கு இசைகூட இரைச்சல்தான்!

ஆனால், ஈஷாவில் தியானலிங்கம் முன்பு நிகழும் ‘நாத ஆராதனா’ இசையில் நிசப்தமும் ஒலிக்கும். முடிந்த பிறகு, எதுவுமே ஒலிக்காத நிசப்தமும் இசை மாதிரி இருக்கும். எனக்காக, பிரத்யேகமாக, ஈஷாவின் இசைக் குழு, ‘சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா’ தாளத்தில் என்னை அதிர்வுக்குள்ளாக்கி, புல்லாங்குழலில் உருக்கினார்கள்.

‘ஈஷா ஹோம் ஸ்கூல்’ பள்ளிக் குழந்தைகளை நான் சந்தித்து, கேள்வி கேட்கிற ஓர் ஏற்பாடு. அவர்களின் முகத்திலிருந்த உற்சாகமும் பூரிப்பும், உள்ளத்தில் பொங்கியதன் அழகிய வெளிப்பாடு என்று தெரிந்தது. அங்கே, எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாமல் ‘திருதிரு’ வென்று முழித்த ஒரே மாணவன் நான்தான்!

...தூண்களே இல்லாமல், அமைப்பே ஆச்சரியமான, அமைதியே உருவான தியானலிங்கம், உள்ளே நுழைந்ததுமே உள்ளம் உள்ளே சம்மணமிட்டு அமர்ந்துகொள்ளும் உணர்வு, எளிய, அரிய யோகப் பயிற்சிகள், பிராணாயாமம், வெறுமையைத் தரிசிக்கும் சூன்ய தியானம், சப்த நாடிகளுக்கு உயிரூட்டும் ஓம்கார தியானம், இயற்கை உணவு, பாதரச லிங்கக் குளத்தில் பரவசக் குளியல், ‘சாவி கொடுக்காமல்’ அர்ப்பணிப்போடு இயங்கும் ஈஷாவின் இதயங்கள் என்று ஈஷாவில் எங்கு நோக்கினும் ஒரு தீர்க்கம், சாந்தம்!

ஈஷாவில் இருந்தபோது, பலமுறை சுற்றிப்பார்த்தேன், என்னை!

அங்கிருந்த நாட்களில் என் கையை நானே பிடித்து நடந்து போகும் ‘சுயம்’ புரிய ஆரம்பித்தது. ஈஷாவின் இலக்கு, முறைகள், பாதை எல்லாமே, நாம் இதுவரை பழக்கப்பட்டு, குழப்பப்பட்டு வந்த பக்தி கலாசாரத்துக்குச் சம்பந்தமில்லாத யதார்த்தமான, சக்தி வாய்ந்த, ஆழமான ஆன்மீக அம்சங்கள்!

உண்மையில், சில வருடங்களுக்கு முன்பு சத்குருவை (ஆயிரம் கேள்விகளை மறைவாய் துணைக்கு அழைத்துக் கொண்டு) ஆசி நிமித்தம் சந்தித்ததோடு சரி. ஆனால், சில வருடங்களிலேயே, அதே ஈஷா என்னை அழைத்து, அணைத்துக்கொண்டது.

இப்படித்தான், சமீபத்தில் ‘சத்குருவுடன் ஒரு சந்திப்பு... என்னென்ன கேள்விகள் இருந்தாலும், அதை சத்குருவிடம் கேட்கலாம்... வாருங்கள்!’ என்று வந்தது அழைப்பு. தீர்வுகளின் சொரூபமாய் உட்கார்ந்திருந்த சத்குருவின் முன்னால், கேள்விகளாய் சிதறிக் கிடந்தோம். எங்கள் முடிச்சுகளை எங்கள் கைகளாலேயே அவிழ்க்க வைத்தார்.

‘இந்த கணத்தில் முழுமையாக வாழ வேண்டும். இந்த கணத்தை மாற்றவோ, தவிர்க்கவோ முடியாது. இந்த கணத்தை ஏற்றுக்கொள்வதுதான் சரி. உத்தமம், நிதர்சனம்!’ என்கிற சத்குருவின் வார்த்தைகள், ஆயுளைக் கூட்டின.

அடுத்த கணம் சத்குருவின் பிரம்மாண்டச் சிரிப்பில் ஆனந்த அலைகள் எழுந்தன!