ஈஷாவிற்குள் மணக்கும் மூலிகைத் தோட்டம் - ஒரு விசிட்!
ஈஷா யோகா மையத்திற்குள் தான் வளர்க்கும் மூலிகை மற்றும் காய்கறித் தோட்டம் குறித்தும், அதிலிருந்து தான் பெற்ற அனுபவங்கள் பற்றியும் நம்முடன் பகிர்கிறார் மா சந்திரஹாசா! தனி நபர்கள் மட்டுமல்ல விவசாயிகளும் கூட கவனிக்க வேண்டிய டிப்ஸ்களைத் தருகிறார் அவர்! படித்து பலன்பெறுங்கள்!
 
 

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 27

ஈஷா யோகா மையத்திற்குள் தான் வளர்க்கும் மூலிகை மற்றும் காய்கறித் தோட்டம் குறித்தும், அதிலிருந்து தான் பெற்ற அனுபவங்கள் பற்றியும் நம்முடன் பகிர்கிறார்     மா சந்திரஹாசா! தனி நபர்கள் மட்டுமல்ல விவசாயிகளும் கூட கவனிக்க வேண்டிய டிப்ஸ்களைத் தருகிறார் அவர்! படித்து பலன்பெறுங்கள்!

நல்ல உடல் நலத்திற்கு யோகா மட்டும் போதுமா? சத்தான உணவுகளும், நோய் நீக்கும் மூலிகைகளும் நமக்கு அவசியமல்லவா? இதை உணர்ந்த ஈஷா யோக மையத்தின் பிரம்மாச்சாரினி மா சந்திரஹாசா அவர்கள் மூலிகைகள் வளர்ப்பதை அவரது அன்றாட பணிகளுடன் இணைந்து செய்து வருகிறார்.

இந்த தோட்டத்தில் வந்து சிறிது நேரம் வேலைசெய்வது மனதுக்கும் உடலுக்கும் உற்சாகத்தை தருகிறது. தோட்டதிற்கு வந்தால் வேறு உலகத்தில் இருப்பது போல் உணர்வேன். துளிசியின் மணமும், பூக்களின் சுகந்தமும் மனதுக்கு இனிமையையும், உடலுக்கு புத்துணர்ச்சியையும் தருகிறது.

அவரது மூலிகைத் தோட்டத்தைக் காண்பதற்கு ஈஷா விவசாயக் குழுவிற்கு அழைப்பு விடுத்தார். நல்ல செய்தியாயிற்றே விடுவோமா! உடனே ஆசிரமத்தின் சிவபாதம் குடிலுக்கு அருகே உள்ள மூலிகை தோட்டத்திற்கு விரைந்தோம், மூலிகையின் சுகந்தம் மணக்க மணக்க அவர் கொடுத்த தகவல்கள்.

"எனக்கு நிறைய செடிகள் வளர்க்க வேண்டும் என்று ஆசை, ஆனால் இடம் கிடைக்கவில்லை, கிடைத்த இடத்தில் சில செடிகளை வளர்த்து வந்தேன், அதன் பிறகு ஈஷா யோகா மையத்திற்கு தேவைப்படும் காய்கறிகளை உற்பத்தி செய்வதற்காக பரிட்சார்த்தமாக 25 சென்ட் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தார்கள். அப்போதிலிருந்து காய்கறிகளை பயிர்செய்து வருகிறேன், ஆரம்பத்தில் தோட்டத்தை அதிக சுத்தமாக வைத்துகொள்ளவே விரும்புவேன்; பயிர்களைத் தவிர வேறு எந்த செடி முளைத்தாலும் அதை களைச்செடியாகவே கருதுவேன்; இலை தழைகளைக்கூட அவ்வப்போது சுத்தம் செய்து விடுவேன்.

2014 மதுரையில் நடந்த பாலேக்கர் ஐயா அவர்களின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய வகுப்பில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 2015 ஈஷா ஒருங்கிணைத்த 8 நாள் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பயிற்சியிலும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு எனது எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டது. மூடாக்கு பற்றி பலேக்கர் ஐயா கூறிய விஷயங்களை கடைப்பிடிக்கத் தொடங்கினேன். தோட்டத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மறைந்தது.

ஈஷா ஆரோக்யாவிற்கு புத்தம் புதிய மூலிகைள்

ஈஷா ஆரோக்யாவின் மருந்து தயாரிப்புக்கு தேவையான மூலிகைகளை வெளியில் இருந்து வாங்குகிறோம். சில நேரங்களில் தரமான மூலிகைகள் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை. மேலும் புதிய மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருந்துகள் தரமாகவும் வீரியமாகவும் இருக்கும் என்பதால் ஈஷா ஆரோக்யாவிற்கு தேவைப்படும் சில அத்தியாவசியமான மூலிகைகளை மட்டும் வளர்க்கத் தொடங்கினேன்.

மூலிகைகளை தனியாக நடவு செய்யாமல் காய்கறிகளுடன் ஊடுபயிராக நடவு செய்ய திட்டமிட்டு, முதல் கட்டமாக ஈஷா நர்சரியில் இருந்து 500 கருந்துளசிச் செடிகளை வாங்கி நட்டேன். மேலும் மஞ்சள் கரிசலாங்கண்ணி, கற்பூரவல்லி, சிறியா நங்கை, திருநீற்றுப் பச்சிலை, முடக்கத்தான், முசுமுசுக்கை, அப்பக்கோவை போன்றவற்றை அவ்வப்போது நட்டு வளர்த்ததில் தற்போது ஒரு மூலிகைப் பண்ணையாக காட்சியளிக்கிறது."

துளசி

"பெரும்பாலான சித்த மருந்துகளில் துளசி ஒரு அத்தியாவசிய மூலிகையாக இருக்கிறது. இதில் கருந்துளசி அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது. துளசிச் செடிகளின் விதைகள் தானாகவே விழுந்து முளைத்து தற்போது 2500 செடிகளுடன் துளசி வனம் போல் உள்ளது."

"2-3 மாதத்திற்கு ஒரு முறை துளசியை அறுவடை செய்யலாம். செடிகள் மீண்டும் துளிர்த்துவிடும், அதற்கேற்ப கிளைகளை விட்டு அறுக்க வேண்டும். அடியோடு வெட்டிவிட்டால் மீண்டும் துளிர்க்கத் தாமதமாகும், அடுத்த அறுவடையில் மகசூலின் எடையும் குறையும்.

உலர்ந்த துளசி இலைகளையே கொடுக்கிறேன். பறித்த இலைகளை உடனடியாக பரவலாக வைத்து காய வைக்க வேண்டும். குவியலாக போட்டுவிட்டால் அதில் பூஞ்சைகள் வளர்ந்துவிடும். இலைகளில் மேல் உள்ள அதிகமான ஈரம் காய்வதற்கு ஒரு நாள் வெய்யிலிலும், தொடர்ந்து பத்து நாட்கள் நிழலிலும் காயவைக்க வேண்டும். தொடர்ந்து வெய்யிலில் உலர்த்தினால் துளசியின் சத்துக்கள் குறைந்து விடும்."

நிலவேம்பு (சிறியா நங்கை)

"நிலவேம்புக்கான தேவை தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலும் நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் விதைகள் தானாகவே விழுந்து நன்றாக முளைக்கும். நில வேம்பிற்கு குறைந்த அளவு நீரும் போதுமானது. அறுவடை செய்யும் போது அடியோடு வெட்டாமல் கிளைகளை விட்டு வெட்ட வேண்டும், அந்த கிளைகள் மீண்டும் துளிர்த்து விடும். முழுசெடியும் மருத்துவ குணமுடையது என்பதால் வீடுகளில் வளர்ப்போர் முற்றிய செடிகளை வேரோடு பிடுங்கி தூளாக இடித்து வைத்துக்கொண்டு அவ்வப்போது கஷாயமாக பருகலாம்."

திருநீற்றுப்பச்சிலை

"மிகுந்த வாசனையுள்ள இந்தச் செடி வகை, தேனீக்களை வரவழைப்பதில் மிக முக்கியப் பங்காற்றக்கூடியது. இதன் பூக்களில் எந்நேரமும் தேனீக்கள் இருப்பதைக் காணமுடியும். துளசியைப்போல் தினமும் ஒன்றிரண்டு இலைகளை சாப்பிடலாம். சளி, தொண்டைவலி, காதுவலி போன்றவற்றிக்கு நல்ல மருந்து.

குளியல் பொடி தயாரிப்பில் முக்கியமான மூலிகையாக திருநீற்றுப் பச்சிலை பயன்படுகிறது. மேலும் இதன் விதைகளை (சப்ஜா) குளிர் பானங்களில் சேர்த்தும் பருகலாம். மேலும் காய்கறி சாலட் செய்யும் போதும் பயன்படுத்தலாம்.

மூலிகை சூப் மற்றும் துவையல் வகைகள்

முசுமுசுக்கை, முடக்கத்தான் போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சூப் வகைகள் உயர் நிலை யோகப்பயிற்சி பங்கேற்பாளர்களுக்கு தரப்படுகிறது. கற்பூரவல்லி ரசம், துவையல் போன்றவை அவ்வப்போது தன்னார்வத் தொண்டர்களுக்கு பரிமாறப்படுகிறது. மேலும் கற்பூர வல்லி இலைகளைப் பயன்படுத்தி பஜ்ஜி கூட செய்ய முடியும்.

பல்வேறு கீரைவகைகளையும் தொடர்ந்து பயிர் செய்துவருகிறேன், ஐந்து வகையான தண்டுக்கீரை, தவசிக்கீரை, மூன்று வகையான பொன்னாங்கண்ணி போன்றவை அவ்வப்போது அக்ஷயா உணவுக்கூடத்திற்கு தருகிறேன்"

முள்ளங்கி

"வெள்ளை முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, நூக்கல், பீர்க்கு, புடலை, பாகல் போன்ற காய்கறிகளை பயிரிட்டு வருகிறேன். பட்டர்பிளை ஸ்பரிங்ளர் மூலம் தண்ணீர் விடுவதால் உயரமான செடிகள் பயிர் செய்வதைத் தவிர்த்து, உயரம் குறைவான செடிகளை மட்டுமே பயிர் செய்கிறேன். இதுவரை ஒரு டன்னுக்கும் மேலான முள்ளங்கியை அறுவடை செய்து அக்ஷயாவிற்கு கொடுத்துள்ளேன்."

இயற்கை முறையில் சாகுபடி

"மக்கிய தொழு உரம், நன்கு மக்கிய மர அறுவைத்தூள் மற்றும் சாம்பலை 3:2:1 என்ற விகிதத்தில் கலந்து பாத்தியமைத்துள்ளேன். இது மூடாக்காகவும் செயல்பட்டு களைகளையும் கட்டுப்படுத்துகிறது. மாதம் இருமுறை ஜீவாமிர்தம் தருகிறேன், பாரிமரிப்பு அதிகமாகத் தேவைப்படுவதில்லை. விதைக்கும் போதும் அறுவடை செய்யும் போதும் மட்டும் தன்னார்வத் தொண்டர்கள் உதவுகிறார்கள்.

நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைக்கவும், நூற்புழுவைக் கட்டுப்படுத்தவும் செண்டு மல்லி பயிர் செய்திருந்தேன், அதில் 30 கிலோ வரை பூக்கள் கிடைத்தது.

ஈஷாவிற்குள் மணக்கும் மூலிகைத் தோட்டம் - ஒரு விசிட்!, ishavirkul manakkum mooligai thottam oru visit

ஒவ்வொரு வீடுகளிலும் மூலிகைத் தோட்டம்

"இந்த தோட்டத்தில் வந்து சிறிது நேரம் வேலைசெய்வது மனதுக்கும் உடலுக்கும் உற்சாகத்தை தருகிறது. தோட்டதிற்கு வந்தால் வேறு உலகத்தில் இருப்பது போல் உணர்வேன். துளிசியின் மணமும், பூக்களின் சுகந்தமும் மனதுக்கு இனிமையையும், உடலுக்கு புத்துணர்ச்சியையும் தருகிறது." என்று தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டு விவசாயிகளுக்கு நல்ல ஒரு தகவலையும் தந்தார் மா சந்திரஹாசா.

விவசாயிகள் எந்த பயிரை நடவு செய்தாலும் சிறிய அளவில் மூலிகைகளையும் ஊடுபயிராக செய்ய வேண்டும், இதனால் ஒரு கணிசமான வருமானம் அவர்களுக்கு கிடைக்கும். பெரிய அளவில் மூலிகைகளை உற்பத்தி செய்து அதை விற்பனை செய்வது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ஆனால் உள்ளூர்த் தேவைக்கேற்ப குறைந்த அளவு மூலிகைகளை உற்பத்தி செய்யும் போது ஒரு கணிசமான வருமானத்தை நிச்சயம் ஈட்ட முடியும். அதனால் விவசாயிகள் அவசியம் ஒரு சில மூலிகைகளையாவது பயிர் செய்ய வேண்டும். இப்படி விவசாயிகளின் வருமானத்திற்கு ஒரு வழியையும் காட்டியுள்ளார் அவர்.

சிறு உடல் உபாதை என்றாலும் மருத்துவமனைக்கு செல்லும் இக்காலத்தில் யாரும் மூலிகைகளைப் பற்றி நினைப்பதில்லை. வீட்டில் ஒரு சில மூலிகைகளை வளர்த்து அதில் கிடைக்கும் இலைகளை உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் ஆரோக்கியம் பெறுவதோடு மருத்துவச் செலவுகளும் குறையும், மேலும் வீட்டிலேயே சுத்தமான காற்றும் கிடைக்கும். பாரம்பரியமாக நாம் பயன்படுத்திய மூலிகைகளை பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அவர்களை வீட்டுத் தோட்டங்களில் மூலிகைகள் வளர்க்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்.

இயற்கையோடு இயைந்து வாழ்வதும் ஒரு யோகம்தான் என்று கூறாமல் கூறிய மா சந்திரஹாசா அவர்களுக்கு ஈஷா விவசாயக்குழு நன்றிகளை தெரிவித்துக் கொண்டு விடைபெற்றது.

தொகுப்பு:
ஈஷா விவசாய இயக்கம்: 83000 93777

 

'பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1