சத்குருவின் பிறந்த நாள் துவங்கி, சென்னை மெகா வகுப்பு, குருவின் மடியில், சத்குருவின் ஞானோதய நாள் என செப்டம்பர் மாதம் முழுக்க தொடர்ந்து பல நிகழ்வுகள் நமக்காக காத்திருக்க, சத்குருவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இங்கு விரிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்!

சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பர் 3ம் தேதியன்று, ஆண்டுதோறும் ஆசிரமத்தில் கொண்டாட்டங்களோடு சத்குருவின் சத்சங்கமும் நடைபெற்று வருகிறது. தங்கள் குருவின் பிறந்த நாளைக் கொண்டாடிய மகிழ்ச்சியையும், அவரின் அருளுரையைக் கேட்பதற்கான வாய்ப்பையும் பல்லாயிரம் மக்களுக்கு நேற்றைய இந்த நிகழ்ச்சி வழங்கியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பொதுவாக பிறந்த நாள் என்பது நாம் கடந்து செல்லும் மைல்கற்களாகத்தான் பார்க்கிறோம். நாம் இதுவரை செய்தது என்ன? இனி செய்யவிருப்பது என்ன? என எண்ணிப் பார்ப்பதற்கான ஒரு நாள். அவதாரப் புருஷர்களான ராமர், கிருஷ்ணர், புத்தர் போன்றோரின் பிறந்த நாட்களை நாம் கொண்டாடுவது, அவர்கள் வாழ்க்கையை முன்மாதிரியாய் கொண்டு, அவர்களின் வழியைப் பின்பற்றுவதற்கே!

சேவாதாருக்கு அன்னதானம்...

ஆசிரமத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2000 சேவாதார்களுக்கு அன்னதானமும் வேட்டி-சேலைகளும் வழங்கப்பட்டன. தியானலிங்கப் பணிகள் துவங்கி, சமீபத்தில் பிரதிஷ்டையான சூர்யகுண்டம் வரை, இவர்களது கரங்களின் துணையில்லாமல் எதுவும் சாத்தியமில்லை. தொலைதூர மாநிலங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் ஆசிரமத் திருப்பணிகள் நிறைவேறத் துணை நிற்கும் சேவாதார்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நேற்றைய நிகழ்வுகள் அமைந்தன.

மாத சிவராத்திரியாக அமைந்ததால் தியானலிங்கத்தில் நடைபெற்ற 'பஞ்சபூத ஆராதனை', மேலும் ஒரு சிறப்பம்சமாக அமைந்தது.

"நால்வருக்கு நன்றி!" - பக்தி கதை

சரியாக 8 மணியளவில் ஆதியோகி ஆலயம் வந்த சத்குருவிற்கு பிரம்மச்சாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமான நிகழ்ச்சியின் இடையில் சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரால் எழுதி இசையமைக்கப்பட்ட "அலை... அலை..." என்ற பாடலின் புதிய வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது. அழகியக் காட்சிப் பதிவுகள் நிறைந்த அந்த வீடியோ அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் கலந்து கொண்டார்.

முதலில் முத்தாய்ப்பாக, ஹோம் ஸ்கூல் மாணவர்களின் மேற்கத்திய நடையிலமைந்த இசை நிகழ்ச்சி, அங்கிருந்த அனைவரையும் கரவொலியோடு துள்ளலாட்டமிடச் செய்தது. அடுத்ததாக, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் "நால்வருக்கு நன்றி" என்ற தலைப்பில் அரங்கேறிய பக்திக் கதாகாலாக்ஷேபம், "சமயக் குரவர்கள்" என்றழைக்கப்படும் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களின் கதையை விளக்குவதாய் அமைந்தது.

இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதையும், எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதையும் கூறும் இந்த நால்வரின் வாழ்க்கை வரலாறு, இசையும் கதையும் கலந்த வடிவில் சம்ஸ்கிருதி மாணவர்களால் வழங்கப்பட்டது.

ஞானியின் வார்த்தைகள்...

தொடர்ந்து, சத்குருவின் அருளுடன் துவங்கிய சத்சங்கத்தில் அரசியல் தொடங்கி உணவுமுறை வரைப் பல்வேறு தரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சத்குரு, "நீங்க போன பிறவியில தெலுங்கு மொழி பேசுற குடும்பத்துல பிறந்தீங்க, இந்த பிறவியிலயும் தெலுங்கு மொழி பேசுற குடும்பத்துல பிறந்திருக்கீங்க. ஏன் நீங்க தமிழ் குடும்பத்துலயே பிறந்திருக்கலாமே?" என ஒருவர் கேட்க, "பிறந்தது வேற இடம்னாலும் உயிர் இங்கதான் இருக்கு. தமிழ் மக்களோட உயிர் தீவிரமா இருக்கு," என்று கூற அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது.

கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பின்னிய நிலையிலான இரட்டை பாம்புச் சிலைகளைப் பற்றியக் கேள்விக்கு அதன் விஞ்ஞானத்தை விளக்கும்படியாக விரிவாகப் பதிலளித்தார் சத்குரு. மேலும், மழை வெள்ளத்தால் பேரழிவைச் சந்தித்த கேதாருக்கு இனி செல்வதே அபாயம் என்ற வகையில் செய்திகள் பரப்பப்படுவதாகவும் அதனை பொய்யாக்கும் வகையில் அடுத்த வருடம் 1500 பேருடன் கேதார் சென்று வரப்போவதாகவும் கூறிய சத்குரு, "நீங்கள் என்னுடன் வருவீர்களா?" என மக்களை நோக்கிக் கேட்க, "ஆம்!" என்றபடி கை உயர்த்தி ஆர்ப்பரித்தனர் அனைவரும்.

ஆம் என்று கை உயர்த்தினால் போதாது, கால்களை தயார் செய்யுங்கள் என்று தன்னுடைய நகைச்சுவை ததும்பும் பாணியில் அவர் சொல்ல மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து வருவோம் என்றது அரங்கம். தனது கரங்களால் தொட்டு, ஆசீர்வதித்து அனுப்பிய இனிப்புகள் அரங்கத்திலிருந்த அனைவரின் கரங்களைச் சென்றடைந்த வேளையில், அருள் வழங்கி விடைபெற்றார் சத்குரு.