ஈஷாவில் களைகட்டிய மூன்றாவது உலக யோகா தினம்... ஒரு பார்வை!
ஈஷாவில் 112அடி உயர ஆதியோகியின் முன்னிலையில், மூன்றாவது உலக யோகா தினம் நேற்று (ஜூன் 21) களைகட்டியது! விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சத்குரு ஆற்றிய உரைகளின் தொகுப்போடு, விழா நிகழ்வுகளின் சில துளிகள்...
 
 

ஈஷாவில் 112அடி உயர ஆதியோகியின் முன்னிலையில், மூன்றாவது உலக யோகா தினம் நேற்று (ஜூன் 21) களைகட்டியது! விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சத்குரு ஆற்றிய உரைகளின் தொகுப்போடு, விழா நிகழ்வுகளின் சில துளிகள்...

கோவை ஈஷா யோக மையத்தில் 3வது உலக யோகா தினக் கொண்டாட்டம், ஜூன் 21 காலை 7 மணிக்கு விமரிசையாக நிகழ்ந்தேறியது. வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள், கோவையை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள், எல்லைப் பாதுகாப்புப் படை வீர்ர்கள் மட்டுமல்லாது கோவை நகரிலிருந்தும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் பரவலாக கலந்துகொண்டனர்.

சத்குரு அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவ் தலைமையேற்க, மத்திய கலாச்சாரம் & சுற்றுலாத் துறை இணை அமைச்சர் டாக்டர். மகேஷ் ஷர்மா சிறப்பு விருந்தினராய் கலந்துகொண்டார்.

யோகத்தின் மூலவனாம் ஆதியோகியின் 112 அடி உயர திருவுருவச் சிலைக்கு முன், துவங்கிய நிகழ்ச்சியில், மாண்புமிகு ஆளுநர் மற்றும் அமைச்சர் இருவருக்கும் சத்குரு அவர்கள் ஆதியோகி உருவம் அச்சிடப்பட்ட பொன்னாடைகளை அணிவித்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து, அனைவருக்கும் யோகாவை கொண்டுசேர்க்கும் ஈஷாவின் முயற்சிகளின் குறியீடாக யோக வேள்வியை ஆளுநர் அவர்கள் தீமூட்டி துவங்கி வைத்தார்.

அமைச்சர் அவர்கள் பேசும்போது...

தான் ஒரு தொழில்முறை மருத்துவராக 30 வருடத்திற்கும் மேல் பணியாற்றியுள்ளதால் ஆரோக்கியமான வாழ்விற்கு யோகாவின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் தான் அறிந்திருப்பதாக தெரிவித்தார்.

ஈஷா யோக மையத்தின் சூழலும் அமைப்பும் தெய்வீக உணர்வை தந்ததாக தெரிவித்த அமைச்சர், ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களை பார்க்கையில் உற்சாகம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். கடவுள் பலவித உயிர்களைப் படைத்திருந்தாலும், அவரின் மிகச் சிறந்த படைப்பு மனிதன்தான். ஆனால், அந்த மனித இனம் தற்போது பலவித சிக்கலில் உள்ளது. மனிதர்களை முறைப்படுத்துவற்காக சத்குருவை கடவுள் அனுப்பி வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார். தனி மனிதர்களை வளப்படுத்தும் வகையில் சத்குரு மேற்கொள்ளும் அபார முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

தமிழக ஆளுநர் அவர்கள் பேசுகையில்...

ஈஷா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், 112 அடி உயர ஆதியோகி திருமுகம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது, ஈஷா மையம் ஏற்படுத்தியுள்ள பெருமைமிகு நிகழ்வு எனச் சொன்னார்.

"ஈஷாவிலுள்ள ஒவ்வொருவரும் உற்சாகமாய் இருப்பதாகவும், இந்தியாவின் கலாச்சாரத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சத்குரு அவர்கள் தலைசிறந்த அடையாளமாக திகழ்கிறார் என்றும் புகழாரம் சூட்டினார். மாறுபட்ட பார்வையும் சிந்தனையும் கொண்ட யோகியான சத்குரு அவர்கள், தற்போதைய சமூகத்திற்கு ஏற்றவாறு, பாரம்பரிய யோகாவை "இன்னர் இஞ்சினியரிங்" என்ற பெயரில் வழங்குவது சாலப்பொருத்தமாய் இருப்பதாகவும், சத்குருவின் இச்செயல் காலத்தின் தேவை என்றும் குறிப்பிட்டார்.

"இன்றைய சூழலில் அனைவரும் மன அழுதத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையிலிருந்து வெளிவர யோகா சிறந்த துணையாய் இருக்கும். ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் உண்டாகும் நீரிழிவு போன்ற நோய்களை சரிசெய்து, ஆரோக்கியமான இந்தியாவிற்கு யோகா வழிவகுக்கும். இளைஞர்கள் பல்வேறு தீயப் பழக்கங்களுக்கு அடிமையாவதை தடுக்க யோகா அவசியமாகிறது. நல்வழிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் 5000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஈஷா யோகப் பயிற்சிகள் வழங்கவிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஈஷா யோக சென்று சேரவேண்டும் என்று விரும்புகிறேன்," என்றார்.

ஆளுநர் அவர்கள் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில், யோகமுறைகளின் தூய்மை மாறாமல் உலகிற்கு வழங்கக்கூடிய யோக ஆசிரியர்களின் படையை உருவாக்குவது அத்தியாவசிய தேவையாய் இருப்பதாக சொன்னார். யோகா ஒரு மனிதனுக்குள் அனைத்தையும் அரவணைத்துச் செல்லக்கூடிய குணத்தை ஏற்படுத்தி சாதி, மத, தேச பிரிவினைகளை அகற்றுகிறது. இதன்மூலம், உலக அமைதிக்கு வித்திடுகிறது என்றார்.
தமிழகம் மற்றும் மகாராஷ்டிரத்திலுள்ள 40 பல்கலைகழகங்களுக்கு வேந்தராக இருப்பதால், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் யோகா சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஈஷா அறக்கட்டளை போன்ற நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் சத்குரு பேசும்போது…

உள்நிலை நல்வாழ்விற்கான கருவி ஒவ்வொரு மனிதரிடமும் இருப்பது அவசியம் என்று கூறிய சத்குரு, இந்தியா உலகிற்கு வழங்கிய கொடை, யோகா என்று குறிப்பிட்டார்.

சிறந்த நாட்டினை உருவாக்க, முதலில் சிறந்த மனிதர்களை உருவாக்கவேண்டும் என்பதை உணர்த்திய சத்குரு. "செடி, மாடு, மரம் வளர்க்கும் விஞ்ஞானத்தை நாம் அறிந்து வைத்துள்ளோம், அவை பொருளாதாரம் சார்ந்தது என்பதால்... ஆனால், ஒரு மனிதன் முழுமை நிலைக்கு வளர்வது எப்படி என்பதை நாம் அறிந்துகொள்வதுதான் மிகமிக முக்கியம். அதற்கான தொழில்நுட்பம்தான் யோகா," என்றார்.

"உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை முன்னெடுக்கும் செயல்பாடுகளில் இவ்வருடம் குழந்தைகளுக்கும் இராணுவத்தினருக்கும் இலவச யோகா கற்றுத்தரப்படும் என்றார். தமிழகத்தில், இவ்வருட இலக்காக 5000 பள்ளிகளில் யோகா சொல்லித் தரப்படும் என்றார். அத்துடன் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் யோகா வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

“தங்கள் நல்வாழ்வினை மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் அது பிறர் கைகளுக்கு சென்றுவிடும் என்றவர், ஒரு தேசத்தை நம்மால் உருவாக்க முடியாது, அதிலுள்ள மனிதர்களை மட்டுமே நாம் சிறப்பானவர்களாக உருவாக்கி, அதன்மூலம் நல்லவொரு தேசத்தை கட்டமைக்க முடியும். மிகச் சிறந்த மனிதர்களை உருவாக்கும் ஒரு தொழில்நுட்பம் யோகா," என்றார்.

"தமிழ்நாட்டில் தலைவர் முதல் குழந்தை வரை அனைவருக்கும் யோகா சென்றுசேர வேண்டும். உலக யோகா தினம் என்பது ஒருநாள் கொண்டாட்டமாக இல்லாமல், யோகா நமது வாழ்கைமுறையாக மாறவேண்டும்," என்பதை சத்குரு வலியுறுத்தினார்.

சத்குரு வடிவமைத்துள்ள உப-யோகப் பயிற்சிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கற்றுத்தரப்பட்டது. யோகா பயின்றுவரும் ஈஷாவின் சுற்றுவட்டார மலைவாழ் கிராமக் குழந்தைகள், எல்லைப் பாதுகாப்பு படையினர், இராணுவ வீரர்கள் ஆகியோர் ஆளுநர், அமைச்சர், சத்குரு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இவ்வாண்டு நமது நோக்கம் குழந்தைகளுக்கும் இராணுவத்தினருக்கும் யோகா கற்பிப்பது என்பதற்கு அடையாளமாக இது அமைந்தது.

தேசம் முழுதும்...

பயிற்சி அளிக்கப்பட்ட யோக ஆசிரியர்களின் மூலமும், தன்னார்வத் தொண்டர்களின் மூலமும் பல இடங்களில் யோக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தேசம் முழுவதிலுமுள்ள பெருநிறுவனங்களில் யோக வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இவ்வருடத்தின் துவக்கமாக, தேசிய கப்பற்படை, இஸ்ரோ - ஸ்ரீஹரிக்கோட்டா, எல்லைப் பாதுகாப்பு படையினர் போன்ற பல இடங்களில் யோக வகுப்புகள் நடத்தப்பட்டன.

சென்னையில்...

சென்னையில் நடைபெற்ற ஈஷாவின் உலக யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு மாண்புமிகு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு. அசோக் கஜபதி ராஜு அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார். இதில் 3500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் மட்டுமே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் யோகா தினத்தன்று உப-யோகா பயிற்சிகள் கற்றனர்.

சென்னையில் தேசிய பாராலிம்பிக் கூடைப்பந்து அணியினருக்கு உப-யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் முன்னாள் போர் வீரர்களும் அடங்குவர். தமிழகத்திலுள்ள பல சிறைச்சாலைகளில் ஈஷா யோகப் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழக சிறைச்சாலைகளில் சிறப்பு ஈஷா யோகா வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

உலகம் முழுவதும் ஈஷா உப-யோகா வகுப்புகள்

சர்வதேச யோகா தினம் அளித்த உற்சாகத்தில், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் உலகம் முழுவதும் பல இடங்களில் உப-யோகா வகுப்புகளை நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, அபுதாபி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜெர்மனி, மலேசியா, ஆம்ஸ்டர்டாம், பெல்ஜியம், கேம்பிரிட்ஜ், ஸ்காட்லாந்து, ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து உட்பட உலகின் அனைத்து கண்டங்களுக்கும் தங்கள் சேவையை விரிவடையச் செய்துள்ளார்கள்.

லண்டனிலுள்ள இந்திய தூதரகத்திலும் யோக வகுப்புகள் நடத்தப்பட்டன.

எல்லைப் பாதுகாப்பு படையுடன் சிறப்பு ஒப்பந்தம்

எல்லைப் பாதுகாப்பு படையினருடன் ஈஷா அறக்கட்டளை ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி, இரண்டரை லட்சம் எல்லைப் பாதுகாப்பு படை வீர்ர்களுக்கு, சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலம் அறிவியல் முறைப்படி யோகா சொல்லித் தரப்படும். துணை இராணுவப் படையினருக்கு மிகப் பெரிய அளவில் ஹடயோகா வகுப்புகளை நடத்த ஈஷா அறக்கட்டளை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆயுஷ் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட யோக நிறுவனமாக விளங்கும் ஈஷா அறக்கட்டளை, அமைச்சகம் ஏற்படுத்தியுள்ள வழிகாட்டுக் குழுவிலும் அங்கம் வகிக்கிறது. முதல் இரு ஆண்டுகளில் தன் யோக வகுப்புகள் மூலம் சில கோடி மக்களை சென்றடைந்த ஈஷா அறக்கட்டளை, இவ்வருடம் இராணுவத்தினரையும் குழந்தைகளையும் சென்றடையும் உறுதியோடு செயல்பட்டு வருகிறது.


ஆசிரியர்:

உங்கள் வீட்டிலிருந்தபடியே சத்குரு வழங்கும் உப-யோகப் பயிற்சிகளை கற்க, உங்கள் தினசரி வாழ்வில் யோகாவை ஓர் அங்கமாக்கிக் கொள்ள Sadhguru App சுலபமான வழியமைத்து தருகிறது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1