மாநில அளவில் அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்று, தேசிய அளவில் முன்னேறி சாதனை புரிந்துள்ள ஈஷா வித்யா பள்ளி மாணவன் குறித்தும், மாணவனின் அறிவியல் படைப்பை பற்றியும் அறிந்துகொள்ள... சில வரிகள் இங்கே!

ஈஷா வித்யா பள்ளிகள் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிக்கும் வழக்கமான கல்விக் கூடங்களாக இல்லாமல், மாணவர்களை விளையாட்டு, கலை மற்றும் அறிவியல் நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்து, மாணவர்களின் அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கிவருகின்றன. அந்த வகையில், நாகர்கோயில் ஈஷா வித்யா பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவனான ரி.ஹரிஷ் பெற்றுள்ள இந்த வெற்றி அதற்கு ஒரு சான்றாக உள்ளது.

டிசம்பர் 3ஆம் தேதி பெரம்பலூரில் மாநில அளவில் நடந்த, 6-8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி போட்டியில் மாணவன் ஹரிஷ் தனது அறிவியல் படைப்பிற்காக முதல் பரிசினை வென்றுள்ளான். இதன் மூலம் டில்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை ஈஷா வித்யா பெற்றுள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில் கொட்டிய பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கிடையிலும் பலவித சிரமங்களைத் தாண்டி பெரம்பலூரில் நிகழ்ந்த இந்த அறிவியல் கண்காட்சிப் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் ஈஷா வித்யா பள்ளி மாணவன் ஹரிஷின் ‘மின்தூண்டல் சூடேற்றி’ (Induction heater) முதற்பரிசை வென்றது. இதன்மூலம் உலோகங்களை சுற்றுச்சூழல் மாசின்றி உருவாக்க முடியும். மாணவனின் அந்த புதுமையான அறிவியல் படைப்பைப் பாராட்டி மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு.வீரமணி அவர்கள் பரிசையும் சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

முன்னதாக நவம்பர் மாதம் நாகர்கோயிலில் நிகழ்ந்த மாவட்ட அளவிலான போட்டியில் ஹரிஷ் முதற்பரிசைப் பெற்று, தற்போது மாநில அளவிலும் முதற்பரிசைப் பெற்றதன் மூலம் டில்லியில் நிகழும் தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளவிருக்கிறான்.

ஏன், எதற்கு, எப்படி என்று கேட்பதே அறிவியலை நாம் புரிந்துகொள்வதற்கு வழிவகுக்கும் அணுகுமுறையாக இருக்கும். அப்படிக் கேட்பவர்களால் மட்டுமே அறிவியலில் மட்டுமல்ல, ஆன்மீகத்திலும் புரட்சி செய்யமுடிந்துள்ளது. மாணவன் ஹரிஷிற்கு இந்த சாதனை புரிவதற்கு தூண்டுதலாக அவனது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஈஷா வித்யா பள்ளி ஆசிரியர்கள் பக்கபலமாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து மாணவன் ஹரிஷ் கூறும்போது...

எனது அம்மாவும் எனது உறவினரான ரகு அண்ணாவும் இதுபோன்ற ஒரு படைப்பை உருவாக்குவதற்கான யோசனையைச் சொன்னார்கள். மின்தூண்டல் சூடேற்றியான என்னுடைய இந்த படைப்பு, உலோகங்களை 10 முதல் 15 நொடிகளுக்குள் சூடாக்கி எந்தவித சுற்றுச்சூழல் மாசுமின்றி உருக்கவல்லது. இதை நான் உருவாக்குவதற்கு ரகு அண்ணா எனக்கு பெரும் உதவியாக இருந்தார். அதோடு, எனது பெற்றோர்கள் எனக்கு இதுகுறித்த செயல்பாடுகளைப் பற்றி விவரித்தனர்.

இதை உருவாக்கி முடித்தபோது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்த படைப்பை பற்றி உலகம் முழுவதிலுள்ள அனைவரும் அறிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இதற்காக நான் முதற்பரிசு பெற்றபோது இருந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது! இதற்காக நான் எனது நன்றிகளை பெற்றோருக்கும், ரகு அண்ணாவிற்கும் அனைத்திற்கும் மேலாக என்னை இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு எல்லாவகையிலும் தூண்டுகோலாக இருந்த எனது பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈஷா வித்யாவிற்கு உதவுங்கள்:

மாணவன் ஹரிஷின் இந்த அறிவியல் படைப்பை உலகம் முழுவதிலும் கொண்டு செல்வதற்கும், ஈஷா வித்யா பள்ளிகளிலுள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழுவினருக்கு தேவையான மடிக்கணினிகளை வழங்கும் விதமாகவும் குளோபல் கிவ்விங் என்ற இணையத்தளத்தின் மூலமாக டிசம்பர் மாதத்தில் நன்கொடை திரட்டும் முயற்சியில் ஈஷா வித்யா ஈடுபட்டுள்ளது. நீங்கள் உங்கள் நன்கொடைகளை https://www.globalgiving.org/projects/ishavidhya/ என்ற இணையத் தொடர்பின் மூலமாக வழங்க முடியும்!

ஈஷா வித்யா பள்ளிகளில் பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்களும்தான் பயில்கிறார்கள். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தரமான ஆங்கில அறிவும் கணினி அறிவும் வழங்கும் நோக்கிலும், ஆனந்தமான கல்வி சூழலை உருவாக்கித் தரும் நோக்கிலும் ஈஷா வித்யா இயங்கிவருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் அரசு பள்ளிகளையும் தத்தெடுத்து, ஆசிரியர்களை வழங்குதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வழங்குதல் எனப் பலவித முயற்சிகளை ஈஷா வித்யா மேற்கொண்டு வருகிறது.