ஈஷா வித்யா கல்விமுறையில் உள்ள வித்தியாசம்...

“அதே மெட்ரிகுலேஷன் சிலபஸ் தானே... அப்புறம் என்ன வித்யாசம் ஈஷா வித்யாவுல?” இது பொதுப் பார்வையிலிருந்து வரும் கேள்விதான்! இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் ஒரு பதிவாக, லண்டன் கல்விமுறையில் பயிலும் மாணவி லோகமாதங்கி அவர்களின் இந்தப் பகிர்வு அமைகிறது! அப்படியென்னதான் வித்தியாசம் ஈஷா வித்யா கல்விமுறையில்... தொடர்ந்து படித்தறியுங்கள்!
 

“அதே மெட்ரிகுலேஷன் சிலபஸ் தானே... அப்புறம் என்ன வித்யாசம் ஈஷா வித்யாவுல?” இது பொதுப் பார்வையிலிருந்து வரும் கேள்விதான்! இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் ஒரு பதிவாக, லண்டன் கல்விமுறையில் பயிலும் மாணவி லோகமாதங்கி அவர்களின் இந்தப் பகிர்வு அமைகிறது! அப்படியென்னதான் வித்தியாசம் ஈஷா வித்யா கல்விமுறையில்... தொடர்ந்து படித்தறியுங்கள்!

லண்டன் பல்கலைக்கழகத்தின் பிரிக்பேக் கல்லூரியில் இறுதியாண்டு இளங்கலை வணிக மேலாண்மைப் பாடத்தைப் பயிலும் மாணவி ‘லோகமாதங்கி’. இவர் சமீபத்தில் (செப்டம்பர் 2015) கோவை ஈஷா வித்யா பள்ளிக்கு வந்திருந்தார். மேற்கத்திய கல்விமுறையில் கற்று வளர்ந்த அவரது பார்வையில் ஈஷா வித்யாவின் கல்விமுறை எந்தவிதத்தில் மாறுபட்டுள்ளது என்பதையும், எவ்வளவு சிறப்பானது என்பதையும் இங்கே பகிர்கிறார்!

லோகமாதங்கி:

இங்கிலாந்து கல்விமுறையில் படித்து வரும் நான் ‘நல்ல கல்வி’ என்றால் என்னவென்பதையும் கல்வி மாணவர்களின் எதிர்காலத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் நன்கு அறிந்திருந்திருப்பதாக நினைத்திருந்தேன். எனவே ஈஷா வித்யா பள்ளியைப் பற்றி கேள்விப்பட்டதும் நான் கோயமுத்தூர் பள்ளிக்கு சென்று, இரண்டு வாரங்களுக்கு அங்கு தங்கி, தன்னார்வத் தொண்டு புரிய வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். ஈஷா வித்யா பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தல் அல்லது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்து அதன்மூலம் ஈஷா வித்யாவைப் பற்றிய விழிப்புணர்வு இயக்கத்தை சமூக வலைதளங்களின் வழியாக செய்வதென்ற எண்ணத்தில் இருந்தேன்.

இந்த குழந்தைகளுக்கு எளிமையான மகிழ்ச்சிகரமான கற்றல் அனுபவமானது ஈஷா வித்யாவின் மூலம் வழங்கப்பட்டுவருவதை உணர்ந்துகொண்டேன்.

நான் ஈஷா வித்யா பள்ளியை அடைந்தவுடன், அது எந்த அளவிற்கு சிறப்புமிக்கதாய் மிளிர்கிறதென்பதையும், மாணவர்களின் எதிர்காலத்திற்கான அதிஅற்புத இலக்குகளைக் கொண்டுள்ளது என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. நான் அங்கு கற்றுக்கொடுப்பதற்கென்று ஒன்றுமில்லை. ஆனால், கற்றுக்கொள்ளவும் கவனிக்கவும் அநேகம் இருந்தன. அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் ஈடுபாடு, குழந்தைகளின் ஆர்வம் என ஈஷா வித்யாவில் ஆனந்தமாகக் கற்றுக்கொள்ளும் செயல்முறையில் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை வழங்குவதைப் பார்த்து மெய்சிலிர்த்தேன். எனவே என்னால் முடிந்தவரை அங்கு நடைபெறும் செயல்பாடுகளை ஒளிப்பதிவு செய்வதில் கவனம் செலுத்தினேன்.

முழுமையான ஒரு கல்விமுறை

முதலில், பள்ளியிலிருந்த அனைவரையும் இணைத்துக்கொள்ளும் தன்மையானது என்னை வெகுவாகக் கவர்ந்தது. உடனடியாக நான் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். அப்போது ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் பேசிய உயர்தர ஆங்கில பேச்சு, என்னை வியப்பில் ஆழ்த்தியது! நான் அத்தகைய ஒரு கிராமப்புற சூழலிலுள்ள பள்ளியில், அப்படிப்பட்ட ஆங்கில மொழித்திறம் மிக்க மாணவர்களை எதிர்பார்த்திருக்கவில்லை. அங்கு கற்றுக்கொடுக்கப்படும் பாடங்கள் பாடத்திட்டத்திற்கு உட்பட்டு இருந்தாலும், கற்பிக்கப்படும் விதமானது முற்றிலும் மாறுபட்டது. கலந்துரையாடல் மூலமாகவும் ஆவலைத் தூண்டும் விதத்திலும் மேம்பட்ட முறையில் பாடங்கள் கற்றுத்தரப்படுவதைப் பார்க்கமுடிந்தது.

குழந்தைகள் தங்களுடைய குறிப்பிட்ட திறமையை மேம்படுத்தும் விதமாக கற்றல் உபகரணங்களை அவர்களே தேர்ந்தெடுத்து, அதைப் பயிற்சி செய்து ஈடுபடும் வகையில் செயல்முறைகள் அமைந்திருந்தன. குழந்தைகள் தாங்கள் மேற்கொண்ட பயிற்சியைப் பூர்த்தி செய்தவுடன், தங்களது ஆசிரியரை அழைத்து பார்வையிடும்படி வேண்டுகிறார்கள். ஆசிரியரின் உதவியோடோ அல்லது உதவியின்றியோ குழந்தைகள் அந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் அடுத்த பயிற்சிக்குச் செல்கிறார்கள். இந்த சுய சிந்தனை மிகுந்த கற்றல் வழிமுறையானது, குழந்தைகளின் இயல்பான கற்றல் ஆர்வத்தைத் தூண்டி, தங்களின் அறிவு தாகத்தை அதிகரிக்கச் செய்கிறது.

மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் பேசிப் பார்த்தபோது, உலக அளவிலும் இந்திய அளவிலும் உள்ள பல்வேறுபட்ட சமூகங்களில் எதிர்கொள்ளப்படும் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் ஏற்றதாழ்வுகளைப் பற்றிய அறிவினை அவர்கள் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. பள்ளியிலுள்ள சாரணர் இயக்க உறுப்பினர்களிடம் பேசியபோது, அவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளால் உண்டாகும் சமுதாய நன்மைகளைப் பற்றி எடுத்துரைத்தனர். அதில் ஒரு மாணவர், இயற்கை சுற்றுச்சூழலைக் காக்கக் கூடிய தனது புதுமையான ஒரு படைப்பை முன்வைத்து விளக்கினார்.

பள்ளி வாழ்வில் ஒன்றிணைந்த யோகா!

ஈஷா வித்யா மாணவர்களின் பள்ளி நாட்களில் அன்றாட செயல்முறையாக ஒன்றுகலந்துள்ளது ‘யோகா’! அங்கு யோகா என்பது வெறும் உடற்பயிற்சி செயல்முறையாகவோ அல்லது விளையாட்டுப் பாடமாகவோ கற்பிக்கப்படுவதில்லை. ஒரு முழுமையான தனி வகுப்பு நேரம் யோகாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அறையின் சுவர்களில் விளையாட்டுகள் பற்றியும் அவற்றை சமூக இணக்கத்துடன் எப்படி விளையாடுவது என்பதும் எழுதப்பட்டிருந்தது. விளையாட்டுக்கான வகுப்பு நேரத்திலும், உணவு இடைவேளைகளிலும் மாணவர்கள் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையுடனும் ஒருவருக்கொருவர் நட்புறவுடனும் நேர்மையாகவும் விளையாடுகிறார்கள். பள்ளி மாணவர்களிடம் காணப்படும் இந்த உண்மையான நட்புறவும் இயற்கையோடு இயைந்த இயல்பான பள்ளியின் கோட்பாடுகளும், இணைத்துக்கொள்ளும் தன்மையையும் ஒற்றுமையையும் அங்கு ஓங்குவதற்கு வகைசெய்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக அங்கு நான் பார்த்ததில், என் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு விஷயம் என்னவென்றால், ஈஷா வித்யா பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு எந்தவித அழுத்தத்தையும் தருவதில்லை, அதுபோல் அவர்கள் அறிவைத் திணிப்பதுமில்லை. அவர்கள் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் செயல்முறையில் நூறு சதவிகிதம் உடனிருக்கிறார்கள். அவர்கள் ‘நாங்களும் சேர்ந்து கற்றுக்கொள்கிறோம்!’ என்று சொல்கிறார்கள். மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதைப்போலவே, ஆசிரியர்களும் மாணவர்களுக்கு மதிப்புகொடுக்கிறார்கள்.

‘நமஸ்காரம்’ என்றபடி ஈஷா வித்யா மாணவர்கள் வணக்கம் செலுத்தி ஒருவரையொருவர் அணுகுகிறார்கள். இதனால் இயல்பாகவே ஒரு பக்தியுணர்வும் அன்பும் அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வந்துவிடுகின்றன. பள்ளியின் மற்ற பணியாளர்களும் அன்றாட பள்ளி நாட்களின் செயல்பாடுகளில் முக்கியமான தங்களது பங்களிப்பை வழங்குகிறார்கள். உதாரணமாகச் சொல்லவேண்டுமானால், ஊட்டச் சத்துமிக்க உணவை ஒவ்வொருநாளும் தயாரித்து, கனிவோடு பரிமாறும் சமையல் செய்பவர்களின் பக்தியைச் சொல்லலாம். நான் அங்குள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் நாளுக்கு நாள் ஈடுஇணையற்ற மனிதர்களாகப் பரிமாற்றமடைந்து வருவதைக் கண்டேன்.

கல்விமுறையில் ஈஷா வித்யாவின் தாக்கம்!

இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் நிலவும் கல்விச்சூழலை கவனித்ததில், இந்த குழந்தைகளுக்கு எளிமையான மகிழ்ச்சிகரமான கற்றல் அனுபவமானது ஈஷா வித்யாவின் மூலம் வழங்கப்பட்டுவருவதை உணர்ந்துகொண்டேன். கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கல்வியை மட்டுமல்லாது, உயர்கல்வியையும் நல்ல வேலை வாய்ப்பையும் பெற்றிடும் வகையில் ஈஷா வித்யா வழிவகை செய்வதால், மாணவர்கள் தங்கள் ஏழ்மையான சமுதாய நிலையிலிருந்து முன்னேறுவதற்கு தொடர்ந்து துணைநிற்கிறது. மேலும், பெண்களுக்கு கல்வி வழங்குவதிலும் ஈஷா வித்யா தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளது.

அதுவரை நான் கற்றறிந்த குறுகிய கண்ணோட்டத்துடன் கூடிய கல்விமுறையை முன்னிறுத்தி அங்கு தன்னார்வத் தொண்டு புரிய புறப்பட்ட நான், நவீன கல்விமுறையில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரத் தேவையிருக்கிறது என்பதை அங்கு சென்றபின் கண்டறிந்துகொண்டேன். ஈஷா வித்யாவின் பங்களிப்பானது ஈஷா வித்யா பள்ளிகளில் மட்டுமல்லாது, அரசு பள்ளி தத்தெடுப்புத் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தவும் துணைநிற்கிறது. தங்களின் நேரத்தை செலவிடுதல் மூலமும், ஆசிரியர்களை வழங்குதல் மற்றும் கற்பித்தலுக்கான வசதிகளை வழங்குதல் போன்ற உதவிகளை செய்வதன்மூலமும் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள்-கொடையாளர்களின் உதவிக்கரங்களின் மூலமும் ஈஷா வித்யாவானது அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த துணைநிற்கிறது. இதன் மூலம் இந்தியாவின் கிராமப்புற குழந்தைகளின் வாழ்விலும் அவர்கள் சார்ந்துள்ள கிராம சமுதாயத்தின் மீதும் நலம் பயக்கும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை என்னால் தற்போது நிச்சயமாக நம்பமுடிகிறது.

தற்போது வீடு திரும்பியுள்ள நான், ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஈஷா வித்யா பள்ளியின் செயல்பாடுகளையும் காட்சிகளையும் இரண்டு ஆவணப்படங்களாகவோ அல்லது சில குறும்படங்களாகவோ உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். அவற்றைப் பலதரப்பட்ட மேடைகளிலும் திரையிட்டு, அதன்மூலம் ஈஷா வித்யாவின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க விரும்புகிறேன். இந்த அற்புதமான அனுபவத்தைப் பெறும் வாய்ப்பை எனக்கு வழங்கிய ஈஷா வித்யாவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியர் குறிப்பு: நீங்கள் ஈஷா வித்யாவில் தன்னார்வத்தொண்டு புரியவோ அல்லது உங்கள் பங்களிப்பை வழங்கவோ விரும்பினால் asmita.sinha@ishavidhya.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளவும். நன்கொடை வழங்குவதற்கு
இந்த பக்கத்திற்கு வாருங்கள்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1