ஈஷா உஜ்ஜயின் யாத்திரை - ஒரு க்ளோஸ் அப்
"இது நடக்குமா நடக்காதா? இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. கூரை பலமாக இல்லாத பட்சத்தில் பெரும் ஆபத்துக்கள் ஏற்படலாம். இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இன்று இரவு, பலத்த காற்றுடன் புயல் வீசும் என்று வானிலை முன்னெச்சரிக்கை சொல்கிறது. ரயில் நிலையத்திலிருந்து பஸ் புறப்பட்டுவிட்டது. அவர்கள் அனைவரும் இன்னும் சற்று நேரத்தில் இங்கு வந்துவிடுவார்கள்." - "மிஷன் இம்பாசிபில்" பட டயலாக் மாதிரி இருக்கிறதா? அதுதான் இல்லை.
 
 

"இது நடக்குமா நடக்காதா? இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. கூரை பலமாக இல்லாத பட்சத்தில் பெரும் ஆபத்துக்கள் ஏற்படலாம். இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இன்று இரவு, பலத்த காற்றுடன் புயல் வீசும் என்று வானிலை முன்னெச்சரிக்கை சொல்கிறது. ரயில் நிலையத்திலிருந்து பஸ் புறப்பட்டுவிட்டது. அவர்கள் அனைவரும் இன்னும் சற்று நேரத்தில் இங்கு வந்துவிடுவார்கள்."

- "மிஷன் இம்பாசிபில்" பட டயலாக் மாதிரி இருக்கிறதா? அதுதான் இல்லை.

இது ஈஷா உஜ்ஜயின் யாத்திரையின் ஒரு கட்டம்...

அடுத்த நிமிடம் என்ன நிகழும் எனத் தெரியாது. வானிலை எச்சரிக்கை வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தது. இத்தனை கூப்பாடுகளுக்கிடையே யாத்திரிகர்கள் அனைவரும் நிம்மதியாக மட்டுமல்ல, ஆனந்தப் பரவசத்துடன் சிவனுடன் 2 நாட்கள் திளைத்திருந்தனர்.

ஒரு மாத காலமாக வடிவமைக்கப்பட்ட கூடாரங்கள் புயலில் சிக்கிக் கிழிந்தது, பறந்தது. அவசர அவசரமாக தன்னார்வத் தொண்டர்கள் வேறு ஒரு கூடாரத்தை ஏற்பாடு செய்ய கடைசி நாள் வீசிய புயலில் அதுவும் கிழிந்து விழுந்தது.

ஒரே மாதத்தில் 6 கோடி பேர் குவிந்திடும் ஒரு அற்புத நிகழ்வு உஜ்ஜயின் கும்பமேளா. தங்க வெறும் கூடாரம்தான். நம்முடன் பயணித்த 1100 பேருக்கும், ஒரு மாத காலமாக திட்டமிடப்பட்டு, கூடாரங்கள் வடிவமைக்கப்பட்டு தண்ணீர், கழிப்பிடம், குளியலறை என அத்தனை வசதிகளும் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து ஈஷா தியான அன்பர்கள் கும்பமேளாவிற்கு புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் உஜ்ஜயினில் மழை. வேகமான புயல் வீசியது. ஒரு மாத காலமாக வடிவமைக்கப்பட்ட கூடாரங்கள் புயலில் சிக்கிக் கிழிந்தது, பறந்தது. அவசர அவசரமாக தன்னார்வத் தொண்டர்கள் வேறு ஒரு கூடாரத்தை ஏற்பாடு செய்ய கடைசி நாள் வீசிய புயலில் அதுவும் கிழிந்து விழுந்தது.

தமிழகத்திலிருந்து புறப்பட்ட இரயில், மத்திய பிரதேசத்திலுள்ள போபால் நகரை அடைய, தியான அன்பர்கள் அங்கிருந்து பேருந்தில் ஏறி உஜ்ஜயின் புறப்பட்டனர். பேருந்தும் புறப்பட்டுவிட்டது ஆனால், அவர்கள் எங்கே தங்கப் போகிறார்கள் என்பதில் சிக்கல்.

அவசர அவசரமாக தன்னார்வத் தொண்டர்கள் அரசாங்கத்தை அணுக, காவல்துறை அதிகாரிகளும் உதவ முன்வர, தங்குமிடத்தை அடைய ஒரு மணி நேரம் இருக்கையில், ஒரு கூடாரம் கிடைத்தது. அங்கே முதல் செயலாக குருபூஜை நிகழ்ந்தது.

வசதிகளை கண்டு அலட்டிக் கொள்ளாத மக்கள், யோகப் பயிற்சியிலும் மந்திர உச்சாடனத்திலும் தீவிரமாக இருந்தனர். உள்ளே நுழைந்த காவல்துறை அதிகாரி கேட்ட முதல் கேள்வி... "எப்படி காலணிகளை வரிசையாக, அழகாக அடுக்கி வைத்தீர்கள்?!"

மந்திர உச்சாடனத்திலும், யோகப் பயிற்சியிலும் இருந்த ஈஷாக்களைப் பார்த்த அவர், "உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் செய்து தருகிறேன்," என்று கூறிச் சென்றார்.

திடீரென, இன்று மாலை புயலுடன் கூடிய காற்று வீசும் என்று செய்தி வந்தது. மறுபடியும் போக்கிடத்தை தேடும் படலம் துவங்கியது. அருகில் இருந்த ஒரு பள்ளிக்கூடமும் மகளிர் விடுதியும் உதவ முன்வர, அன்றிரவு அங்கே கழிந்தது. இத்தனை குழப்பத்திலும் தியான அன்பர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் சிவனுடன் லயித்திருந்ததுதான் அதிசயம்.

30 மணி நேரத்திற்கு மேல் பயணம். 30 வினாடிகள் கூட கிடைக்கவில்லை மஹாகாலேஷ்வரர் தரிசனம். ஒரு சில வினாடிகளில் அகமெல்லாம் நிறைந்தார் காலேஷ்வரர்.

அருந்தியது நீ ஆடுவது நான்

கோவில் பிரகாரத்தில் கண்மூடி அமர்ந்தவர்களைக் கிழித்தெறிகிறது அந்தச் சக்தி. தீவிரமும் உக்கிரமும் நிறைந்த அந்த அதிர்வில் அன்பும் அமைதியும் கலந்தே இருக்கிறது.

உலகெங்கிலும் இருந்து மஹாகாலேஷ்வரரை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்க, வெகுநேரம் காத்திருந்த பின்னரே அவரது தரிசனம் கிடைத்தது. சில நிமிடங்கள் மட்டுமே நிகழ்ந்த அந்த தரிசனம் ஒருவரைப் புரட்டிப் போட்டது. சிவன் எப்போதும் போதையில்தான் இருப்பார் என்பது இதுதானா? அங்கே காலபைரவருக்கு நைவேத்யமாக மது அர்ப்பணிக்கப்பட்டது. பைரவர் அதனை அருந்துவார் என்பது ஐதீகம்.

இக்கோவிலில், காலேஷ்வரர், எதற்கும் எவருக்காகவும் கவலை கொள்வதில்லை. அழகில்லை, அலங்காரமில்லை, நடிப்பில்லை, பகட்டில்லை. ஆனால், கோவில் பிரகாரத்தில் கண்மூடி அமர்ந்தவர்களைக் கிழித்தெறிகிறது அந்தச் சக்தி. தீவிரமும் உக்கிரமும் நிறைந்த அந்த அதிர்வில் அன்பும் அமைதியும் கலந்தே இருக்கிறது.

"மா கட்காளிகா" என்று அழைக்கப்படும் காளி மாதாவின் தரிசனமோ அமைதியாக, தாய்மடியில் அமர்ந்திருந்தது போல் இருந்தது என்கிறார்கள் யாத்திரிகர்கள்.

மிகச் சிறிய அறை அங்கே 4 பேர் அமர்வதற்கு கூட இடமில்லை. கவனமும் பராமரிப்பும் இல்லா பழைய கட்டிடம். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மத்ஸ்யேந்திர நாதர், கோரக் நாதரின் அதிர்வுகளை இன்றும் ஏந்தி நிற்கிறது இந்த இடம். உள்ளே சென்று அமர்ந்ததும் ஒருவரை தீவிர தியானத்தில் ஆழ்த்திடும் அந்த ஞானிகளின் அதிர்வுகள், அவர்களது பிரம்மாண்டத்தை நமக்குச் சொல்கிறது.

கும்பமேளா - ஏன்? எதனால்?

பல ஆயிரம் ஆண்டுகளாய் இந்தக் கலாச்சாரத்தில், கும்பமேளா தீர்த்தத்தில் குளிப்பது புனிதமாக கருதப்பட்டு வருகிறது. ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவினை பிபிசி தொலைகாட்சி, "தி க்ரேடஸ்ட் ஷோ ஆன் எர்த்," என அழைக்கிறது. பல வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களும், சுற்றுலா பயணிகளும் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படும் பிரம்மாண்டத்தைப் பார்த்து பிரமிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளின் பிரம்மாண்ட கொண்டாட்டமான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை விட கும்பமேளாக்கள் சிறப்பாய் ஒருங்கிணைக்கப்படுகின்றன என ஒரு ஆய்வு உறுதியாகச் சொல்கிறது.

பாரம்பரியமாக, 4 இடங்களில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது. ஹரித்துவார் நகரில் கங்கை நதிக்கரையிலும், அலகாபாத் நகரில் - புனிதமான சரஸ்வதி நதியும் யமுனையும் சங்கமிக்கும் இடத்திலும், நாசிக் நகரில் - கோதாவரி நதிக்கரையிலும், உஜ்ஜயின் நகரில் ஷிப்ரா நதிக்கரையிலும் கும்பமேளா நடக்கிறது.

நீங்கள் நெஞ்சுரம் மிகுந்தவராய் இருந்தால், முக்தியை நோக்கிய பயணத்தை நீங்கள் விரும்பினால் மஹாகாலேஷ்வரரைப் போன்ற தெய்வமில்லை.

சூரியனுடைய 12 வருட சுழற்சியை கணக்காக கொண்டு கும்பமேளா நடத்தப்படுகிறது. சூரியன் சிம்மத்தில் இருக்கும்போது நிகழ்வதால் உஜ்ஜயின் கும்பமேளாவை சிம்மஹஸ்த கும்பமேளா என்கின்றனர். இப்படி நான்கு கும்பமேளாக்களும் சூரியன், சந்திரன் மற்றும் வியாழன் கிரகத்தின் அமைப்பை பொருத்து மாறுபடுகிறது. நிலா பூமியைச் சுற்றி வந்தால் அது ஒரு மாதம். பூமி சூரியனைச் சுற்றி வந்தால் அது ஒரு வருடம். சூரியனின் ஒரு சுழற்சிக்கான காலம் 12 வருடங்கள், இப்படி 12 சுழற்சிகளுக்கு ஒருமுறை, அதாவது 144 வருடத்தில் நடைபெறும் கும்பமேளாவினை மஹாகும்பமேளா என்கிறார்கள்.

நாஸா போன்ற அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள், சூரியனின் அமைப்பில் 12 வருடத்திற்கு ஒருமுறை மாற்றம் நிகழ்கிறது, அப்போது சூரியனின் தாக்கம் உலகின் மீது அபரிமிதமாய் இருக்கிறது என்கிறது. இதனை உணர்ந்த நம் தேசத்தவர்கள், கிரகங்களின் தாக்கம் குறைவதற்கான சூழலை கும்பமேளா மூலம் பல ஆயிரம் காலமாக நம் நாட்டில் ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள்.

காலத்திற்கெல்லாம் காலன்

தெற்கு - காலத்தின் திசை. உஜ்ஜயினில் உள்ள மஹாகாலேஷ்வரர் தென்திசை நோக்கி, காலத்திற்கெல்லாம் காலனாய் வீற்றிருக்கிறார். ஜோதிர்லிங்கங்களில், உஜ்ஜயினில் உள்ள லிங்கம் மட்டுமே தென்திசை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

உஜ்ஜயின் நகரம் 7 ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையானது என்று சில சமய நூல்கள் குறிப்பிடுகின்றன. அந்த நூல்கள் உஜ்ஜயினை அவந்திகா என்று அழைக்கின்றன. காசி நகரம் எப்படி கல்வியிலும், கலைத் திறனிலும், தொழிலும், ஆலயங்களிலும், வளத்திலும், பண்பாட்டிலும் இன்னும் பல பரிமாணங்களில் சிறப்புற்று இருந்ததோ அப்படிச் சிறப்புற்று விளங்கிய மற்றொரு நகரம் உஜ்ஜயின்.

மஹாகாலேஷ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விதத்தைப் பற்றி சத்குரு அவர்கள் பேசும்போது, இந்த லிங்கம் மனித அமைப்பின் அடிப்படையையே உலுக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. லிங்கத்தை உயிரோட்டமாய் வைத்திருக்க மயானத்திலிருந்து எடுக்கப்படும் சாம்பல் மூலம் மஹாகாலேஷ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மயானத்து சாம்பலுக்கு அத்தகைய குணம் உண்டு என்கிறார். இதனால், மயானத்து சாம்பலால் மஹாகாலேஷ்வரருக்கு அபிஷேகம் செய்வது மிக மிக முக்கியம்.

மஹாகாலேஷ்வரர் இந்த உடல் தன்மையிலிருந்து நம்மை விடுவிக்கிறார். உடல் தன்மையிலிருந்து உங்களை முக்தி நோக்கி உந்தித் தள்ளுகிறார். நீங்கள் நெஞ்சுரம் மிகுந்தவராய் இருந்தால், முக்தியை நோக்கிய பயணத்தை நீங்கள் விரும்பினால் மஹாகாலேஷ்வரரைப் போன்ற தெய்வமில்லை.

கும்பமேளாவில் சத்குரு!

உஜ்ஜெய்னில் நிகழ்ந்த மஹாகும்பமேளாவில் மே 13ம் தேதி கலந்துகொண்ட சத்குரு, அங்கு பத்திரிக்கையாளர் பவ்தீப் காங் அவர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். பஞ்சபூதங்கள் நிகழ்த்தும் அதிசயங்கள் (Elemental Magic), தட்பவெப்ப மாற்றத்தால் நிகழும் சவால்கள் மற்றும் மாற்றுவழிகள் ஆகியவை குறித்து பவ்தீப் காங் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடினார்.

இரண்டாயிரம் யாத்திரிகர்கள் கூடி சங்கமித்த இந்த யாத்திரை இனிதே நிறைவை எட்டியது. பிரிந்து செல்லும் வேளையும் வந்தது. வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் தியான அன்பர்கள் பிரியா விடை கொடுத்து அவரவர் வீடு நோக்கி நிறைந்த மனதுடன், கலங்கிய கண்களுடன் புறப்படுகின்றனர். மீண்டும் மற்றுமொரு ஈஷா யாத்திரையில் சந்திப்போம்!

பகிர்வுகள்:

மஹேஷ்வரி:

"டைபாய்டு காய்ச்சலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மிகவும் பலவீனமான நிலையில் இருந்தேன். தொடர்ந்து 2 நிமிடம் நிற்கக் கூட என் உடலில் சக்தியில்லை. இந்த காய்ச்சல் ஏற்பட்டால் தொடர்ந்து 2 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும், இந்த யாத்திரை போக வேண்டாம் என்றும் அனைவரும் அறிவுறுத்தினர். சத்குரு கூறியபடி இந்த சாதனைக்கு தயார் செய்யும் சாதனாவையும் என்னால் செய்ய முடியவில்லை. உடல் பலவீனமாக இருந்ததால், சூரிய நமஸ்காரம் செய்ய இயலவில்லை. பல்வேறு சூழ்நிலைகளில் சிதறிப் போயிருந்த நான் சம்யமா தியானம் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இது வெறும் இரயில் பயணம் அல்ல. இரயிலில் அனைவரும் சேர்ந்து, "யோக யோக..." மந்திர உச்சரிப்பு செய்ய அந்த மந்திரத்திற்கு இவ்வளவு சக்தி உள்ளதா என நினைத்து மலைத்துப் போனேன். இரயில் முழுவதும் சத்குருவின் சக்தி நிரம்பி வழிந்ததை உணர முடிந்தது. தானாக எனக்குள் சம்யமா நிகழ்ந்தது. என் உடல் முழுவதும் திடீரென சக்தி நிரம்பி வழிந்தது. அசைவற்றுப் போன என்னால் 2 மணி நேரத்திற்கு கண்களைத் திறக்க இயலவில்லை. பல நாட்கள் ஓய்வெடுத்தது போன்ற புத்துணர்ச்சி ஏற்பட்டது. 2 மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியவர்களிடம் போய், எனக்கு இந்த 2 மணி நேர ஓய்வு போதும் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. நடக்க இயலாத நான் பல கிமீ நடந்தேன். மஹாகாலேஷ்வரரை தரிசிக்க இரண்டரை மணி நேரம் வரிசையில் எப்படி நின்றேன் என என்னால் நம்ப இயலவில்லை," என்றார் கண் சிகிச்சை நிபுணரான மஹேஷ்வரி.

விஹாநிகா:

"வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் சிக்கிப் போய், மனம் துவண்டு போயிருந்த நான் அனைத்தையும் மறந்து போனேன். கும்பமேளா நிகழும் ஆற்றில் மூழ்கி எழுந்ததும் அனைத்தையும் மறந்து புதிதாய் பிறந்தது போல உணர்ந்தேன். இந்தப் பிரயாணத்தில் மட்டுமல்ல, என் வாழ்நாள் முழுக்க சத்குரு என்னை அவர் கைகளால் பிடித்து அழைத்துச் செல்வது போல உணர்ந்தேன்," என பாலிமர் டிவி செய்தி வாசிப்பாளர் விஹாநிகா சொன்னார்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1