ஈஷாவில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டு பொங்கல் விழா நேற்று (ஜனவரி 16, 2020) கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் கலாச்சாரத்தின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாகவும், உழவர் திருநாளாகவும் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா ஈஷாவில் ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மாட்டுப் பொங்கல் விழா ஆதியோகி முன்பு நேற்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் மலைவாழ் பழங்குடி மக்கள், கிராமப்புற மக்கள், விவசாயிகள், ஈஷா தன்னாவத் தொண்டர்கள், வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மண் பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பின்னர், ஈஷாவில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, நவதானியங்கள் போன்றவை அர்ப்பணிக்கப்பட்டன.

விழாவின் முக்கிய அம்சமாக, அழிந்துவரும் நம் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக, நாட்டு மாடுகள் கண்காட்சி நடந்தது. இதில் காங்கேயம், காங்கிரிஜ், கிர், ஓங்கோல், தார்பார்க்கர், தொண்டை மாடு, வெச்சூர், உம்பளாச்சேரி உள்ளிட்ட 20 வகையான பாரம்பரிய நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும், அந்த மாட்டு இனங்களின் பூர்வீகம், சிறப்பு பற்றிய குறிப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.

உலகில் மிக குட்டையான நாட்டு மாட்டு இனத்தில் இருந்து, மிக உயரமான நாட்டு மாட்டு இனமும் பார்வைக்கு வைக்கப்பட்டது. பாரம்பரிய நாட்டு மாட்டு இனங்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராட்ஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை ஈஷா பல ஆண்டுகளாக பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நமக்கு உணவளிக்கும் மண்ணுடன் தொடர்பை உருவாக்கும் விதமாக சேற்றில் ஆடி, பாடி விளையாடும் விளையாட்டு போட்டிகளும் நடந்தன. பொங்கல் அர்ப்பணிப்புக்கு பிறகு ஈஷா சம்ஸ்கிரிதி, ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா வித்யா பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், வெளிநாட்டினர் காவேரி கூக்குரல் என்ற கருப்பொருளில் கலைநிகழ்ச்சியை நடத்தினர்.

இரவு 8 மணிக்கு ஆதியோகி திவ்ய தரிசனமும் நடந்தது. நாட்டு மாடுகள் கண்காட்சி இன்றும் (ஜனவரி 17) நடைபெறும். அனுமதி இலவசம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.