200 வருடங்களுக்கு முன்பு இந்த உலகிலேயே இந்தியாதான் மிகவும் செல்வமிக்க நாடாக இருந்தது. ஆனால் கடந்த 200 வருடங்களில் அந்த நிலைமை தலைகீழாகிப் போனது. குறைந்தபட்சம், சுதந்திரமடைந்து 25, 30 ஆண்டுகளில், இந்த நாடு தன் பழைய வளமையை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. காரணம், இந்த நாட்டில் சரியான கல்வித்திட்டம் இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு, இந்தியாவிற்கு பொருளாதார வாய்ப்பு அபரிமிதமாக இருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோமா? இதுதான் இப்போது நம்முன் ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. நமக்கு அந்தத் திறமை இருக்கிறது. ஆனால் அதற்கு சரியான முனைப்பும் தூண்டுதலும் நிகழ்ந்தாக வேண்டும்.

- சத்குரு

தற்போது இந்தியாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை நமக்கு உற்சாகத்தைத் தருவதாக இருந்தாலும், கல்வியின் தரம் ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கிறது. எனவேதான் கடந்த பத்து வருடங்களாகவே சத்குரு அவர்களின் சீரிய வழிகாட்டுதலில் ஈஷா கல்வி முன்முயற்சிகளின் மூலம், ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா வித்யா பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வெற்றிகள் தந்த ஊக்கம் காரணமாக, கல்லூரிக் கல்விப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற முனைப்பும் ஈஷாவிற்கு இருந்து வந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த நிலையில், மஹேந்திரா கல்வி அறக்கட்டளை, கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக, ஈஷா அறக்கட்டளையின் கல்விப் பிரிவான ஈஷா கல்விப்பணி அமைப்பை, தன்னுடன் கைகோர்க்கும்படி அழைத்தது. இதற்கான உடன்படிக்கை மே 6ம் தேதி கையெழுத்தானது. அதன்படி, கல்லூரிச் சேர்க்கை, கற்பித்தல்-கற்றல் செயல்முறையை மேம்படுத்துதல், தொழிற்சாலை சார்ந்த பயிற்சிகள் மற்றும் மாணவர்களுக்கு பணியிடங்களை பெற்றுத்தருதல் போன்ற செயல்பாடுகளில் ஈஷா தன் பங்களிப்பை வழங்க இருக்கிறது.

மஹேந்திரா கல்வி அறக்கட்டளை தற்போது 5 பொறியியல் கல்லூரிகள், 2 பாலிடெக்னிக் கல்லூரிகள், கலைக்கல்லூரி, 3 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 5 உயர்நிலைப் பள்ளிகளை நடத்தி வருகிறது. இக்கல்லூரிகளில் தரமான கற்பித்தல் முறையிலிருந்து பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்பை அதிகரித்தல், புதுமையைப் புகுத்துதல், ஆய்வு மற்றும் முன்னேற்றப் பணிகளை ஊக்குவித்தல் என்பது வரை பல முக்கியப் பணிகளில் ஈஷா செயலாற்ற உள்ளது.

1978ல் நிறுவப்பட்ட மஹேந்திரா கல்வி அறக்கட்டளை படிப்படியாக வளர்ந்து, பல்வேறு கல்லூரிகளுடன், தற்போது மிகப் பெரிய கல்வி நிறுவனமாக உயர்ந்துள்ளது. விசாலமான இடம், வசதியான தங்கும் விடுதி, நவீன பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றுடன் கூடிய மஹேந்திரா கல்லூரிகள் இன்றைய மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமான கல்விச் சாலைகளாகத் திகழ்கின்றன. மஹேந்திரா பொறியியல் கல்லூரிகளில் 3 கல்லூரிகள் சேலம் - திருச்செங்கோடு நெடுஞ்சாலையிலும் 2 கல்லூரிகள் சேலம் நகரத்திலும் அமைந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இக்கல்லூரிகள் பட்டப்படிப்பு மற்றும் மேற்பட்டப் படிப்புகளை வழங்குவதோடு தனது மாணவர்களுக்கு சரளமாக பேசுதல் மற்றும் பிரச்சனைகளுக்கு முடிவு காணுதல் போன்ற திறமைகளையும் கற்றுத்தருகிறது.

இக்கல்வி நிறுவனத்தின் இதுபோன்ற முயற்சிகள் மாணவர்கள், தொழிலகங்கள் மற்றும் சமூகங்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதாக இருக்கின்றன. வரும் வருடங்களில், ஈஷாவும் இதுபோன்ற பல முயற்சிகள் மூலம் இந்த நாட்டிலுள்ள தொழிற்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்க இருக்கின்றது.

நீங்களும் இந்த சீரிய பணியில் பங்குபெற முடியும்...

மாணவராக, ஆசிரியராக, தொழில்நுட்ப வல்லுனராக, நல்லெண்ணத் தூதுவராக நீங்கள் இதில் பங்காற்ற முடியும்.
இவ்வாண்டுக்கான கல்விச் சேர்க்கை தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் கீழுள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


www.ishavidhya.org

www.ishahomeschool.org