இசை வாத்தியங்களோடு ஐந்தாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்!
ஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஐந்தாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!
 
 

ஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஐந்தாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!

ஈஷா யோக மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 2 முதல் 10 வரை) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் என்று மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறவிருக்கிறது. 9 நாட்கள் திருவிழாவில், இன்றைய ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தில் திரு. K.S.ரகுநாத் அவர்களின் குழுவினரின் வாத்திய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6.45 மணியளவில் ஈஷா யோக மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். புல்லாங்குழல் மற்றும் வயலின் கருவிகள் பிரதானமாக இசைக்கப்பட, கீ-போர்டு, மோர்ஸிங் மற்றும் மிருதங்கம் ஆகிய இசை வாத்தியங்களின் வழியாக காற்றில் கலந்த இசைச்சாரல் பார்வையாளர்களின் இதயங்களை நனைத்தது.

திரு. S.V.சுப்ரமணியம் கீ-போர்டை இயக்க, திரு. சுப்ரமணிய சிவா புல்லாங்குழல் இசைத்தார். வயலினை திரு.S.V.குருவாயூரப்பன் அவர்களும் மோர்ஸிங் இசை வாத்தியத்தை திரு.K.ஜெகநாதன் அவர்கள் வழங்கினார்.

கீ போர்டு, புல்லாங்குழல், வயலின், மோர்ஸிங் மற்றும் மிருதங்கம் ஆகிய இசைக் கருவிகளின் கலைஞர்கள் ஒன்றிணைந்து இயங்கும் ‘ஸ்வராலயா லஹரி’ எனும் இந்த இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான திரு. K.S.ரகுநாத் அவர்கள் மிருதங்க வாத்திய கலைஞராவார்.

இசைக் குடும்பத்தைச் சேர்ந்த K.S.ரகுநாத் அவர்கள்...

கோவை திரு.R.கணபதி அவர்களின் சிஷ்யரான இவர் பாரம்பரிய இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அகில இந்திய வானொலியில் கிரேடு நிலை கலைஞராக உள்ள திரு.ரகுநாத் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான கலைஞராவார். இந்தியா முழுவதும் பெரும்பாலும் அனைத்து சபாக்களிலும் தனது நிகழ்ச்சியை வழங்கியுள்ள திரு.ரகுநாத் எல்லா முன்னணி கலைஞர்களுடனும் இணைந்து பங்காற்றியுள்ளார். இவர் கடந்த 10 வருடங்களாக மிருதங்கம் மற்றும் கடம் ஆகிய வாத்திய இசையை கற்பித்து வருகிறார். சிவாஞ்சலியின் டெம்பில் ஆஃப் பைன் ஆர்ட்ஸ், ஜெத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ட்ரஸ்ட், கோவை போன்ற குறிப்பிடத்தக்க பல இசை நிறுவனங்களில் வகுப்புகளை வழங்கிவருகிறார். 2007ல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் முன்னிலையில் ராஷ்ட்ரபதி பவனில் தனது இசை நிகழ்ச்சியை வழங்கிய பெருமைக்குரிய இவர், 45 வருடங்களாக தொடர்ந்து இசைச் சேவை புரிந்துவருகிறார்.

லிங்க பைரவி ஊர்வலம்...

bharatanatyathil-thilaitha-moonram-nal-navarathri-kondattam-9

நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் அக்னி நடனமாடுவது உள்ளம்கவர் அம்சமாக இருக்கும். ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொருநாளும் பக்தர்களுக்கு ஈஷா மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கொலு...

bharatanatyathil-thilaitha-moonram-nal-navarathri-kondattam-12

நவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, சூரியகுண்டத்தின் மேற்புற பிரகாரத்தில் தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் கண்கொள்ளா விருந்தாக காட்சியளிப்பாள்.

இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்த ஒன்பதுநாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.

நாளை (07-10-2016)

  • ஆறாம் நாள் விழாவான நாளை திரு.சூர்யபிரகாஷ் அவர்களின் குரலிசை நிகழ்ச்சி நிகழவுள்ளது.
  • நவராத்திரி நாட்களில் அக்டோபர் 2,5,8 ஆகிய நாட்களில் மாலை 5:30 முதல் 6:10 வரை லிங்கபைரவியில் நடைபெறும் நவராத்திரி சிறப்பு பூஜையின் நேரடி இணைய ஒளிபரப்பில் இணைந்து, தேவியின் அருள்மழையில் நனைந்திடுங்கள்!
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1