இறுதி மாதவிடாய் - சமாளிப்பது எப்படி?
இந்தியப் பெண்களுக்கு பொதுவாக இறுதி மாதவிடாய் சுமார் 50 வயதில் ஏற்படும். ஒரு பெண்ணின் உடலில் பூப்பெய்தலுக்குப் பிறகு ஏற்படும் பெரிய மாற்றமாக இதைக் கூறலாம். மெனோபாஸிற்கான அறிகுறிகள், சிகிச்சைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் இவற்றைத் தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை...
 
 

இந்தியப் பெண்களுக்கு பொதுவாக இறுதி மாதவிடாய் சுமார் 50 வயதில் ஏற்படும். ஒரு பெண்ணின் உடலில் பூப்பெய்தலுக்குப் பிறகு ஏற்படும் பெரிய மாற்றமாக இதைக் கூறலாம். மெனோபாஸிற்கான அறிகுறிகள், சிகிச்சைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் இவற்றைத் தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை...

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

மெனோபாஸ் என்றால் என்ன?

மருத்துவ ரீதியாகக் கூறவேண்டுமானால் ‘மெனோபாஸ்’ என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் கடைசியாக ஏற்படும் மாதவிடாயைக் குறிக்கும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாத போதுதான் அதை இறுதி மாதவிடாய் என்று கூறமுடியும். ஆனால் பொதுவாக மெனோபாஸ் என்று குறிப்பிடுவது இறுதி மாதவிடாய்க்கு முன்னதாக சில வருடங்கள் (3 - 4 வருடம்) உடலளவில் ஏற்படும் மாற்றங்களைத்தான்! சிலருக்கு 40 வயதுக்கு முன்னதாகவே இது ஏற்படும். வேறு சிலருக்கு கர்ப்பப்பையை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிய பிறகு மாதவிடாய் ஏற்படுவது நின்றுவிடும்.

மெனோபாஸ் எவ்வாறு ஏற்படுகிறது?

ஒவ்வொரு பெண்ணிலும் கருமுட்டைப் பை, கருமுட்டைகளை உற்பத்தி செய்து, விடுவிக்க ஆரம்பிக்கிறது. அப்போது ஈஸ்ட்ரோஜென் (Estrogen), ப்ரோஜெஸ்டெரோன் (Progesterone) எனப்படும் ஹார்மோன்களின் துணையினால், பல்வேறு செயல்களின் மூலம், மாதவிடாய் ஆரம்பமாகிறது. இச்செயல் 30 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது. சுமார் 45 வயதிற்குமேல் ஈஸ்ட்ரோஜென் சுரப்பது படிப்படியாகக் குறைந்து சில வருடங்களில் முழுமையாக நின்றுவிடுகிறது. இதனால் மாதவிடாய் ஏற்படுவதும் நின்றுவிடுகிறது.

இறுதி மாதவிடாய் ஏற்படப் போவதற்கான அறிகுறிகள்

மாதவிடாயில் மாற்றம்

இதுதான் பொதுவாக முதலில் ஏற்படும். மாதாமாதம் வராமல் இருப்பது, அதிக அல்லது குறைவான இரத்தப்போக்கு, அதிக நாட்கள் அல்லது குறைவான நாட்கள் இரத்தப்போக்கு.

ஹாட் ஃப்ளஷ்ஸஸ் (Hot flushes)

கிட்டத்தட்ட 75 சதவிகிதப் பெண்களுக்கு இது ஏற்படும். திடீரென முகம், கழுத்து, நெஞ்சுப்பகுதி, பாதம் மற்றும் உள்ளங்கைகள் சூடாகி விடும். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை இது நீடிக்கும். இரவு பகல் என்று ஒரு நாளில் பல தடவை இது ஏற்படலாம். சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை இது நீடிக்கும். இதன் வீரியம் நபருக்கு நபர் மாறுபடும். இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. அசௌகரியத்தைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் இதனால் உடலுக்கு ஏற்படுவதில்லை.

வியர்வை

பொதுவாக இரவு நேரங்களில் வியர்க்கும். சிலருக்கு இது தூக்கத்தைப் பாதித்து, ஆடை மற்றும் தலையணை, போர்வைகளைக்கூட நனைத்துவிடும்.

தூங்குவதில் சிரமம்

மேற்சொன்ன காரணங்களாலும், படபடப்பு, பதட்டம் போன்றவற்றாலும் சரிவரத் தூக்கம் இருக்காது.

பிறப்புறுப்புகளில் மாற்றம்

ஈஸ்ட்ரோஜன் குறைவாகச் சுரப்பதால் உலர்ந்து போகும். இதனால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். உடலுறவு கொள்வதிலும் சிரமம் ஏற்படலாம். தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

சிறுநீர் கழித்தல்

அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் போவதைக் கட்டுப்படுத்த முடியாமை போன்றவை ஏற்படும்.

எலும்புகள்

மூட்டு, தசை வலி ஏற்படும். வயதாக ஆக எலும்பு திசுக்கள் குறைந்துகொண்டே வரும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்பொழுது எலும்பு திசுக்களின் அடர்த்தி குறையும். இதைத்தான் ‘ஆஸ்டியோபோரோஸிஸ்’ என்பார்கள். இது எந்த அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் எளிதாக சிறு காயங்களுக்கே எலும்பு முறிவு ஏற்படும். இடுப்பு, கை, முதுகுத் தண்டு எலும்புகள்தான் பொதுவாக பாதிப்புக்கு உள்ளாகும்.

முடி

மாதவிடாய் நின்றபிறகு, அக்குள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரோமம் குறைவாகக் காணப்படும். சிலருக்கு முகத்தில் முடி அதிகமாகலாம். தலைமுடி உதிர்தலும் அதிகமாகலாம்.

பற்கள்

உமிழ்நீர் சுரப்பது குறையும். ஈறுகளில் எரிவு எளிதாக ஏற்படலாம். பற்களும் எளிதில் விழுந்துவிடும்.

இதயம்

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயம் அதிகரிக்கும். நெஞ்சு படபடப்பு ஏற்படும்.

சருமம்

சருமம் உலர்ந்து அரிப்பு ஏற்படும். ஜவ்வுத் தன்மை குறைந்து தொய்வு ஏற்படும். சிலருக்கு சருமத்தில் எரிச்சல், மரத்துப் போதல், ஏதோ ஊறுவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

மனோ ரீதியான அறிகுறிகள்

மனச்சோர்வு, பதட்டம், எளிதில் எரிச்சல், கோபம் அடைதல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை ஏற்படும்.

மெனோபாஸ் - சமாளிப்பது எப்படி?

மேற்சொன்னவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இந்த அறிகுறிகள் அனைத்தும் எல்லோருக்கும் ஏற்படும் என்பது கிடையாது. ஆனால் இவை ஏற்பட்டால் எப்படிக் கையாள்வது என்று தெரிந்து கொள்வது அவசியம்.

ஹாட் ஃப்ளஷ்

 • மெல்லிய காற்றோட்டமான உடைகளை அணியவும். இது ஏற்பட்டால் பதட்டம் அடையாமல், இது போய்விடும், என்று அமைதியாக இருக்கவும்.
 • ரொம்பவும் சிரமமாக இருந்தால் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொள்ளலாம்.
 • குளிர்ந்த பானங்கள் பருகுதல், சூடான பானங்கள் தவிர்த்தல், சூடு அதிகமான சூழ்நிலைகளைத் தவிர்த்தல், காரமான உணவுகள் தவிர்த்தல் ஆகியவை உதவும்.

தூக்கக் கோளாறுகள்

தூக்கம் குறித்த சரியான நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் இதை பெரும்பாலும் சரி செய்ய முடியும். (உ-ம்:) பகலில் நல்ல உடல் உழைப்பு, தூங்குவதற்கு முன் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்தல், குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி குறிப்பிட்ட நேரத்தில் விழித்தல், படுக்கையறையை தூக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துதல் போன்றவை.

பிறப்புறுப்புகள் உலர்தல்

இதற்கு பிரத்தியேகமாக மருந்துகள் உள்ளன. இதை மருத்துவ ஆலோசனையின் பேரில் உபயோகப்படுத்தலாம். சில வகையான சோப்புகளும் இதனை அதிகப்படுத்தலாம், எனவே அதைக் கவனிக்கவும்.

சிறுநீர் பிரச்சினைகள்

இது வேறு பல காரணங்களால் ஏற்படவில்லை என்று மருத்துவ ரீதியாக உறுதி செய்த பின்னர் மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

முடிப் பிரச்சினைகள்

மருத்துவ ஆலோசனை பெறவும். இது தவிர முகத்தில் ஏற்படும் ரோம வளர்ச்சிக்குத் தரமான அழகு நிலையங்களில் செய்யப்படும் குறிப்பிட்ட சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.

மூட்டு, தசைவலி

HRT வலி குறைக்க உதவும். உடற்பயிற்சி செய்வதும் உதவும்.

ஆஸ்டியோ போரோஸிஸ்

ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்தால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே உடற்பயிற்சி செய்யவும். திடீர் மற்றும் வேகமான உடல் அசைவுகளைத் தவிர்க்கவும். வைட்டமின் D கால்சியம் மாத்திரைகள் உதவும். இது தவிர, வேறு சில மாத்திரைகளும் ஆஸ்டியோபோரோஸிஸ் தடுக்க உதவும். இதற்கு மருத்துவரை அணுகவும். உணவு மற்றும் உடல் எடையில் கவனம் தேவை. ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

HRT (Hormone Replacement Therapy) என்றால் என்ன?
 • இந்த சிகிச்சையில் உடம்பில் குறைந்துவரும் ஈஸ்ட்ரோஜன் அளவை சரி செய்ய உதவும்.
 • எல்லா வகையான HRT-யிலும், கருமுட்டைப் பை உற்பத்தி செய்யாத ஈஸ்ட்ரோஜனின் குறைபாட்டை வெளியிலிருந்து எடுத்துக்கொள்ளும் ஈஸ்ட்ரோஜன் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.
 • இது ஹாட் ப்ளஷ்ஸஸ், பிறப்புறுப்புகள் உலர்தல், தூக்கத்தைச் சரிசெய்தல், ஆஸ்டியோபோரோஸிஸ் தடுத்தல் போன்றவற்றைச் செய்யும். ஆனால் இந்த சிகிச்சையில் சில பாதிப்புகள் உள்ளன. அதனாலேயே மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
மெனோபாஸ்-க்கு பிறகு செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
 • வருடத்திற்கு ஒரு முறையாவது மகளிர் மற்றும் மகப்பேறு நிபுணரைச் சந்தித்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 • ‘பாப் ஸ்மியர்’ என்னும் பரிசோதனை, கர்ப்பப் பையின் வாயில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க உதவும்.
 • வருடத்திற்கு ஒருமுறை, ‘மாமோகிராம்‘ மூலம் மார்பகங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
 • மாதம் ஒருமுறை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். தைராய்ட் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 • 6 மாதத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
 • வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தில் கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
யோகா எவ்வாறு உதவும்?
 • யோகப் பயிற்சிகள் செய்து வரும் பெண்களுக்கு மெனோபாஸின்போது உடலில் ஏற்படும் உபாதைகள் குறைவாக இருக்கும். மனதளவில் சமநிலையை உணர்வர்.
 • யோகப் பயிற்சிகள் நாளமில்லா சுரப்பிகளை நன்கு சமன்செய்யும். அதனால் மெனோபாஸில் ஈஸ்ட்ரோஜனால் ஏற்படும் உடல் அறிகுறிகளை நன்கு சமாளிக்க முடியும்.
 • மனோரீதியான பிரச்சினைகள், தூக்கக் கோளாறுகள் போன்றவற்றிற்குப் பெரிதும் உதவும். உடல் வளையும் தன்மையை அதிகரிக்கும். மூட்டு மற்றும் தசைகளை உறுதிப்படுத்துவதால் வலி குறைய உதவும்.
 • உடல், மனம் தளர்வு நிலையை அடைவதால், எளிதில் கோபம் எரிச்சலடைதல் போன்றவை குறைகிறது.
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1