இந்த வருட மஹாசிவராத்திரி… சில துளிகள்!
கடந்த மார்ச் 7ல் ஈஷாவில் நிகழ்ந்த மாபெரும் கொண்டாட்டமான மஹாசிவராத்திரி திருவிழாவின் ஒரு தொகுப்பு இங்கே உங்களுக்காக!
 
இந்த வருட மஹாசிவராத்திரி… சில துளிகள்!, Intha varuda mahashivarathri sila thuligal
 

கடந்த மார்ச் 7ல் ஈஷாவில் நிகழ்ந்த மாபெரும் கொண்டாட்டமான மஹாசிவராத்திரி திருவிழாவின் ஒரு தொகுப்பு இங்கே உங்களுக்காக!

தெய்வீக இரவான மஹாசிவராத்திரி, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மார்ச் 7ம் தேதி இரவு கொண்டாடப்பட்டது. மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற்ற இந்த திருவிழாவில், பிரபல சூஃபி மற்றும் கிராமிய இசைக் கலைஞரான திரு.முக்தியார் அலி அவர்களின் இசை நிகழ்ச்சியும், அகம், கர்நாடக ஃப்யூஷன் இசைக் குழுவின் இசை கச்சேரியும் நடைபெற்றது.

இரவு முழுக்க பங்கேற்பாளர்களை உற்சாகம் குறையாமல் துள்ளாட்டமிடச் செய்யும் பணியை செவ்வனே செய்த அந்த இசைக் கலைஞர்களுடன், ஈஷாவின் இசைக் குழுவினரான சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவும் தங்கள் பங்கிற்கு இசைநிகழ்ச்சி மூலம் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களை உற்சாகப்படுத்தினர். சத்குருவின் சத்சங்கம், சத்குருவால் வழிநடத்தப்பட்ட சக்தி மிக்க தியானம் எனப் பல ஆன்மீக அம்சங்கள் கொண்ட அற்புத நிகழ்ச்சியாக ஈஷா மஹா சிவராத்திரிக் கொண்டாட்டம் அமைந்தது.

முன்னதாக தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனை மாலை 5.30 மணிமுதல் 6.20 மணிவரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிரம்மச்சாரிகளின் மந்திர உச்சாடனை துவங்கியது! சுமார் 7 மணியளவில் சத்குரு மேடையேறினார். நடுநிசி இரவில், மிகவும் சக்திமிக்க மஹாமந்திர உச்சாடனையுடன் தியானத்திற்கான தீட்சையை, மக்களுக்கு சத்குரு வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக Dr.பிரதாப்ரெட்டி, தலைவர் – அப்போலோ மருத்துவமனை, திரு.சத்ய பிரகாஷ் டக்கர் - தலைமைசெயலாளர், ஆந்திரா, திரு.நீலமணிராஜு - இயக்குநர், புலனாய்வுப்பிரிவு, திரு.கௌதம்தத்தா – PVR சினிமாஸ் மற்றும் நடிகர்கள் திரு.பார்த்திபன், திரு.சந்தானம், திரு.மிர்ச்சி சிவா, திரு.அசோக், இயக்குனர்கள் திரு.கங்கை அமரன், திரு.S.A.சந்திரசேகர் மற்றும் திருமதி.ஷோபா சந்திரசேகர், சின்னத்திரை நட்சத்திரங்கள் திருமதி.திவ்யதர்ஷினி, திரு.அனந்த் வைத்யநாதன், இசை அமைப்பாளர் திரு.சத்யா, கர்நாடக இசைக் கலைஞர் பத்மபூஷன் திருமதி.சுதா ரகுநாதன் மற்றும் எழுத்தாளர்கள் சுரேஷ்–பாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிவாங்கா சாதனா மேற்கொண்ட ஆயிரக்கணக்கானோர் வெள்ளியங்கிரி மலையேறிவந்து, மஹாசிவராத்திரி இரவில் தியானலிங்கத்திற்கு தங்கள் அர்ப்பணைகளைச் செய்து, ஈஷா மஹாசிவராத்திரிக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொண்டனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் நேரடியாக ஈஷாவிற்கு வந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஈஷாவில் மஹாசிவராத்திரிக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவரும் அனைவருக்கும் இரவுமுழுக்க மகா அன்னதானமும் வழங்கப்பட்டது. நேரடியாக வர இயலாதவர்கள் DD பொதிகை, Aasthaa TV, ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நேரடி ஒளிபரப்பின் மூலம் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் http://AnandaAlai.com/MSR மற்றும் isha.sadhguru.org/MSRLive என்ற இணைய தளங்களிலும் நேரடி இணைய ஒளிபரப்பை ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.

உலகம் முழுவதிலும் இந்த இரவு ஈஷா சார்பாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில், மொத்தம் 126 மையங்களில் நடைபெற்ற ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் லட்சக் கணக்கான மக்கள் இணைந்தனர். அந்தந்த மையங்களில் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவுமுழுக்க அன்னதானமும் வழங்கப்பட்டது.

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1