இந்தியாவையும் அமெரிக்காவையும் மிகவும் உறுதியான ஜனநாயக நாடுகளாக வர்ணிக்கும் சத்குரு , இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு அடுத்த சில ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்து முழு உலகிற்கும் பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவின் பிரியாவிடை வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு உலகின் மற்ற நாடுகளுக்கும் மிக முக்கியமானது என்று சத்குரு கூறினார்.

இந்நிகழ்ச்சியின் நட்சத்திரப் பங்கேற்பாளரான சத்குரு, "உலகத்தின் உறுதியான இரண்டு ஜனநாயக நாடுகளுக்கிடையேயான இந்த நல்லுறவு இந்த இரு நாடுகளுக்கும் மட்டும் முக்கியமானதல்ல. இந்த உறவை நாம் எவ்வாறு பலப்படுத்துவது என்பது உலகளவில் பல விஷயங்களைத் தீர்மானிப்பதாக இருக்கும்" என்று கூறினார்.

"துரதிர்ஷ்டவசமாக இது சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அவ்வளவாகப் புரிந்து கொள்ளப்படவில்லை, இப்போது எல்லோரும் அதை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த உறவை பலப்படுத்துவது இந்த இரு நாடுகளின் நன்மைக்கு மட்டுமல்ல, நிச்சயமாக உலகத்தின் நன்மைக்குமான ஒன்றாகும்" என்று சத்குரு கூறினார்.

"அடுத்த சில ஆண்டுகளில், இந்த உறவு, தற்செயலாக ஏற்படும் நிகழ்வுகளோடு மட்டுமல்லாது, முழு உலகிற்கும் பயனளிக்கும் வகையில் ஒரு நீண்டகால உறவாக முதிர்ச்சியடையும்" என்று சத்குரு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

இந்தியத் தூதரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்திருந்த முக்கியமான, பிரபல அமெரிக்கவாழ் இந்தியர்கள், டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள், அமெரிக்க காங்கிரஸின் மூத்த அலுவலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நியூயார்க், சிகாகோ, ஹஸ்டன், அட்லாண்டா மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள துணைத் தூதரகங்களில் இருந்து, இந்திய தூதரக ஜெனரல்களும் இந்தப் பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அண்டை நாடுகள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் கலந்து கொண்டனர்.

"எங்களுடைய மிக முக்கியமான உறவுகளில் ஒரு உறவு அமெரிக்காவில் உள்ளது என்ற தனித்துவமான உணர்வை, நான் விடைபெறும் இத்தருவாயில் என்னுடன் எடுத்துச்செல்கிறேன். இது தொடர்ந்து எங்களுக்கு முக்கியமானதாக இருக்கும் படியானதொரு உறவாகும்" என்று ஷ்ரிங்லா தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் கருத்துரையாற்றினார்.

ஷிரிங்லா அமெரிக்காவின் இந்தியத் தூதராக சுமார் ஓராண்டு பணியாற்றியுள்ளார். இந்த மாத இறுதியில், இந்தியாவின் அடுத்த வெளியுறவு செயலாளராக அவர் தனது புதிய பணியை ஏற்றுக்கொள்ள இருக்கிறார்.