இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா
‘தியான யாத்திரை - ஈஷாவுடன் இமாலயா’ எனும் பெயரில் புத்தகமாக வெளிவந்த எழுத்தாளர் அஜயன் பாலா அவர்களின் இமயமலை பயண அனுபவங்களை, உங்களுக்காக இங்கே தொடராக வழங்கவுள்ளோம். ஈஷா புனிதப் பயண குழுவில் இணைந்து திரு.அஜயன் பாலா பெற்ற அந்த சுவாரஸ்ய அனுபவங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்!
 
 

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 1

‘தியான யாத்திரை - ஈஷாவுடன் இமாலயா’ எனும் பெயரில் புத்தகமாக வெளிவந்த எழுத்தாளர் அஜயன் பாலா அவர்களின் இமயமலை பயண அனுபவங்களை, உங்களுக்காக இங்கே தொடராக வழங்கவுள்ளோம். ஈஷா புனிதப் பயண குழுவில் இணைந்து திரு.அஜயன் பாலா பெற்ற அந்த சுவாரஸ்ய அனுபவங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்!

இப்புத்தகத்திற்கு சத்குரு வழங்கிய முன்னுரை...

ஞானிகளின் உறைவிடமாகப் போற்றப்படும் இமயமலைகள், உலகெங்கும் உள்ள ஆன்மீக சாதகர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலமாக விளங்குகின்றன. இந்த மலைகள், ஆன்மீக அதிர்வலைகளோடு, மிகவும் உயிரோட்டமாக உள்ளன. இந்த மலைகளின் மேல் எனக்கு ஆழமான மையல் எப்போதும் உண்டு. நமக்குத் தெரிந்த, தெரியாத பற்பல ஆன்மீக குருமார்கள் இமயமலைகளை தங்களது உறைவிடமாக ஆக்கிக்கொண்டு, இப்பகுதியை அவர்களது உயிர்சக்திகளால் ஒளியூட்டி இருக்கிறார்கள். அனைத்து ஆன்மீக சாதகர்களுக்கும் இந்த மலைகள், நிச்சயமாக ஓர் உயர்ந்த அனுபவத்தை வழங்கும்.

இமாலயத்தில் இருக்கும்போது, மக்கள், இந்த வாழ்க்கையை, ஒரு கலாச்சாரமாக, ஒரு ஒழுக்க நெறியாக, ஒரு மதமாக அல்லது வேறெந்த வகையிலும் பகுத்துப் பார்க்காமல், வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே புரிந்துகொள்ள முடிகிறது.

ஈஷாவுடன் இணைந்து இமயமலைகளுக்கு பயணம் செய்த திரு.அஜயன் பாலா அவர்களின் இந்த அனுபவ தரிசனங்களின் தொகுப்பு, தங்களது வீட்டு தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் சுகமான சூழல்களில் அமர்ந்திருப்பவர்கள், அந்த சௌகரியங்களை கொஞ்சம் துறந்துவிட்டு இமயமலைகளுக்குப் புனிதப் பயணம் செய்ய தூண்டுகோலாக அமையும்.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இமயமலைக்கு ஒருமுறையேனும் சென்று அந்த அனுபவத்தில் கரைந்து போகாமல் இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியமான ஓர் பகுதியை இழந்து விடுகிறார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன்.

நீங்கள் முதுமையடைந்து, உடல் தளர்ந்துபோகும் முன்னர், இந்த மலைகளை தரிசித்து அவற்றுடன் ஒன்றிணைய வேண்டும். இது என் ஆசையும், ஆசியும்.

-சத்குரு

ஈஷா இமயமலை பயணம்... ஒரு ட்ரையிலர்!

தனது இமாலய பயணத் தொடர் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பற்றிய ஒரு ட்ரையிலர் வெளியிடுகிறார்... அஜயன் பாலா வார்த்தைகளில்!

 

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா, writer ajayan bala

வாழ்க்கை ஒரு தொடர் ஓட்டம்.

நாம் ஓடாத நேரமில்லை, ஓடாத நாளில்லை. அது அமைஞ்சிக்கரையானாலும் அமெரிக்காவானாலும் எல்லாம் நினைத்த மாத்திரத்தில் ஓட்டம் தயாராகிவிடுகிறது.

பாக்கெட்டில் செல்போன் மணீ பர்ஸ் தட்டிப்பார்த்து சரிசெய்துகொண்டு பைக் அல்லது கார் சாவியை சுற்றிக்கொண்டு ஓடத் தயாராகிவிடுகிறோம்.

சரி அதெல்லாம் பொருளை தேடிய ஓட்டம்.

ஓடாவிட்டால் வீட்டில் சோறு கிடைக்காது.

ஆனால் இது மட்டுமேவா வாழ்க்கை?

ஓடிக்கொண்டிருக்கும் போதே மீசை நரைத்து தோல்சுருங்கி போய்விடுகிறதே? சட்டென ஒருநாள் நம் பிள்ளைகள் வளர்ந்து கல்யாணம் பண்ணிக்கொடுத்து கண்ணாடி பார்க்கும் நாளில் காலம் 'ஙே' என நம்மை பார்க்கும் போதுதான் மனசில் பல தத்துவங்கள் கதவை தட்டும்.

நீங்கள் தயார் என்றால் நம் பயணமும் தயார். உங்களை அலெக்காக தூக்கிச் செல்லப்போகிறேன் இமயமலையின் பனிச்சிகரங்களுக்கு!

பையன் குடும்பத்துடன் பாரினில் செட்டிலாகிவிட ஆள் இல்லாத வீட்டில் அனாதையாய் திரியும்போதுதான், நாம் செய்த பாவங்கள் நினைவுக்கு வந்து, குற்றவுணர்ச்சிகள் கண்ணீராக பெருகும். அடடா! இத்தனை நாள் பொருளைத் தேடி ஓடினோம், என்னத்தை கண்டோம். அருளை பெறாமல்போனோமே! என ஞானம் பிறக்கும். உடனே யூ டர்ன் அடித்து இனியாவது அருளை தேடுவோம் என காசி இராமேஸ்வரத்துக்கு ரிசர்வேஷன் செய்ய ஓடுகிறோம்.

எதற்கு இந்த காலம்கடந்த வேலை. பொருளை தேடும் அதே நேரத்தில் இளமைப்பருவத்தில் அவ்வப்போது அருளையும் தேடி பெற்றால் வாழ்க்கையும் மணக்கும், உள்ளமும் திளைக்கும், ஆனந்த அலை ஆன்மாவில் பல்கிபெருகும்.

இது இன்ஸ்டண்ட் காலம் - எல்லாம் உடனுக்குடன். பொருளின்பத்தை தேடிக்கொண்டே உடனுக்குடன் அருள் இன்பத்தையும் அடையலாம். கம்ப்யூட்டரை ரீப்ரஷ் செய்துகொள்வது போல இன்ஸ்டண்ட் காபி இன்ஸ்டெண்ட் சாம்பார் போல இன்ஸ்டண்ட் அருள்

அது என்ன இன்ஸ்டண்ட் அருள்?
அதுதான் இத்தொடர்.

இமயமலை பயணத்தில் நான் பெற்ற அற்புத அனுபவங்களை நான் கண்டுணர்ந்த பேராற்றலின் ஒளி வெள்ளத்தை இயற்கையின் கண்ணுக்கெட்டா பிரம்மாண்டத்தை அதன் பேரழகை, என் சிறிய வார்த்தைகளின் வழியாக இத்தொடர் மூலம் கடந்து போகிறேன். இதுதான் அந்த இன்ஸ்டண்ட் அருள். இந்த அருளை உங்களுக்கு இத்தொடர் மூலம் வழங்க ஏற்பாடு செய்திருப்பவர்கள் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களும் அவரது ஈஷா யோக மையமும். தியான யாத்திரை எனும் பெயரில் இமயமலையின் புண்ணிய தலங்களை தரிசித்து அதன் மறைபொருளை அனைவரும் அறிந்துணரும் வகையிலும் உள்முகமாக அவரவர் மனத்துள்ளிருக்கும் பனிச்சிகரங்களின் உச்சியை அடையும் வகையிலும் தியானயாத்திரை எனும் பெயரில் இந்த இமயமலை பயணத்தை வடிவமைத்துள்ளனர்.

அவர்களது ஈஷா யோக மையத்தில் பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் 200 பேருடன் நான் மேற்கொண்ட பயணமும், பயணத்தில் நான் கண்ட அனுபவங்களும், அவ்விடங்கள் பற்றிய அரிய கதைகளுமே இத்தொடர்.

காட்டாற்று வெள்ளத்தில் கண்டபடி சிக்கித் தவிக்கும் மனித வாழ்வெனும் படகு சட்டென தன்னையே நதியாகவும், மலையாகவும், காற்றாகவும், ஆகாய வெளியாகவும் உணரும் தருணத்தை இந்தப் பயணத்தில் உணர்ந்தேன்.

இமயமலையின் பனிசிகரங்களின் குளிரில் உடல் சுருங்கி உள்ளம் விரிவுகொள்ளும்போது என் மனம் கொண்ட நிலை அது. நாம் சுமந்த உடலும் அகமும் வேறல்ல. இரண்டும் ஒன்றென உணரும் தருணம்.

நான் பெற்ற இந்த நிலையை இத்தொடர் மூலம் நீங்களும் பெறப்போகிறீர்கள்.

என்னுடன் அருளை பெற இத்தொடரில் ஓடத் தயாரா?

இதோ இன்னும் பத்து நிமிடத்தில் டெல்லிக்கு செல்லும் கிராண்ட் ட்ரங்க் ரயில் புறப்பட போகிறது. டெல்லியிலிருந்து ஹரித்துவார் வழியாகத்தான் இமயமலைக்கு போக முடியும். ஆனால் ஒரு கண்டிஷன் என்னுடன் வருவதாக இருந்தால் வெறும் கையும் காலும் மட்டும் பத்தாது. உடன் பெரிய பையில் நான்கு செட் துணிமணிகள், உடன் கையுறை, காலுறை, ஸ்வெட்டர், ஜெர்கின், மலையேறும் ஈரம் புகாத ஷூக்கள், குரங்கு குல்லாய் எனும் மங்கிகேப், கூலர்ஸ் குளிரை கட்டுப்படுத்தும் தெர்மல் உள்ளாடைகள் இவையனைத்தும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

என்ன இவ்வளவு வெயிட்டா? என்ன செய்வது நாம் செய்யும் பாவங்களின் எடை அதிகமாச்சே அதில் கால்வாசியாவது இல்லாவிட்டால் எப்படி?

இவையெல்லாவற்றுடன் நீங்கள் தயார் என்றால் நம் பயணமும் தயார். உங்களை அலெக்காக தூக்கிச் செல்லப்போகிறேன் இமயமலையின் பனிச்சிகரங்களுக்கு!

அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் உள்ளம் பனிமலையில் துள்ளி குதிக்கவிருக்கிறது. ஹரித்துவாரின் புகழ்பெற்ற சண்டிதேவி மலைக்கோவில் பூசாரியிடம் முதுகில் அடிவாங்கி ஆசிர்வாதம் பெற்று, ஆவி பறக்கும் பத்ரி நாத்தின் வெண்ணீர் தொட்டியில் சூடு பறக்க குளித்தெழுந்த பரவசத்துடன் - சுற்றிலும் வெள்ளை போர்த்திய மலைகளுக்கிடையில் மந்தாகினி நதியின் சலசல சத்தங்களுக்கிடையில் - எண்ணற்ற தவயோகிகள் முனிவர்களின் தரிசனங்களுடன் - பசுமையான பிரம்மாண்ட மலைகளிலிருந்து விழும் அருவிகளை ரசித்தபடியும் அகண்டு விரிந்த பள்ளத்தாக்குகளில் மனதை காற்றாடியாக பறக்கவிட்டபடியும், அதிகாலை கொடும் குளிர் இருளில் முதல் வெளிச்சம் விழும் தங்க நிற பனிச்சிகரத்தை பார்க்கும் பரவசத்துடன், உயிர் பயம் கவ்வும் அபாயகரமான மலைச்சரிவின் திருப்பங்களில் அலறியபடி, மரங்களில் பனிப் போர்த்திய புனித நதியாம் கங்கை நதியின் பிறப்பிடமான கோமுக்கை தரிசித்து - 3,200 மீட்டர் உயரத்தில் 14 கி.மீ செங்குத்து மலையாம் கேதார்நாத்திற்கு கால்வலிக்க நடந்து சென்று உடலை சுருக்கி உள்ளத்தை பெருக்கி பொங்கி பிரவகிக்கும் ரிஷிகேஷ் நதிக்கு நடத்தப்படும் பிரம்மாண்டமான ஆரத்தியை கண்டு களிப்பதுடன், இன்னும் இந்தியாவின் கடைசி கிராமம் மானா, குப்தகாசி, உத்தரகாசி என பல இடங்களுக்கு பயணிக்கப் போகிறீர்கள். என்ன டிரையிலர் ஓகேவா?

இதோ ரெயில்வே ஸ்டேஷனில் அவசரமாக ஓடுகிறேன். 5-ம் எண் ப்ளாட் பார்ம், வாசலிலேயே இரண்டு சேவகர்கள் கையில் ஈஷா பேனருடன் காத்திருக்க அவர்களிடம் மூச்சு வாங்கிக்கொண்டே பேரை சொல்லி வருகையை பதிவு செய்ய அவர்களும் என் பெயரில் டிக் அடித்துவிட்டு, வண்டி கிளம்பப் போகிறது சீக்கிரம் என விரட்ட, எஸ் 10 கோச்சை தேடி ஓடுகிறேன். நண்பர்களே, இப்ப பேச நேரமில்லை, அடுத்த வாரத்தில் ரயலில் சந்திப்போம் பல சுவாரசியமான விஷயங்களுடன்.

வரும் பதிவில் இரயில் பயணம் முதல் ஹரித்துவார் சிவன் சிலை வரை விவரிக்கிறார் எழுத்தாளர்! காத்திருங்கள்!


குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.

தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555

வலைதளம்: www.sacredwalks.org

 

'இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1