ஓ! நான் இவரை பல போஸ்டர்களில் பார்த்திருக்கிறேன், டிவியில் கேட்டிருக்கிறேன், விகடனில் வாசித்திருக்கிறேன் என்றவர்களுக்கெல்லாம் சத்குருவை தன் குருவாய் இதயத்தின் ஆழத்திலிருந்து உணரச் செய்த ஒரு புத்தகம் உண்டென்றால் அது ஞானத்தின் பிரம்மாண்டம். யோகத்தின் சுவையூட்டி, ஞானத்தில் நம்மை திளைக்கச் செய்த புத்தகமல்லவா அது! அதிலிருந்து...


ஈஷா புத்தக அறிமுகம்!

கடந்த பத்தாண்டுகளில் வெவ்வேறு சூழல்களில் தன் சீடர்களிடம் சத்குரு பேசிய ஞான வாசகங்களின் பதிவுகளே இந்தப் புத்தகம். பொதுமக்கள் மத்தியில் அவர் பொதுவாகப் பேசாத பல அபூர்வமான தளங்களில் எல்லாம், தன்னோடு நெடுங்காலம் வசிக்கும் பேறுபெற்ற சிலர் மத்தியில் சத்குரு பேசுகிறார். சராசரி வாசகரை இந்த நூல் அதிர்ச்சியூட்டலாம். தூண்டலாம். மகிழ்ச்சி தரலாம். ஆனால் திறந்த மனதோடு அணுகும்போது இந்த நூல் ஒரு சக்திமிக்க ஆத்மசாதனையாய், படைப்பின் மூலத்தைத் தேடும் உள்நிலைப் பயணமாய் மாறலாம்.

பக்கம் 280ல்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ஒருமுறை நான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தசரா விடுமுறை காலத்தில் என்னோடு படித்த ஒரு பெண் நிம்மோனியா காய்ச்சல் வந்து இறந்துபோனாள். எனவே மரணம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டது. என் தந்தை ஒரு மருத்துவர். எனவே அவரது அலமாரியில் இருந்து 98 கார்ட்டினல் சோடியம் மாத்திரைகளை சேகரித்துக் கொண்டேன். அன்று இரவு நான் உணவை சாப்பிட மறுத்துவிட்டு வெறும் வயிற்றில் இந்த 98 மாத்திரைகளை விழுங்கிவிட்டுப் படுக்கைக்கு போய்விட்டேன்.


பக்கம் 434...

சாதகர்:

உடலற்ற ஓர் உயிருக்கு நீங்கள் உதவிய ஒரு சம்பவத்தை எங்களுக்கு சொல்ல முடியுமா?

சத்குரு:

கூரையின்மேல் இருந்த அந்தப் பெண்ணைப் பற்றி உங்களுக்கு சொல்கிறேன். அதுபோன்ற பல உயிர்களுக்கு பலவற்றை நாம் செய்திருக்கிறோம். ஆனால் இந்த குறிப்பிட்ட உயிர் ஒன்றரை ஆண்டுகள், 2 ஆண்டுகள் வரையில் அங்கே காத்திருந்தது. சில உயிர்கள் உள்ளன. மொத்தமாகவே அவை வடிவமற்று இருக்கும். ஆனால் இந்தப் பெண் தன்னுடைய பெண்மை வடிவத்தை மிக நன்றாக நிலை நிறுத்தியிருந்தாள். உலகில் எந்தப் பெண்ணும் அப்படி இருக்கமுடியாது. அந்தளவு அழகாகவும் வழக்கத்தை விடவும் பெரிய வடிவத்தில் இருந்தாள். தான் மிக அழகான ஆடைகளை அணிந்து கொண்டிருப்பதாக மாயையை ஏற்படுத்தி இருந்தாள்.

இரவு நேரங்களில் என் குடிலுக்குள் இருக்கிற வராண்டாவில் அவள் நடந்து கொண்டிருப்பாள். அவள் சலங்கை, ஜிங் ஜிங் ஜிங் ஜிங் என்று ஓசை எழுப்பும். நான் மட்டும் அதைக் கேட்கவில்லை. குடிலில் தங்கி இருந்தவர்களெல்லாம் இரவு முழுவதும் அவள் நடந்துபோகிற ஓசையைக் கேட்பார்கள். கீழ்க்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தால் கூரையின் மேல், முகத்தில் நிரந்தரமான ஒரு ஏக்கம் குடிகொண்டு இருக்க அமர்ந்திருப்பாள்.

ஞானத்தின் பிரம்மாண்டம்

ஆசிரியர்: சத்குரு
பக்கம்: 584
விலை: ரூ.225
ஈஷாவின் புத்தக வெளியீடுகளைப் பெற: 0422-2515415