இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 13

பத்ரிநாத்திலிருந்து கங்கோத்ரிக்குப் புறப்படும் தருணத்தில் நிகழ்ந்தவற்றை விவரிக்கும் எழுத்தாளர், அங்கே லக்கேஜ்களை வாகனங்களில் ஏற்றும் செயல்முறைகூட ஆன்மீகத்தின் திறவுகோலாக அமைகிற அழகை குறிப்பிடுகிறார். குறிப்பாக அங்கே நிகழ்ந்த குருபூஜை பற்றியும் குருபூஜை செய்வதிலுள்ள தத்துவம் குறித்த தனது கருத்தையும் பதிவுசெய்கிறார்!

திரு. அஜயன் பாலா:

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா, writer ajayan balaஇப்போது மீண்டும் இமயமலையின் பத்ரிநாத் அடிவாரத்துக்குத் திரும்புவோம். அதிகாலையில் பொன்னிறமாகும் பனிச்சிகரத்தைப் பார்த்த அனுபவம் மனதில் புகைப்படமாய் உறைந்து கிடக்க அனைவரும் விடியற்காலையில் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு அடுத்த இலக்கான கங்கோத்ரிக்குத் தயாரானோம்.

வழக்கம் போல நாங்கள் தங்கியிருந்த விடுதி வாசலுக்கு வாகனங்கள் வந்து நிற்க அனைவரும் அவரவர் பேருந்துகளில் துரிதமாக சுமைகளை ஏற்றத் துவங்கினர். இந்தச் சுமைகளை பேருந்தில் ஏற்றுவது மேலோட்டமாக பார்த்தால் ஒரு சாதாரணமான விஷயம்தான். ஆனால் அதற்குள்ளும் நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் ஒளிந்து கிடப்பதையும், ஆன்மீகத்தின் சிறுவாசல் அதனுள்ளும் ஒளிந்துகிடப்பதை அவ்வப்போது தரிசிப்பேன். உண்மையில் அக்காட்சி பார்ப்பதற்கு எதோ போர்க்களத்தில் இருப்பதுபோல படு சுவாரசியமாகவும், பரபரப்பாகவும் இருக்கும். பயணிகள் தங்கள் கைப்பை போக பெரிய லக்கேஜுகளைக் கீழே வரிசையாகக் கொண்டு வைக்க, அதனை ஒருவர் எடுத்து ஏணியில் தயாராக காத்திருப்பவரின் தலையில் வைக்க அவர் அதனை சுமந்து மேலே எடுத்துச் செல்ல, அங்கு காத்திருப்பவர்கள் அதனை வாங்கிக் கூரையில் ஒழுங்காக அடுக்கி முடிவில் தார்பாலின் போர்த்தி இறுக்கக் கட்டுவார்கள். ஒவ்வொரு பேருந்திலும் ஒவ்வொரு குழு இதற்கென்றே துவக்கம் முதலே செயல்படும். அதில் வண்டியோட்டியும், க்ளினரும் அதற்குச் சில உதவி செய்வார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
இப்படியாக நான்கைந்து பேர் ஒன்றுகூடி பிறருக்காக இந்தப் பணியை அவர்கள் சிரத்தையுடன் அக்கறையுடன் செய்யும் சமயங்களில் அவர்களுக்குள் ஏற்படும் ஒத்திசைவும், உற்சாகமும் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கும்.

இப்படியாக நான்கைந்து பேர் ஒன்றுகூடி பிறருக்காக இந்தப் பணியை அவர்கள் சிரத்தையுடன் அக்கறையுடன் செய்யும் சமயங்களில் அவர்களுக்குள் ஏற்படும் ஒத்திசைவும், உற்சாகமும் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கும். ஒரு பக்கம் இப்படி பரபரப்பாக சுமைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் காலை உணவு பரிமாறலும் நடந்துகொண்டிருந்தது. இதமான வெயிலும் உடல் சில்லிடும் இதமான குளிருமாக சூழல் ரம்மியமாக இருக்க பலரும் உற்சாகமாக பத்ரிநாத்திலிருந்து விடைபெறும் கடைசி நொடிகளில் கரைந்து கொண்டிருந்தனர். ஒவ்வொருமுறை புதிய உடைகளுக்கு மாறியபின் கையில் காமரா வைத்திருப்பவர்கள் தங்களுக்கு பிடித்தமானவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கமான வைபவமும் நடந்து கொண்டிருந்தது. முழுவதுமாக சுமைகள் ஏற்றியபின் அருகிலிருந்த சிறிய அறைக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கு நானும் சென்றபோது வழக்கமாக நடைபெறும் குருபூஜை சடங்கை எங்களுடன் வந்த ஸ்வாமிகள் மற்றும் மா என அழைக்கப்படும் ஈஷாவின் பிரம்மச்சாரிகள் நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.

குருபூஜை என்பது தங்களது ஆன்மீக குருவுக்கு நன்றி தெரிவிக்கும்விதமான ஒர் அர்ப்பணிப்பு. இந்தியாவின் பாரம்பரிய மரபான வழக்கம், பண்பாட்டு வகையிலும் மிகவும் போற்றத்தக்கது.

தான் அடைந்த வெற்றிக்கும் பலனுக்கும் தன்னுடைய குருவும் காரணம் என்ற நினைப்பு அவனை மேலும் தொடர்ந்து வெற்றி பெறச் செய்கிறது. ஆன்மீக வாழ்க்கையிலும் இத்தகைய குரு பக்தி அவர்களை தொடர்ந்து முன்னெடுத்து சரியான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்பார்கள் அதற்கு ஜோதிட விளக்கம் எப்படியோ. ஆனால் அதன் உண்மையான அர்த்தம் இதுவாகத்தான் இருக்க முடியும். இத்தருணத்தில் நாமும் மறந்து போன நம் குருநாதர்களை நினைத்து வணங்கி நெஞ்சுருகித் தொழும் தருணமாக எடுத்துக் கொண்டால் வாழ்வின் இன்னொரு புதிய வாசல் திறக்கக்கூடும்.

வரும் பதிவில், உத்தர் காசியில் தான் பார்த்து அதிசயித்த பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் எழுத்தாளர், அந்த ஊரின் நிலவியல் அமைப்பு, மனிதர்கள், கோயிலின் வரலாற்றுச்சிறப்புகள் எனப் பலவற்றை நம் கண்முன் நிறுத்துகிறார்!

குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.

தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555

வலைதளம்: www.sacredwalks.org