நவராத்திரியின் எட்டாம் நாள் திருவிழா பற்றி, ஒரு சில வரிகள் உங்களுக்காக...

9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவில், இன்றைய எட்டாம் நாள் கொண்டாட்டத்தில் அஞ்சனா டோங்க்ரே மற்றும் குழுவினரின் ஃப்யூஷன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.30 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை ஆயிரக் கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பரதநாட்டியம் மற்றும் கதக் என இரு நடன பாணிகளின் சங்கமமாக, நிருத்யங்கன் நடனப் பள்ளி மாணவர்கள் ஒரு அழகிய நடன நிகழ்ச்சியை வழங்கி, தேவியின் அருள்மழையில் பார்வையாளர்களை நனைய வைத்தனர். நிகழ்ச்சியில், நடராஜ் கோபிகிருஷ்ணா கதக் நடனப்பள்ளியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், திரு.அகிலேஷ் சதுர்வேதி கதக் விருந்து அளித்தார். இவர் திரு.ராஜேந்திர சதுர்வேதியின் சிஷ்யர் ஆவார்.

மும்பையில் 1992ல் நிறுவப்பட்ட நிருத்யங்கன் நடனப்பள்ளியின் இயக்குனர் அஞ்சனா டாங்ரே, குரு உமாதேவிதத்தின் சிஷ்யையாக தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.

தேவியின் வளம், அதனோடு பிணைந்த சிவனின் ஆனந்த தாண்டவம் இதைக் கொண்டாடும் விதமாக பரதநாட்டியம், கதக் நடன பாணிகளின் ஜுகல் பந்தியை கலைஞர்கள் வழங்கினார்கள். லாஸ்யம் முதல் ரௌத்ர அங்கம் வரை தேவியின் பல்வேறு ரூபங்களை, குழுவினர் இரண்டு நடன பாணிகளின் வேறுபட்ட நுட்பங்கள் வாயிலாக சித்தரித்தனர். நடன நிகழ்ச்சியின் நீட்சியாக வந்த சிவனைப் பற்றிய தெள்ளிய வர்ணனையானது, அவனது தாண்டவத்தை குறிப்பதாக இருந்தது.

அந்த அற்புத நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிப்பாள். எட்டாம் நாளான நேற்று, சந்தன அலங்காரத்தில் காட்சியளித்த லிங்கபைரவி தேவி, பக்தர்களுக்கு அருளை வாரிவழங்கினாள்.

நாளை...

நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளான நாளைய கொண்டாட்டத்தில், செல்வி.திவ்யா நாயர் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது!