சுவாமிநாதன், திருப்பூர்

சுவாமிநாதன் - கல்லூரிப் பணியில் பேராசிரியராய் 30 வருட அனுபவமும், யோகப் பணியில் ஈஷா யோகா ஆசிரியராய் 20 வருட அனுபவமும் கொண்டவர். ஈஷாவில் பலருக்கு இவரை அறிமுகப்படுத்த தேவையில்லாத அளவிற்கு பரிச்சயமானவர். சத்குருவைத் தொடர்ந்து, முதல்முறையாக ஈஷா யோகா வகுப்புகளை தமிழில் எடுக்கத் துவங்கிய முதல் ஆசிரியர். சுவாமி அண்ணாவின் 20 வருட ஈஷா ஆசிரியர் அனுபவம்...

ஈஷா யோகா

1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதன்முறையாக சத்குரு அவர்களை சந்தித்தபோது என் வாழ்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்படும் என்று தோன்றியது. முதன் முதலில் என்னுடைய சைனஸ் தலைவலி தீருவதற்காக திருப்பூர் நடராஜ் செட்டியார் அன் சன்ஸ் நகைக்கடையில் நடைபெற்ற ஈஷா யோகா வகுப்பில்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஈஷா யோகா ஆசிரியர்கள் யாவரும் புல்லாங்குழல்கள்தான், ஆனால் அவர்களின் நாதம் சத்குருவுடையது, கீதம் சத்குருவுடையது, சக்தி சத்குருவுடையது.

திரு.லோகநாதன் அவர்களால் சேர்க்கப்பட்டேன். அந்த 13 நாட்கள் வகுப்பு நடத்தப்பட்ட விதம், சத்குருவின் விஞ்ஞானப்பூர்வமான வாழ்க்கை விளக்கங்கள் என்னை பெரிதும் ஈர்த்தன. கிரியா பயிற்சி செய்யத் துவங்கிய சில வாரங்களில் தீராத நிலையில் இருந்த சைனஸ் தலைவலி முற்றிலும் குணமாகியது. அதைத் தொடர்ந்து நடந்த வகுப்புகளுக்கு தன்னார்வத் தொண்டனாக சென்று கொண்டிருந்தேன்.

பாவ ஸ்பந்தனா

சத்குரு முதன்முதலாக பாவ ஸ்பந்தனா என்ற 3 நாட்கள் வகுப்பை திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் உள்ள பவர் திருமண மண்டபத்தில் 1989 டிசம்பர் மாதம் நடத்தினார்கள். அவ்வகுப்பில் மொத்தம் 62 பேர் கலந்து கொண்டோம். அவ்வகுப்பு என்னுள் நிறைய அனுபவங்களைத் தந்தது. என்னிடமிருந்த எல்லா தடைகளும் உடைந்து, கரைந்து, அப்பயிற்சியில் பங்கு பெற்ற அனைவரையும் என்னுள் ஒருவராக அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது. அப்பயிற்சியில் என்னுள் வெடிக்கிற மாதிரி சக்தி உருவாகி கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது.

நான் அப்போது கண்ணீர் மல்கி கசிந்து, “சத்குரு அருளால் நான் பெற்ற இந்த ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கொடு இறைவா!” என்று கதறினேன். அந்த எல்லையற்ற அனுபவம்தான் என்னை ஈஷா ஆசிரியராக மாற்றியது. அவ்வகுப்பு முடிந்து அடுத்த 13 நாள் வகுப்பிற்கு தன்னார்வத் தொண்டனாக அமர்ந்து இருக்கும்போது, சத்குரு ஒரு நோட்டு புத்தகத்தைக் கொடுத்து, ‘வகுப்பை வரிக்கு வரி குறிப்பு எடு’ என்று பணித்தார். அச்சமயம் சத்குரு ஆங்கிலத்தில் தான் உறையாற்றுவார். தமிழ் முற்றிலும் தெரியாது. அவ்வகுப்பு முடிந்து நோட்டு புத்தகத்தை கொடுக்கச் சென்றேன். ‘இல்லை வைத்துக்கொள், அதை திருப்பி பார்’ என்றார். பிறகு ‘இதை நீ தமிழில் பகிர்ந்து கொள்ளலாமே’ என்றார்.

ஈஷா யோகா - தமிழில்...

அடுத்த வகுப்பில் கிரியா பயிற்சிகளை தமிழில் அவர் முன்னிலையில் மொழிபெயர்ப்பு செய்தேன். ஆங்கிலத்தில் உள்ள குறிப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து சொல்லும்போது அப்பயிற்சிகளை அவர் செய்து பார்த்து குறிப்புகள் முறையாக இருக்கின்றனவா என்று உணர்ந்த பிறகு ‘மொழிபெயர்ப்பு சரி’ என்பார். அத்தனை அனுபவப்பூர்வமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

முதலில் எடுக்கப்பட்ட ஈஷா யோகா தமிழ் வகுப்புகளில் அவர் 10 நிமிடம் ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அருகில் அமர்ந்து நான் 10 நிமிடம் மொழிபெயர்ப்பு செய்வேன். திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மையங்களில் சுமார் 6 முதல் 8 வகுப்புகள்தான் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தேன். அதை கேட்டறிந்த அவர் பிறகு தாமே தமிழ் வகுப்புகள் எடுக்கும் அளவிற்கு தமிழில் பேச ஆரம்பித்துவிட்டார். அவருடைய புரிதலும், நுண்ணறிவும் என்னை வியப்பில் ஆழ்த்தின.

சம்யமா

பிறகு 1991 மே மாதத்தில் முதல் சம்யமா பயிற்சி முடிந்ததும் 21 நாட்கள் ஆசிரியர் பயிற்சி வகுப்பு பொள்ளாச்சி தேவர் தோப்பில் நடைபெற்றது. அப்பயிற்சி வகுப்பில்தான் புதிய கிரியா பயிற்சிகளை வடிவமைத்தார். எங்களுடன் ஒருவராக சமைத்து, உண்டு, உறங்கி, தன் அனுபவங்களை பகிர்ந்து, என்னை வகுப்பு எடுக்கச் சொல்லி, உடன் இருந்து திருத்தி வழி நடத்தி ஒரு முழுமையான மனிதராக வளர வழிவகுத்தார். இப்பயிற்சிக்கு பின் என் வாழ்க்கை முற்றிலும் மாற்றம் அடைந்தது. என்னுள் இருந்த கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற குணங்கள் தூக்கி எறியப்பட்டு அமைதியான, அன்பான, ஆனந்தமான மனிதனாக வளர ஆரம்பித்தேன்.

நான் எடுக்கும் வகுப்புகளில் எண்ணற்ற மக்கள் தங்கள் மனச் சோர்வு, உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவதை பார்க்கும்போது இச்சிறிய பணி மூலம் உயிர்கள் நலம் பெறுவது என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. இச்செயற்கரிய செயல் செய்யுமாறு என்னை வடிவமைத்த சத்குரு அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம்.

எங்கெங்கோ இருந்த எங்களை எல்லாம் எடுத்துக் கட்டி, செதுக்கி, துளையிட்டு, குழலாக மாற்றி, சென்று ஊதுங்கள் என்று அனுப்புகிறார். ஈஷா யோகா ஆசிரியர்கள் யாவரும் புல்லாங்குழல்கள்தான், ஆனால் அவர்களின் நாதம் சத்குருவுடையது, கீதம் சத்குருவுடையது, சக்தி சத்குருவுடையது.