என்றும் நம் நினைவில் உஸ்தாத் சையதுதீன் தாகர்
ஆன்மீகம் உணர இசை ஓர் அற்புதக் கருவி என்பதைப் பலர் நிரூபித்து வாழ்ந்துகாட்டிச் சென்றுள்ளனர். அவர்களின் வரிசையில், ஹிந்துஸ்தானி இசைப் பாரம்பரியத்தில் தனக்கென தனி இடம் பிடித்தவரான உஸ்தாத் சையதுதீன் தாகர் அவர்களின் நினைவுகளையும், ஈஷாவுடன் அவர்கொண்டிருந்த பிணைப்பையும் பற்றி சில வார்த்தைகள்!
 
 

ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் துருபத பிரிவின் முன்னணி இசைக்கலைஞரான உஸ்தாத் சையதுதீன் தாகர் 2017 ஜூலை 30 அன்று இம்மண்ணுலகில் இருந்து மறைந்தார். இசைக்கலைஞராக தமக்கு அறிமுகமான திரு. உஸ்தாத் அவர்களுக்குள் நிறைந்திருந்த மனிதம் பற்றி உணரக் கிடைத்த வாய்ப்பை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் நமது ஈஷா தன்னார்வத்தொண்டர்.

 

உஸ்தாத் சையதுதீன் தாகர் அவர்களின் மறைவைக் கேட்டவுடன், முதல்முறையாக அவரது இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நினைவுகள் மீண்டும் கண்முன்னே நடப்பது போலவே என்னுள் எழுந்தது. 2010ம் ஆண்டு யக்ஷாவில் கலந்து கொண்டு பாட அவரைக் கேட்டிருந்தோம். உயிரோட்டத்துடன் நிகழ்ந்த நிகழ்ச்சியின் நிறைவாக நன்றி தெரிவித்துப் பேசிய அவரிடம் நன்றியுணர்வு நிறைந்திருந்தது. சத்குருவின் ஆசீர்வாதத்தை வேண்டிய அவரது கனிவான பேச்சு, அவரது பணிவான பண்பை உணர்த்துவதாக இருந்தது.
பெருமையுடன் தொடர்ந்து வரும் துருபத பாடகர்கள் இசைப் பரம்பரையைச் சேர்ந்தவர் உஸ்தாத் சையதுதீன். புகழ்பெற்ற மியான் டான்சென் அவர்களின் குருவான சுவாமி ஹரிதாஸ் தாகர் தான் இவரது பரம்பரையின் குரு. தமது சிஷ்யரின் அபாரமான திறமையை மெச்சிய சுவாமி ஹரிதாஸ் தாகர், தமது "தாகர்" என்ற பெயரையே அவருக்கும் சூட்டினார் என்று இவரது வம்சாவளி பற்றி பெருமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாமி ஹரிதாஸ் தாகர் அவர்களிடம் சிஷ்யராக இருந்த இத்தகைய பெருமைமிகு குலத்தின் 19வது தலைமுறையில் பிறந்தவர் தான் உஸ்தாத் சையதுதீன். அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தில், இவரது குடும்பத்தினரும் மற்ற பல குடும்பங்களைப் போல மிரட்டலாலும், துன்புறுத்தலாலும் வாள் முனையில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்கள். அவர்களுக்கு பாடவும் தடை விதிக்கப்பட்டதால், ஆலாபனையை பிரித்து, தனித்தனி ஒலிகளாக மாற்றம் செய்து பாடத் துவங்கினர். இன்றுவரையிலும் இந்த பாணியையே அவரது குடும்பத்தினர் பின்பற்றி வருகின்றனர்.

அவரது தலைமுறையில் அனைவருக்கும் இளையவராக பிறந்தவரான உஸ்தாத் சையதுதீன், மென்மையான பக்தியூட்டும் பாடல்களுக்கு பெயர் பெற்றவர். பெரும்பாலான நேரங்களில் அவர் தன்னைக் கரைத்து உருகிப் பாடுகிறார் என்பது அவரது கண்களில் பொங்கும் அருவியில் வெளிப்படும்.

தனிப்பட்ட முறையில் உஸ்தாத் பற்றி அறிந்த எங்களுக்கு அவரது இயல்பு தனித்துவமாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. எந்த எதிர்ப்பும் அற்றவராக, அந்த சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில் இயல்பான வடிவமெடுக்கும் தண்ணீரைப் போலவே அவர் இருந்தார். முதல்முறையாக ஆசிரமம் வந்தபோதே இதை எங்களால் உணர முடிந்தது. அவரிடம் வேண்டுகோளாக கேட்டுக்கொண்டால்கூட அதில் பக்தியுடனும், நன்றியுடனும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் தியானலிங்க நாத ஆராதனையில், அடுத்து பஞ்சபூத ஆராதனையில், மீண்டும் மஹாசிவராத்திரியன்று என மூன்று முறை இங்கே இருந்தபோது பாடினார். மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களுக்குப் பிறகு இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து செல்லக் கேட்டுக்கொண்ட போதும் உடனே சம்மதித்தார். தாம் அடுத்து கலந்து கொள்ளவிருந்த, ஒவ்வொரு ஆண்டும் வாரணாசியில் தொடர்ந்து பாடிவரும் அவரது இசை நிகழ்ச்சியைக்கூட இதற்காக மாற்றியமைத்துக் கொண்டார். இங்கு தங்கியிருந்தபோது ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாடினார். நிகழ்ச்சி முடிந்தபோது பல மாணவர்களுக்கு இது போதாது என்ற ஏக்கமும் இன்னும் அவர் தங்களுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமுமே இருந்தது.

2015ல் இரண்டாவது முறையாக யக்ஷாவில் பாட வந்தபோது ஜெய்த் கல்யாண் என்ற அபூர்வமான ராகத்திலும் பாடினார். கற்றுக் கொண்டது முதல் இந்த 45 ஆண்டுகளில் இதுவரை இந்த ராகத்தில் அவர் பாடியதே இல்லை. மீண்டும் ஒருமுறை வந்து சத்குருவின் ஆசீர்வாதத்தைப் பெற முடிந்தது என்பதற்காக அவர் இந்த வாய்ப்புக்கு நன்றியும் தெரிவித்தார்.

இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து ஆசிரமத்துடன் தொடர்பிலேயே இருந்து வந்ததுடன், சத்குருவுடனும் தமக்கு ஈடுபாடு ஏற்பட்டள்ளதை உஸ்தாத் உணர்ந்திருந்தார். அவரைப் பற்றி அறிந்தவர்கள் இதயத்தில், தம் இசையின் மீதும் தம் வாழ்வின் மீதும் பக்தி கொண்டவராகவே என்றும் நினைவில் இருப்பார்.

- ஈஷா தன்னார்வத் தொண்டர்

இசையை பற்றியும், ஆன்மீகம் பற்றியும் கடந்த 2015ம் ஆண்டு யக்ஷாவில் கலந்து கொண்டு பாடும் முன் திரு. உஸ்தாத் இப்படி பகிர்ந்து கொண்டார்..

"நான் ஏற்கனவே ஒருமுறை ஆசிரமத்தில் ஒரு வாரம் தங்கியிருக்கிறேன். அப்போது சத்குருவுடன் தியானலிங்கத்தில் நடந்த பஞ்சபூத ஆராதனையிலும் கலந்து கொண்டிருக்கிறேன். எந்த இடமாக இருந்தாலும், அந்த இடத்தின் ஆன்மீக சாரமே மதங்களையும் விட முக்கியமானது. நான் ஒரு முறை பாரிஸ் நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் அதன் பாதிரியார் என்னருகில் இருக்க பாடியிருக்கிறேன். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடங்கள் எல்லாம் மதம் கடந்த ஆலயங்கள். இருந்தபோதிலும், ஒவ்வொரு இடத்தின் தரமும் வேறுவேறாக இருப்பதாகவே உணர்கிறேன்.

இன்றைய தலைமுறையினர் எல்லாவற்றையுமே மிகவேகமாக அடையவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இப்படித்தான் ஒருமுறை யாரோ ஒருவர் என்னிடம் வந்து தனது மகனுக்கு ஒரே வாரத்தில் பாடும் விதத்தில் எதாவது கற்றுத்தர முடியுமா என்று கேட்டார். இப்படி ஒருவரால் கேட்க முடியும் என்பதே, தினமும் 8 முதல் 12 மணிநேரம் சாதகம் செய்து வரும் எனக்குப் புரியவேயில்லை.

நான் என்ன பாடுகிறேன் என்று உணர்ந்து பாடும்போது மட்டுமே அதை கேட்கும் மக்களும் அதை அப்படியே உணர முடியும். நான் கண்நிறைந்து பாடும்போது ரசிகர்களும் அப்படியே உருகுவார்கள். ஒருவர் கண்களில் நீர்வர இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது - அது உள்ளம் நிறைந்த ஆனந்தத்தாலும் இருக்கலாம் அல்லது வலியாகவும் இருக்கலாம்."
துருபத என்ற சமஸ்கிருத சொல்லிற்கு தூண் என்று பொருள்படும். இசைக்கலையில் நிரந்தரமாக ஒரு இடத்தை ஏற்படுத்தியிருக்கும் இப்பிரிவுக்கும் கலைஞர்களுக்கும் மிக பொருத்தமாகவே அமைந்துவிட்டது இந்த பெயர்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1