அன்று தமிழக அரசில் கட்டிடப் பொறியாளர், ஆனால் இன்று ஈஷாவில் பிரம்மச்சாரி... தன் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது எது? அன்றிலிருந்து இன்று வரை, தான் கடந்து வந்த பாதை, அதில் ஏற்பட்ட அனுபவங்கள், தன்னை ஆட்கொண்ட சத்குருவின் அருள் என்று நம்மோடு நெகிழ்வாக இதில் பகிர்ந்துகொள்கிறார் சுவாமி. நிஷ்சலா அவர்கள்.

 

சுவாமி. நிஷ்சலா:

நான் தமிழக அரசில் பொறியியலாளராகப் பணியில் இருந்தபோது, 1990-ம் ஆண்டு ஈஷா யோகா வகுப்பு பயின்று, கிரியா மற்றும் சூன்ய தியானம் பயிற்சி செய்து வந்தேன். ஈஷா திருவிழாவுக்காக, 1997-ல், முதன்முறையாக ஈஷா யோக மையம் வந்தேன். விழா நடக்கும் இடத்துக்குச் சென்றபோது சத்குரு, தியான அன்பர்களுடன் வந்துகொண்டு இருந்தார்.

‘நான்’ என்று நான் நினைத்த அத்தனையும் ஒடுங்கி மறைந்த நிலையில் புதிய பிரம்மாண்டத்தின் உதயம் அது. மீண்டும் ஒருமுறை பிறந்தேன். அளப்பரிய அருளினாலும், சக்தியினாலும் ஆட்கொள்ளப்பட்டேன்.

அவரது அருள் ததும்பும் கண்களை ஒரு கணம் உற்று நோக்கி வீழ்ந்து வணங்கினேன். அவரது அருள் வீச்சில் எனக்குள் பல கட்டுக்கள் அவிழ்ந்து சட்டென்று உள்ளுக்குள் விசாலமானேன். அந்த விசால உணர்வினால் எனக்குள் ஓர் ஆனந்தப் பிரவாகம். கண்களில் நீர் சொரிய நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன். கண் விழித்தபோது அவர் என்னைக் கடந்து போயிருந்தார். நான் அவரை வீழ்ந்து வணங்கிய அந்தக் கணம் என் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிட்டது.

அதன் பிறகு அருகில் நடக்கும் எல்லா யோக வகுப்புகளுக்கும் சென்று தன்னார்வத் தொண்டு செய்தேன். ஒவ்வொரு வகுப்பின் இறுதியிலும், வகுப்பில் பங்கெடுத்தவர்கள், தங்கள் வகுப்பினால் தங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களை பகிர்ந்துகொள்வார்கள். குடும்பத்தினருடனும், சமூகத்தில் மற்றவர்களுடனும், தற்போது எப்படி இணக்கமாக, இயல்பாக இருக்க முடிகிறது என்றும், மரம், செடி, கொடிகளையும் எப்படி நெருக்கமாக நேசிக்க முடிகிறது என்றும் அந்த ஒருமை உணர்வைப்பற்றி கண்ணீருடன் பகிர்ந்து கொள்வார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

உலக மக்கள் அனைவரும் இந்த யோக விஞ்ஞானத்தினால் விளையும் ஆனந்த அனுபவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பேராசைகொண்டேன். சத்குருவிடம், சந்நியாசி ஆக வேண்டும் என்ற என் வேண்டுகோளைச் சமர்ப்பித்தேன். அவர் அதற்கு, “அப்பாதை மிகவும் கடினமானது. அதில் நுழைவதற்கு முன் நூறு முறை யோசிக்க வேண்டும்“ என்றார். “சொந்த விருப்பு வெறுப்பின்றி சூழ்நிலைக்கு எது தேவையோ, அதைச் செய்ய வேண்டும். நீங்கள் மக்கள் சேவையில் ஈடுபடத் தயாரா? யோசித்து ஆறு மாதங்கள் கழித்து வரலாம்“ என்றார். ஆறு மாதங்கள் கழித்து ஆசிரமம் சென்றேன். மீண்டும் உறுதி செய்வதற்காக இன்னும் ஆறு மாதங்கள் ஆசிரமத்தில் தங்கச் சொன்னார்கள், தங்கினேன்.

அப்போது என் முன் இரு வகையான வாய்ப்புக்கள் இருந்தன. பிரம்மச்சரிய தீட்சை பெற்று துறவியாக இருந்து பணி செய்வது அல்லது இல்லற வாழ்க்கைக்கு மாறி அங்கிருந்தே தொண்டு செய்வது. மீதமில்லாமல் என்னை அர்ப்பணிப்பதில் உறுதியுடன் இருந்ததால் முதலாவதைத் தேர்ந்தெடுத்தேன்.

1998 மகா சிவராத்திரியன்று சத்குரு அவர்கள் எனக்கு பிரம்மச்சர்ய தீட்சை அருளினார்கள். இந்தப் பிறவியிலேயே, மிக முக்கியமான மற்றும் ஆனந்தமான நாள் அது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ‘நான்’ என்று நான் நினைத்த அத்தனையும் ஒடுங்கி மறைந்த நிலையில் புதிய பிரம்மாண்டத்தின் உதயம் அது. மீண்டும் ஒருமுறை பிறந்தேன். அளப்பரிய அருளினாலும், சக்தியினாலும் ஆட்கொள்ளப்பட்டேன். அன்றில் இருந்து இதை எழுதும் இக்கணம் வரை எனக்குள்ளேயே இருந்து ஏதோ ஒன்று என்னைத் தாங்கிக்கொண்டு இருப்பதையும் அங்கே நான் மிதந்துகொண்டு இருப்பதாகவும் போன்ற ஓர் உணர்வு. எந்த வித ஏக்கங்களும் தேக்கங்களும் இன்றி தெளிந்த நீரோடையைப் போல் ஓடிக்கொண்டே இருக்கிறேன். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பணி செய்தாலும் களைப்போ, மலைப்போ இல்லை.

தன்னலமற்ற செயல்களைச் செய்யும்போது ஒருவருக்குள் தேவையான சக்தி பொங்கி எழும் என்று சத்குரு கூறியிருக்கிறார்கள். நான் கட்டிடவியல் படித்து அதில் அனுபவம் பெற்றிருப்பதினால், ஆசிரமக் கட்டிடங்கள், ஈஷா வித்யா பள்ளிக் கட்டிடங்கள், ஈஷா கிராம மருத்துவமனைக் கட்டிடங்களை பொறியியல் படித்த பிரம்மச்சாரிகள் மற்றும் கிரகஸ்தர்கள் இணைந்து சத்குருவின் அறிவுரைப்படி உருவாக்குகிறோம்.

தன்னலம் கருதாமல் பிறர் நலனையே நோக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்கள் மத்தியில் வசிக்கும் இன்பம் அலாதியானது. அதை நான் அனுதினமும் அனுபவிக்கிறேன். இந்த வாய்ப்பு நான் பெற்ற வரம். தியானலிங்க திருத்தலத்தை மக்கள் பயன்பெறத்தக்க வகையில் பராமரித்தல், யோக விஞ்ஞானத்தை மக்களுக்குக் கொண்டுசெல்லுதல், சத்குரு அவர்களால் உருவாக்கப்பட்ட சமூக நலத் திட்டங்கள் ஆகிய மகா உன்னதமான பணிகளில் ஆயிரக்கணக்கான இல்லறத்தார்கள், பிரம்மசாரிகளுடன் இணைந்து முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் தன்னலமின்றிச் செயல் செய்கிறார்கள். பல தலைமுறைகளாக தொடரக்கூடிய இந்தப் பணியில் ஈடுபடும் இவர்களது இந்தத் தன்மையினால் எனக்குள் இவர்கள் கோபுரங்களாக எழுந்து நிற்கின்றனர். தினம் ஒருமுறையேனும் இக்கோபுரங்களை மானசீகமாக நான் வணங்குகிறேன்!

கண்ணசைவில் மற்றவரின் கர்மவினைகளைக் களைந்தெறியும் மாமுனிவர் சத்குருநாதர் அவர்களிடம் நான் வேண்டுவதெல்லாம், நான் மீண்டும் பிறந்து ஈஷாவில் சேவை செய்ய அருளவேண்டும் என்பதுதான்.