எள் தரும் எண்ணற்ற நன்மைகள்
எள்ளில் அடங்கியுள்ள பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றியும், எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயால் விளையும் நன்மைகளையும் உமையாள் பாட்டி கூற, நாம் இங்கு அறிந்துகொள்ளலாம்!
 
 

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 17

எள்ளில் அடங்கியுள்ள பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றியும், எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயால் விளையும் நன்மைகளையும் உமையாள் பாட்டி கூற, நாம் இங்கு அறிந்துகொள்ளலாம்!

“பாட்டி நீங்க ஈஷா யோகா போயிருந்ததா சொன்னாங்க! எப்போ வந்தீங்க?”
நெடுநாட்களுக்குப் பிறகு உமையாள் பாட்டியை சந்தித்தபோது நலம் விசாரித்தேன்.

“ஆமாம்ப்பா... நேத்து அமாவாசையில்ல... அதான் தியானலிங்க தரிசனம் பண்ணனும்னு நினைச்சேன் இன்னைக்கு காலையிலதான் வந்தேன்.” பாட்டி பேசிக்கொண்டே தனது கைப்பையில் எதையோ துழாவிக்கொண்டிருந்தாள்.

எள்ள ஊற வச்சு அந்த தண்ணிய பெண்கள் குடிச்சு வந்தா (தினமும் கால் டம்ளர்), மாதவிடாய் சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

“சரி... எனக்காக என்ன வாங்கிட்டு வந்தீங்க?” பாட்டியிடம் வேடிக்கையாகக் கேட்டேன்.

“நீ என்ன சின்ன பாப்பாவா... உனக்கு பொம்ம காரெல்லாம் வாங்கிட்டு வர்றதுக்கு?! ஆனா... பாட்டி உனக்காக தியாலிங்கப் பிரசாதம் வாங்கிட்டு வந்திருக்கேன். இந்தா வாங்கிக்கோ!”

தனது கைப்பையிலிருந்த எள்ளுப் பிரசாத உருண்டைகளை அன்புடன் கொடுத்தாள்.

“ஆமா... ஏன் இந்த எள்ள பிரசாதமா குடுக்குறாங்க பாட்டி... அதுக்கு ஏதாவது ஆன்மீக காரணம் இருக்கா?”

அதெல்லாம் நீ சத்குருகிட்டதான் கேக்கணும்! ஆனா... எனக்கு எள்ள பத்தின சில மருத்துவ பலன்கள் தெரியும். அத வேணும்னா நான் சொல்றேன்!”

“ஓ அப்படியா... சரி சொல்லுங்க!” சுவை மிகுந்த தியானலிங்க பிரசாதத்தை சுவைத்தபடியே ஆர்வமுடன் கேட்டேன்.

“நம்ம தமிழ்நாட்டு சமையல்ல எள்ளுலயிருந்து எடுக்குற நல்லெண்ணெய்தான் பிரதானமா பயன்படுது! இந்த நல்லெண்ணெய் உடல் ஆரோக்கியத்துக்கு பலவிதத்துல பயன்தருது. நல்லெண்ணெய்ய உணவுல தொடர்ந்து சேத்து வந்தா புத்தி தெளிவு, கண் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடற்வன்மை தரும். உடல் வெப்பத்தால் வர்ற கண் நோய், காது சம்மந்தமான பிரச்சனை, தலைவலி தீரும். முட்டையோட வெள்ளைக்கரு கூட கலந்து முகப் பருக்கள் மீது தடவி வந்தா, பருக்களில் வலி தீரும்; மஞ்சள்கருகூட கலந்து தீப்புண், சுண்ணாம்பு வேக்காட்டுனால உண்டான புண்ணுல பூசினா, புண் ஆறும். நல்லெண்ணெய் தேய்ச்சு வாரம் ரெண்டு தடவ குளிச்சு வந்தா, உடல் வெப்பமும் அது சம்மந்தமான நோய்களும் நீங்குறதோட, கண் குளிர்ச்சி அடையும், இரத்த ஓட்டம் சீராகும்.”

“ஓ... நல்லெண்ணெய் இவ்வளவு பலன் தருதா பாட்டி...?! இவ்வளவு நல்லது செய்யுறதுனாலதான் நல்லெண்ணெய்னு சொல்றாங்களோ?”

“ஆரம்பிச்சிட்டியா... இந்த வார்த்தை ஆராய்ச்சியெல்லாம் நீயே பண்ணிக்கோ! எள் சாப்பிடுறதுனால சில பலன் இருக்கு, அத வேண்ணா நான் உனக்கு சொல்றேன்... கேளு!”

“சரி... சரி... சொல்லுங்க கேக்குறேன்”

“எள்ள ஊற வச்சு அந்த தண்ணிய பெண்கள் குடிச்சு வந்தா (தினமும் கால் டம்ளர்), மாதவிடாய் சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைக்கும் நல்ல பலன் கிடைக்கும். எள் விழுது 1 சுண்டைக்காய் அளவு வெண்ணெயில கலந்து சாப்பிட்டு வந்தா, குருதி மூலம் குணமாகும். எள்ளை அரைச்சு கொதிக்க வச்சு, உடலில் ஏற்படும் கட்டிகளில் கட்டி வந்தா, கட்டி பழுத்து உடையும். எள் சாதம் உடலுக்கு வலிமை குடுக்கும்.”

எள் தரும் பலன்களை பாட்டி சொல்லியதைக் கேட்டபின், எள் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பது குறித்து எனக்கு எள்ளளவு சந்தேகம் இருக்கவில்லை!

எள் பற்றி எனக்கு எடுத்துக் கூறிய பாட்டியிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது, அதைக் கேட்டவுடன் பதில் சொல்லாமல் கோபமாக முறைத்தபடி அடுக்கறைக்குள் நுழைந்துகொண்டாள் பாட்டி!

நான் கேட்டது இதுதான், “எள்ளுன்னா எண்ணெயா நிக்கணும்னு சொல்றாங்களே... அது எதுக்கு பாட்டி?”

குறிப்பு:

  • எள் இலை - 1 (அ) 2 பச்சை இலைகளை (fresh leaves) எடுத்து குளிர்ந்த நீரில் அலசினால், அதிலிருந்து பசை போன்ற தன்மை இறங்கும். அது கண்களில் ஏற்படும் புண்களை கழுவ உதவும்.
  • எள்ளினை அதிகளவு எடுத்துக்கொண்டால் கரு கலையும் வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் எள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1