"எங்கள் இல்லத்துக்கு சத்குரு தனியாக வரவில்லை, தேவியையும் சேர்த்து அழைத்து வந்துவிட்டார்" - சத்குரு அவர்கள், சென்ற வாரத்தில், சென்னையில், தியான அன்பர்களின் இல்லங்களுக்குச் சென்று நிகழ்த்திய யந்திரப் பிரதிஷ்டைக்குப் பிறகு, அந்த தியான அன்பர்கள் மனம் நெகிழ்ந்து மற்றவர்களிடம் இவ்வாறு பகிர்ந்து கொண்டனர்.

ஏப்ரல் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சத்குரு அவர்கள் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 4ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியான அன்பர்களின் சந்திப்பில், 4000க்கும் மேற்பட்ட தியான அன்பர்கள் வந்து குவிந்துவிட்டார்கள்! கடந்த வருடம் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக, மிகச் சிறப்பாக நடந்து முடிந்த "சத்குருவுடன் ஈஷா யோகா" வகுப்புக்குப் பிறகு, தியான அன்பர்கள் சத்குருவை சந்திக்கும் வாய்ப்பு இப்போதுதான் அமைந்தது. தங்களது குருவின் முன்னிலையில், கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, தியான அன்பர்கள் நிரம்பியிருந்த அந்த அரங்கம், சிறிது நேரத்திலேயே சிரிப்பொலிகளால் அதிரத் துவங்கியது. நகைச்சுவை ததும்ப சத்குரு அருளிய தீர்க்கமான அருளுரைகள் அவர்களது ஆன்மீக தாகத்தை தணித்ததோடு, வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் சத்குரு அவர்கள் நேரடியாக நடத்தவிருக்கும் 'சத்குருவுடன் ஈஷா யோகா' நிகழ்ச்சிக்கு அவர்களைத் தயார்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

அடுத்த நாள், சத்குரு அவர்கள் நான்கு தியான அன்பர்களின் இல்லங்களில் லிங்கபைரவி யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்தார். தேவியின் புகழைப் பாடும் ஆராதனைப் பாடல்களுடன், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்களுடன், சத்குரு அவர்களுக்கு தியான அன்பர்களின் இல்லங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், சக்தி வாய்ந்த அனுபவத்தையும் விவரிக்க முடியாத ஆனந்தத்தையும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, சத்குரு, ஏப்ரல் 6ம் தேதி, சென்னையின் புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்றான சிஷ்யா பள்ளியின் தாளாளர் நாள் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நவீன கல்வி முறையைப் பற்றியும், கல்விமுறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களைப் பற்றியும் சத்குரு உரையாற்றினார். 500 பெற்றோர்களும், 100 மாணவர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சத்குரு, 'நாட்டின் மிகச் சிறந்த அறிவாளிகள் கல்வி கற்பிப்பதில் இறங்க வேண்டும் அப்போதுதான் இந்த நாட்டை மதிப்பு மிக்க நாடாக நாம் உருவாக்க முடியும்' என்று தெரிவித்தார். மேலும் 'நம் நாட்டிலிருக்கும் 120 கோடி மக்களையும் துடிப்புமிக்கவர்களாக, உயர்ந்த நோக்கமுடையவர்களாக, ஒழுக்கமானவர்களாக மாற்றாமல் போனால், நாம் மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வோம். ஆசிரியர்கள், தங்களது பணியை மாணவர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். ஆனால் இப்போதைய நிலையில் சில துடிப்புமிக்க ஆசிரியர்களைத் தவிர, மற்ற அனைவருமே இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தகுதியானவர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை' என்றும் கூறினார்.

இத்தனை கடும் பணிகளுக்கிடையே சத்குரு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. தற்போது நடைபெற்று வரும் 2012 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் துவக்க நாள் போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியை சத்குரு சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குச் சென்று நேரடியாக கண்டு களித்தார்! அங்கிருந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளினால், சத்குரு இப்போட்டியை கண்டு மகிழ்ந்ததை நம்மால் காமிராவில் படம் பிடித்து வழங்க இயலவில்லை என்றாலும், அந்தப் போட்டியை அவர் மிகவும் ரசித்திருப்பார் என்பது உறுதி!!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.