‘மஹா ப்யூட்டி பார்லர்’ நிறுவனரும் அழகுக் கலை நிபுணருமான மஹாலட்சுமி தன் உணவு அனுபவத்தைச் சொல்லும்போதே ஒரு ‘டிராமா’ போல இருந்தது.

மஹாலட்சுமி:

மலேஷியாவிலிருந்து ஆன்டனி போனில் கத்தினார், “மஹா... உங்க சோத்து வத்தல் இன்னியோட தீந்துபோச்சு. உடனடியாப் பண்ணி அனுப்புங்க...” தொடர்ந்து அவர் மனைவி, “அம்மா தாயே... அவருக்கு உன் சோத்து வத்தல் இல்லேன்னா சோறே இறங்காது. எப்படியாச்சும் அனுப்பிச்சுடும்மா...” என்றார். எனக்கு ஒரே சிரிப்பு.
ஒரு தடவை அவர் இந்தியா வந்தபோது, எங்கள் வீட்டில் மதிய சாப்பாடு சாப்பிட்டார். அப்போ இதை பொரிச்சுப் போட்டேன். அவ்வளவுதான். சாப்பிட்டு விட்டு, “அடடா, சூப்பர் சூப்பர்”னு புகழ்ந்து தள்ளிட்டார். “இந்த மாதிரி டேஸ்ட்ல நான் சாப்பிட்டதே இல்லை” என்றவர் மீதியை எடுத்துட்டுப் போயிட்டார். ஆக்சுவலா, நாங்க சாதம் மீந்து போச்சுன்னா செய்வோம். இப்ப இவருக்காக சாதம் வடிச்சுச் செய்றோம். மழைக் காலத்துக்கு ஏற்ற உணவு இது.” என்கிறார்.

சோற்று வற்றல்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்:

  • சாதம்: ஒரு பெரிய கிண்ணம் (மீந்த சாதத்திலும் செய்யலாம்)
  • காய்ந்த மிளகாய்: 15
  • ஜவ்வரிசி: 50 கிராம்
  • சீரகம்: 25 கிராம்
  • பெருங்காயம்: 5 கிராம்
  • உப்பு: தேவைக்கேற்ப
  • மஞ்சள்தூள்: ஒரு சிட்டிகை

செய்முறை:

ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையுடன் சாதத்தை நன்கு தண்ணீர் இல்லாமல் பிழிந்து அதனுடன் உப்பு போட்டு அரைக்கவும். பிறகு சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் கலந்து ஒரு நிமிடம் அரைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை வெயிலில்
சிறிய சிறிய துண்டுகளாக விரல்களால் கிள்ளிவைக்கவும். அல்லது கொட்டாங்குச்சியில் இருக்கும் ஓட்டையின் வழியாக போட்டு காயவைக்கலாம். காய வைத்ததைப் பொரித்துச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

“என் பையனுக்கு பன்னீர்ல செய்கிற எந்த பதார்த்தமும் ரொம்பப் பிடிக்கும். ஒருநாள் மதியம் திடீர்னு, “ஏதாவது பன்னீர் ஸ்வீட் செய்யும்மா” என்று நச்சரித்தான். சரின்னு நானே யோசனை செய்து வீட்டில் இருக்கிறதை வைத்துச் செய்தேன். அன்னிக்கு வந்த விருந்தினர்களுக்குக் கொடுத்தப்ப ரொம்ப விரும்பிச் சாப்பிட்டாங்க.
“உங்க பனீர் பாஸந்தி ரொம்ப நல்லா இருக்கு. எப்படி செஞ்சீங்க?”ன்னு ரெசிப்பி கேட்டு வாங்கிட்டுப் போனாங்க. உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமான உணவு இது.

பன்னீர் பாசந்தி

தேவையான பொருட்கள்:

  • பால்: 2 லிட்டர்
  • பன்னீர்: 200 கிராம்
  • ரவை: 2 பிடி
  • ஏலக்காய்: தேவைக்கேற்ப
  • சர்க்கரை: அரை கிலோ

செய்முறை:

இரண்டு லிட்டர் பாலை தண்ணீர் சேர்க்காமல் ஒரு லிட்டர் ஆகும் வரை சுண்டக் கொதிக்கவைக்கவும். இரண்டு பாக்கெட் பன்னீரை நன்கு உதிர்த்து, இரண்டு பிடி ரவையைச் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். இந்தச் சிறு உருண்டைகளை நன்கு சுண்டிய பாலுடன் சேர்த்து, மீதியுள்ள உதிர்த்த பன்னீர் தூளையும் கலந்து ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைத்து இறக்கவும். தேவையான சர்க்கரையை மிக்ஸியில் அடித்துப் பொடி செய்து கலந்து பரிமாறவும். பாலுடன் சர்க்கரையைச் சேர்க்கக் கூடாது. இறக்கிய பின்னரே சர்க்கரையைச் சேர்க்க வேண்டும்.

தினம் ஒரு கீரை!

இந்தியக் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், குழந்தைகளுக்குப் பல நோய்கள் எளிதில் தொற்றுகின்றன. உணவு இல்லாமல் பட்டினி கிடக்கும் குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் என்பது கிடையாது, சத்தற்ற உணவையே அதிகம் சாப்பிடும் குழந்தைகளும் இதனால் பாதிக்கப் படுகின்றனர்.

ஊட்டச் சத்துள்ள உணவு சாப்பிட வேண்டுமென்றால் நிறையச் செலவாகும் என்பது தவறான கருத்து. ஊட்டச் சத்துக் குறையை, பல வகைகளில், குறைந்த செலவில் நிவர்த்தி செய்ய முடியும். ஊட்டச் சத்துக்குக் கீரைகளும் மிகவும் உதவுகின்றன. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும்கூட. இரும்புச் சத்துப் பற்றாக்குறையை கீரைகள் சாப்பிட்டுப் போக்கிக்கொள்ளலாம்.

ஆனால், யார் தினமும் கீரை வாங்கி வருவது, யார் இலை-களை ஆய்வது, இதெல்லாம் இந்த அவசர உலகத்தில் எங்கே சாத்தியம் என்கிறீர்களா? அதற்கும் ஒரு வழி இருக்கிறது. கீரைகள் கிடைக்கும்போது மொத்தமாக வாங்கி வந்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதுவும் முடியாதவர்களுக்கு, இப்போதெல்லாம் கடையிலேயேகூட கீரைப் பொடிகள் விற்கிறார்கள். அப்படி 7 கீரைப் பொடிகள் தயார் செய்து சமையலறையில் வைத்துக்கொள்ளுங்கள். தினம் தினம் சாம்பார் பொடி போடும்போது, கூடவே ஒரு கைப்பிடி அளவு கீரைப் பொடியும் போட்டுவிடுங்கள். வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொடி. ஆக ஊட்டச் சத்துக்கு ஊட்டச் சத்து, சுவைக்குச் சுவை. யோகா மையத்திலும் இந்த முறையை கடைப்பிடிக்கிறோம்.

ஆப்பிரிக்காவில்கூட நமது ஊர் முருங்கை இலைப் பொடியை தருவித்து ஊட்டச் சத்துக்காகச் சமையலில் சேர்க்கிறார்கள்!

கீழ்க்கண்ட கீரைகளை இதற்காக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முருங்கை இலை, அகத்தி இலை, தூதுவளை, வல்லாரை, பொன்னாங்கன்னி, மணத்தக்காளி, வெந்தயக் கீரை