அறிந்தவருக்கு ஆசிரமம், அறியாதவருக்கு சுற்றுலா ஸ்தலம் என பலரையும் தம்பால் ஈர்க்கிறது கோயம்புத்தூர் அருகே இருக்கும் நம் ஈஷா யோக மையம். அப்படி சமீபத்தில் ஈஷாவிற்கு வந்திருந்த தபால்துறை அதிகாரிகளின் அனுபவமும் பகிர்தல்களும் இங்கே...

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில், இயற்கை அழகு மெய்சிலிர்க்க வைக்க, அங்கே குடி கொண்டிருக்கிறார் தியானலிங்கம். ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பலர் இங்கு வந்துபோகிறார்கள். அவர்களில் பலருக்கு சிவலிங்கம் கோவிலில் இருப்பதும், அங்கு தினசரி பூஜைகள் நடப்பதும் தான் பரிச்சயம். ஆனால் இங்கோ எல்லாம் வித்தியாசம். தியானலிங்கம் வீற்றிருக்கும் இடத்தில் பூஜைகள் இல்லை, மௌனம் மட்டுமே. உள்ளே சென்றால் 15 நிமிடங்கள் மௌனமாய் அமர்ந்து வெளிவருவது, இன்றைய காலத்தில் பலருக்கு புதுமையான அனுபவமாய் இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

புதிதாய் வருபவர்களிடம், தியானலிங்க அனுபவம் கேட்டால் ஒவ்வொருமுறையும் அவர்கள் கூறும் பதில் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இம்முறை காருண்யா பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த அஞ்சல்துறை மேலாளர்கள், அலுவலர்கள் என 150 பேர் நம் ஈஷா யோக மையத்தை பார்வையிட வந்திருந்தனர். இங்கு வந்தவர்கள் லிங்கபைரவி, தியானலிங்கத்தை பார்த்துவிட்டு, ஈஷா க்ரியா தியானமும் கற்றுக் கொண்டனர். இந்த அனுபவம் அவர்களை ஆழமாகத் தொட்டது.

வந்திருந்தவர்களில் ஒருவரான தமிழ்நாடு அஞ்சல்துறையின் மேற்குப் பகுதியின் அஞ்சலகத் தலைவர் அஞ்சுபிள்ளை, பகிர்ந்து கொண்டதாவது:

காருண்யா பல்கலைக்கழகத்தில் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்க நாங்கள் அனைவரும் இங்கே வந்தோம். இந்த மாநாட்டுடன் சேர்த்து, நாங்கள் அனைவரும் ஒரு குழவாக, ஈஷா யோக மையத்தை பார்வையிட வந்தோம். நான் இதற்கு முன் கூட இங்கு வந்திருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நான் நான்காவது முறையாக இங்கு வருகிறேன். இந்த இடத்தின் அமைதி, அழகு என்னை இங்கு ஈர்க்கிறது.

ஒவ்வொருமுறை இங்கு வரும்போதும் நான் புத்துணர்ச்சி அடைகிறேன். ஒரு புத்துணர்வு, ஒரு மறுமலர்ச்சி என்னுள் நிகழ்கிறது. அமைதியாய் இங்கு அமர்ந்து கண்மூடி தியானம் செய்திட எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் எப்போதும் தியானம் செய்திருக்கிறேன், ஆனால் இங்கு அது இன்னும் ஆழமாகி இருக்கிறது.

இங்கு வரும் சமயங்களில் ஒருமுறை சத்குருவை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் இடைத்தது. என் வாழ்விலே எனக்குக் கிடைத்த மிகமிக அழகான அனுபவமாய் அதை நான் கருதுகிறேன். இங்கு நிறைந்திருக்கும் அமைதி, நிம்மதி, சொல்லற்கரிய சக்தியை நான் உணர்ந்திட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதற்கு நான் நிச்சயம் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இங்கே என் மனம் அமைதியில் நிரம்புகிறது. மிக நிறைவாக உணர்கிறேன். நான் இங்கு இனி அடிக்கடி வருவேன். அதில் எனக்கு சந்தேகமில்லை.

என்னுடன் இன்று இங்கு வந்தவர்களிடம் நான் பேசினேன். பலருக்கும் இதுபோன்ற அனுபவமே கிடைத்திருக்கிறது. இந்த அனுபவத்தை எங்களுக்கு வழங்கிய சத்குருவிற்கு எங்கள் நன்றி!!!

தமிழ்நாடு அஞ்சல்துறையின் தலைவர் திரு.டி.மூர்த்தி அவர்களும், இவர்களுடன் நம் மையத்திற்கு வந்திருந்தார்.