தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்டால், கூடவே உணவு கொடுத்து விருந்து உபசரிக்கும் கலாச்சாரம் நமது. ஆனால், இப்போது நம் நாட்டில் தண்ணீர் பெரிய வியாபாரமாக, அரசியலாக மாறியுள்ளது. டெல்லியில் குடி தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க, ஒரு தண்ணீர் தேவைதை புறப்பட்டிருக்கிறாள். அப்படி என்ன செய்தாள் அவள்?! இங்கே சில வரிகள்...

தில்லியின் குடிநீர் பிரச்சனை

தில்லி நகராட்சி வழங்கும் தண்ணீரில் 70 சதவிகிதம் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்பதை பல ஆய்வறிக்கைகள் மூலம் அறிந்துகொண்ட 16 வயதேயான டெல்லி மாணவி ப்ரக்ரிதி சிங்(Prakriti singh), மக்களுக்காக நல்ல குடிநீரை மீட்டெடுக்கும் தூதராக, குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய முடிவெடுத்தாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவியான ப்ரக்ரிதி, தில்லியின் பல இடங்களுக்கு சென்று, குடிநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினாள். கிடைத்த ஆய்வறிக்கையை வைத்துக்கொண்டு, தில்லியின் மதன்பூர் காதர் பகுதியில் உப்புநீரை குடிநீராக்கும் (Aqua Pristine RO 250LPH) சுத்திகரிப்பு எந்திரத்தை பொருத்துவதற்கு ஆவன செய்தாள். இந்த எந்திரம் ஒரு நாளைக்கு 1500 லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து தரக்கூடியது.

இதுபற்றி ப்ரக்ரிதி கூறுகையில்...

"மதன்பூர் காதர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாசடைந்த குடிநீரை குடித்து வருவதை அறிந்தேன். அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விலைக்கு வாங்கி அருந்தும் அளவிற்கு வசதியில்லை. நான் அந்தப் பகுதியின் தண்ணீரை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி அதன் தன்மைகளை ஆராய்ந்ததில், அந்த தண்ணீர் சுத்திகரிக்க உகந்தது எனத் தெரிய வந்தது. ஆனால் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவுவதற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொகை தேவையாக இருந்தது.

நான் கேக் தயார் செய்து, அதனை விற்று சிறிதளவு பணம் திரட்டினேன். அத்தோடு, பெரிய நிறுவனங்களிடம் நன்கொடை திரட்டினேன். எப்படியோ சுமார் 1.5 லட்சம் சேர்த்துவிட்டோம். இப்போது அந்த எந்திரத்தை எங்கு நிறுவுவது என்பது கேள்விக்குறியாக இருந்தது. அந்தப் பகுதியில் ஒரு அரசு சாரா நிறுவனத்தால் இயங்கி வரும் பள்ளிக்கூடம் ஒன்றில் அதனை நிறுவ அனுமதி கிடைத்தது.

இப்போது அந்த 200 குடும்பங்கள் மட்டுமல்லாமல், அந்தப் பள்ளி மாணவர்கள் அனைவரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்துகின்றனர். சுத்தமான குடிநீரை அருந்துவதன் அவசியத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது. நான் சுத்தமான குடிநீருக்கான தூதராக இந்த செய்தியை என்னால் இயன்ற வரை அனைவரிடமும் கொண்டு சேர்க்கிறேன்."

தனது முதல் முயற்சி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, பஞ்சாபி பாக்கில், மானவ் ஆசிரமத்தில் மற்றுமொரு சுத்திகரிப்பு எந்திரத்தை நிறுவியிருக்கும் ப்ரக்ரிதி, அடுத்த மாதம் துக்ளக்பாத்தில் ஒரு முதியோர் இல்லத்தில் இன்னொரு எந்திரத்தை நிறுவ உள்ளார்.

பீஹாரில் மோசமான குடிநீரை அருந்தியதால் மஞ்சள் காமாலைக்குப் பலியான ப்ரக்ரிதியின் தாத்தாவின் மரணம், சுத்தமான குடிநீரை அருந்துவது குறித்த விழிப்புணர்வை ப்ரக்ரிதிக்கு வழங்கியது. டெல்லியில் தொடங்கியுள்ள தனது இந்த பணியை, எதிர்காலத்தில் பீஹாரிலும் கொண்டு சேர்ப்பேன் என உறுதியில் உள்ளார் மாணவி ப்ரக்ரிதி.