கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த சூழலில் சிறையில் கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும் விதமாக ஈஷா யோக மையம் ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு பிரத்யேக யோகா வகுப்புகளை நடத்தி வருகிறது.

தமிழக சிறைத் துறை உயர் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் இருக்கும் அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் ஜூலை 28ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. சத்குருவால் பயிற்றுவிக்கப்பட்ட ஈஷா யோகா ஆசிரியர்கள் இவ்வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.

இதில் யோக நமஸ்காரம், சிம்ம க்ரியா, ஈஷா க்ரியா போன்ற யோகப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. சிம்ம க்ரியா பயிற்சியானது நோய் எதிர்ப்பு சக்தியையும் நுரையீரல் திறனையும் மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஈஷா க்ரியா பயிற்சி உடலளவிலும், மனதளவிலும் அமைதியாகவும், சமநிலையாகவும் இருப்பதற்கும் துணை புரிகிறது. மேலும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் இப்பயிற்சிகள் தீர்வாக இருக்கும்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித்தனிக் குழுக்களாக இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் கைதிகள் பயன்பெற்று வருகின்றனர். அத்துடன் சிறை வார்டன்கள் மற்றும் பணியாளர்களும் இவ்வகுப்பில் பங்கேற்று பயன் பெறுகின்றனர்.

ஈஷா யோக மையமானது கடந்த 28 ஆண்டுகளாக தமிழக சிறைச்சாலைகளில் இலவச யோகா வகுப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.