பீதியை கிளப்பிய கொரோனா தொற்று

டாக்டர்.சாட்சி சுரேந்தர்: கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வரை, உலகில் மனிதர்கள் அவரவர் மொழிகளில், மிக அதிகமாக உச்சரித்த வார்த்தைகள் இரண்டு. ஒன்று, ‘அம்மா’; மற்றொன்று ‘இறைவா’ என்பதாகும்.

ஆனால், இவ்விரண்டையும் தாண்டி, தற்போதைய உலகளாவிய மந்திரச் சொல்லாகி நிற்கிறது - ‘கொரோனா’. நின்றால், நடந்தால், எழுந்தால், ஏன் உறங்கும்போதும் கூட கொரோனாதான்.

“உயிர் பயத்தை காட்டிட்டானுங்க பரமா” என பெரும்பாலோருக்கு கொரோனா நோயைவிட, நோய் குறித்த பீதி பல மடங்கு.

நமக்கு இந்த கொரோனா ஒரு புது அனுபவம். மக்கள் கொத்துக் கொத்தாய் மடிந்த பஞ்ச காலங்களைக் கண்டதில்லை; மஹா யுத்தங்களைப் பார்த்ததில்லை; ஏன் இதேபோன்ற கொள்ளை நோய்த்தொற்று கூட அரங்கேறி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று. ஆக நம் தலைமுறைக்கு, இந்த பெருந்தொற்றுக் காலம் ஆகப்பெரும் சோதனையாக வாய்த்துள்ளது. தனி மனிதன் தொடங்கி, வல்லரசு நாடுகள் வரை, அடிப்படை உலக இயங்கியலையே முடக்கிப்போட்டுள்ளது.

முகநூல், வாட்ஸ்ஆப், யூட்யூப் புண்ணியத்தில், கொரோனாவின் RNA (மரபணு) முதல் கிருமிக்கான பாட்டி வைத்தியம் வரை அனைத்தும், கையடக்க செல்போன் சொடுக்கில் வந்து அருவி போல கொட்டுகின்றன. போதாத குறைக்கு, கிரிக்கெட் ஸ்கோர் போர்ட் போல செய்தி சானல்களில் தினசரி எண்ணிக்கை அப்டேட் வேறு.

scoreborad

கொரோனா சூழலுக்கு நாமும் காரணமா ?!

நோய் எப்படி பரவும்? தடுப்பு நடவடிக்கை என்ன? மீறி தொற்று ஏற்பட்டால் என்னென்ன வைத்தியம் உண்டு? என்பது வரை நம்மில் பெரும்பாலோர் இவ்வளவு காலத்தில் பரிட்சயப்பட்டுதான் உள்ளோம். ஆக, புதிதாக சொல்லிவிட இங்கே இருப்பதுதான் என்ன?

பெரும்பாலோருக்கு கொரோனா நோயைவிட, நோய் குறித்த பீதி பல மடங்கு.

ஒன்றும் இல்லையே, என யோசித்து அமர்கையில்தான், சத்குரு அவர்கள் ஒருமுறை கூறக் கேட்டது நினைவிற்கு வந்தது. “உயர்ந்த நிலையில், உன்னதமாக வாழும் மனிதர்களுக்கு பொதுவாக ஒரு குணம் இருக்கும். தங்கள் வாழ்வில் ஏதேனும் துரதிர்ஷ்டவிதமான நிகழ்வுகள் ஏற்பட்டால், உடனே சூழ்நிலையையும், பிற மனிதர்களையும் குறைபட்டுக்கொள்ள மாட்டார்கள். முதலில், தங்களைத் தாங்களே மிக தீவிர சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வர். அந்த பாதகமான சூழல் அமைய தன்னுடைய பங்கு என்ன? குறை என்ன? என்பதை தீர விசாரிப்பர்,” என்கிறார். அந்த சுய மதிப்பீடுதான் சவாலான சூழ்நிலைக்கான சரியான தீர்வை நோக்கி ஒரு மனிதரை வெற்றிகரமாக நகர்த்தும்.

கொரோனா பெருந்தொற்று எனும் இந்த அசாதாரண காலத்தை, குறைந்தபட்ச இழப்புகளுடன் தாண்டி வரவேண்டும் என்பதுதான் இப்போதைய தலையாய குறி. இருப்பினும் மனித இனமாக, நம்முடைய எந்த செயல்கள், நம்மை இந்த இக்கட்டான சூழலுக்கு தள்ளி உள்ளது? இதில் நமது கூட்டு பங்கு என்ன? என்பதையும் நாம் சீர்தூக்கி பார்த்துதான் ஆகவேண்டும்.

இந்த நோக்கில், அறிவியல் துணையுடன் நான் மேற்கொண்ட தேடலை பகிர்கிறேன். 

world_closed

கொரோனா – நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கலாமா?

நிச்சயம் பார்க்க வேண்டும்! சவாலின் மூலம் தெரிந்தால்தான், அதை முறியடிப்பது எப்படி? என விளங்கும்.

கொரோனா என்பது ஒரே ஒரு வைரஸை மட்டும் குறிக்கும் பெயர் அல்ல. இது பல கோடி வருடங்களாக உலகில் இருக்கும் ஒருவகை வைரஸின் குடும்பப் பெயர் ஆகும்.

இதற்கு முன்னரே கொரோனா வைரஸ் குடும்பத்தில் SARS, MERS என இரண்டு வைரஸ்கள் முறையே 2003 மற்றும் 2012 ம் ஆண்டுகளில் பரவி, பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கியுள்ளன. இவர்களின் வழித்தோன்றல்தான், ‘கொரோனா... கொரோனா...’ என இன்று நம் மீடியாக்களால் தினமும் துதி பாடப்படும் SARS CoV2 எனும் வைரஸ் ஆகும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உலகளாவிய சுற்றுச்சூழல் சீர்கேடு - இன்றைய வைரஸ் தாக்குதலுக்கு ஒரு முக்கிய காரணமாக, உலக சுகாதார நிறுவனம் தனது 2020 ஆம் ஆண்டுக்கான உலக பூமி தின அறிக்கையில் அறிவிக்கிறது.

‘அப்ப இவன் (கொரோனா SARS CoV2) ஒத்தையாள் இல்லையா? ஒரு குடும்பமே இருக்காய்ங்களா?!’ என உங்களுக்குள் இருக்கும் வடிவேல் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. ஆம், உண்மைதான். இப்போதைய SARS CoV2 ஒன்றும் புதிய ரவுடி அல்ல. மேற்சொன்ன SARS, MERS எனும் ரிட்டயர்ட் ரௌடிகளின் வாரிசுதான்.

ஆக, பல காலங்களாக உலகில் வாழும் இந்த வைரஸ் குடும்பத்தாரில் ஒருவர் அப்பப்போ சீரியல் கில்லர் அவதாரம் எடுப்பது ஏன்?

இந்தக் கேள்விக்கான விடை, ‘Zoonotic Shift’ எனும் இயற்கை செயல்முறையை அறிந்துகொள்வதில் உள்ளது.

‘Zoonotic Shift’ – என்றால் என்ன?

பறவைக் காய்ச்சல் (Avian Flu), பன்றிக் காய்ச்சல் (Swine Flu), ஏபோலா, SARS, MERS தொடங்கி, இன்றைய கொரோனா பெருந்தொற்று வரை, இந்த வைரஸ்கள் காலங்காலமாக பறவை மற்றும் விலங்கினங்களுக்குள் மட்டுமே பரவி, வாழ்ந்து வந்தவை ஆகும். அவ்வகை பன்றிகள், வௌவால்களின் உடல்கள்தான் இத்தனை கோடி வருடங்களுக்கும் இந்த வைரஸ்களின் தாய் வீடாக இருந்தன எனலாம். பல சமயங்களில் சாதுவாகவும், சில நேரங்களில் மட்டும் நோய்த்தொற்று ஏற்படுத்தியும் அந்த உயிரினங்களுக்குள் மட்டுமே ஒன்றி வாழ்ந்து வந்துள்ளன.

“யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால், எல்லாம் சௌக்யமே” என நன்றாகவே சென்று கொண்டிருந்த திரைக்கதையில், கொரோனா திடீரென மனிதர்களைத் தாக்குகிற ட்விஸ்ட் எப்படி ஏற்படுகிறது?

உலகளாவிய சுற்றுச்சூழல் சீர்கேடு - இன்றைய வைரஸ் தாக்குதலுக்கு ஒரு முக்கிய காரணமாக, உலக சுகாதார நிறுவனம் தனது 2020 ஆம் ஆண்டுக்கான உலக பூமி தின அறிக்கையில் அறிவிக்கிறது.

இந்த உலகம் மனித இனத்துக்கு மட்டும்தான் சொந்தம் என்பது போல பூமிப்பந்தை துவம்சம் செய்யும் செயல்கள் கடந்த 100 வருடங்களில் பெருகிப் போய்விட்டது.

drought

கட்டற்ற மனித இனப்பெருக்கம், காடுகள் அழிப்பு, இரசாயன விவசாயம், இராட்சத இறைச்சித் தொழிற்சாலை கூடங்கள், இயற்கை வளங்கள் சுரண்டல், வன விலங்குகள் அழிவு எனும் காரணிகளால் பல்லுயிர் பெருக்கம் தடைபட்டு பட்சி, மிருகங்களின் வாழ்விடங்களும், எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துவிட்டன.

ஒருவேளை, நம்மை மீறி நம் வாழ்விடம் பறிபோய் விட்டால் நாம் என்ன செய்வோம்? பிழைப்பிற்காக வேறு இடம் நோக்கி நகர்வோம்தானே? அதுபோல, இந்த வைரஸ்களும் தங்கள் இயல்பான வசிப்பிடமான பட்சி, மிருகங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் மனித இனத்தை நோக்கித் தள்ளப்படுகின்றன. இதைத்தான் உயிரித்தாவல் (Zoonotic Shift) என்கிறோம்

எப்படியாயினும், இந்த போரில் 99% ராமன் (நம் உடல்) ராவணனை (கொரோனா) ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறார், இயற்கை இப்போதுவரை ராமன் பக்கமே. ஏனெனில், ராவணனுக்கான நியாயத்தை ராமன் நிச்சயம் வழங்குவார் எனும் நம்பிக்கை இயற்கைக்கு உண்டு.

புகுந்த வீட்டுக்கு வரும் புதுப்பெண் கொரோனா?!

இவ்வகை விலங்கின வைரஸைப் பொருத்தவரை மனித உடல் என்பது புகுந்த வீடு போல. புகுந்த வீட்டுக்கு ஏற்றவாறு புதுப்பெண் புது அவதாரம் எடுக்கிறாள், வரும் பெண்ணுக்கு ஏற்றவாறு புது வீடும் தன்னை கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறது.

உயிரித்தாவல் (புகுந்த வீடு) செயல்முறையின் விளைவு, கீழ்கண்ட இரு விதங்களில் நிகழலாம்.

  • பெரும்பாலும், சின்னச் சின்ன உரசல்களுடன் புதுப்பெண் (வைரஸ்), புகுந்த வீட்டோடு (மனித உடல்) ஐக்கியம் ஆகிறாள்.
  • ஆனால், SARS, MERS, EBOLA, SARS CoV2 (தற்போதைய கொரோனா வைரஸ்) போன்ற வைரஸ்கள் சில தொலைகாட்சி சீரியல் மருமகள்கள் போல புகுந்த வீட்டை கலவரம் செய்துவிடுவார்கள்.

மனித உடலமைப்பிற்கு ஏற்றவாறு தொடர்ச்சியாக தனது மரபணுவை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொண்டே இந்த வைரஸ் மனிதர்களுக்குள் பல்கிப் பெருகி பரவத் தொடங்குகின்றன. மனித உடலும் அதற்கேற்ப தனது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மறு சீராய்வு செய்துகொள்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலம் Vs கொரோனா வைரஸ்

மனித உடல் தன் நோய் எதிர்ப்பு சக்தியை சீராய்வு செய்துகொள்ளும்போது என்னவெல்லாம் நடக்கலாம்? இதற்கு 3 வாய்ப்புகள் உள்ளன.

  1. வைரஸ் கிருமியை முளையிலேயே கிள்ளி எறியும்படியான வீரியமான, துல்லியமான தாக்குதல். ஒரு வகையில் Surgical Strike எனலாம். வந்ததும் தெரியாது, அடிச்சி காலி பண்றதும் தெரியாது. இவ்வகையான, எதிர்வினை ஆற்றும் உடல்களில் கிருமி நுழைந்ததற்கான அறிகுறியே இருக்காது. இவர்களைத்தான் கொரோனா கூறும் நல்லுலகம், Asymptomatic Carriers, அதாவது “அறிகுறிகளற்ற வைரஸ் கடத்திகள்” என அழைக்கிறது. 85% மக்கள் இந்த வகையில் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் பெருந்தொற்றைக் கடக்கிறார்கள். அவர்களால் தொற்றை பிறருக்கு கடத்த முடியுமா, முடியாதா என்பதில் அறிவியல் உலகில் கருத்து வேறுபாடு உள்ளது. இந்த ஒரு சிக்கலுக்காகத்தான் செல்லுமிடமெல்லாம் சமூக இடைவெளியும், முகக்கவசமும் இன்றைய தேதியில் அவசியமாகிறது.
  2. நோய் எதிர்ப்பு மண்டலம் போதுமான அளவு தன் படையை பயன்படுத்தி, வைரஸுக்கு எதிராக ஒரு சிறிய அளவிலான போரை நடத்தி வென்றுவிடுகிறது. இதில் 10% மக்கள், காய்ச்சல், உடற்சோர்வு, இருமல், லேசான சுவாசத் திணறல் என 3 முதல் 10 நாட்கள் வரை சிகிச்சை எடுத்து மீள்கிறார்கள்.
  3. 5% மக்கள் மிகத் தீவிர மூச்சுத் திணறல், உள்ளுறுப்பு பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைக்கு செல்கிறார்கள். இவர்களிலும் 4% மருத்துவ உதவியுடன் வெற்றிகரமாக மீள்கிறார்கள். இந்த நிலைக்கு நேரடிக் காரணம் வைரஸ் அல்ல. நம் நோய் எதிர்ப்பு மண்டலம் தேவையான அளவு மட்டும் செயல் செய்யாமல், மதி இழந்த சூறாவளியாய் (Cytokine Storm), சொந்த உடலையே சிதைப்பதால் ஏற்படும் பாதிப்பு ஆகும்.

தொற்று காலத்தின் தொடக்கத்தில் சத்குரு அவர்கள் தத்துவ ரீதியாக, பெருந்தொற்று இறப்புகளைப் பற்றி குறிப்பிடும்போது, “வைரஸ்க்கு உங்களை கொல்லும் நோக்கம் இல்லை, நீங்கள்தான் இறக்கிறீர்கள்” என்றார். இது அறிவியல் ரீதியாகவும் உண்மை ஆகிறது.

பெருந்தொற்று எனும் பெரும்போர்!

“ராமாயணத்தை ராமன் பக்கத்தில் இருந்துதானே கேட்ருக்கீங்க... ராவணன் பக்கத்துல இருந்தும் பாருங்க, அப்பதான் உண்மை முழுசா புரியும்” என நெகடிவ் பாத்திரங்கள் திரையில் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

ஆம், இது கொரோனாவிற்கும், நம் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நடக்கும் யுத்தம்தான். எனினும், கொரோனாவிற்கு வாய் இருந்தால், வாய்ப்பு இருந்தால் என்ன சொல்லும்? “ஏ மனுசப்பய புள்ளைகளா! இந்த பூமியில உங்க வாழ்க்கை உங்களுக்கு எவ்ளோ முக்கியமோ, அதேமாதிரி, நாங்க வாழ்றது எங்களுக்கு முக்கியம். நீங்க காட்ட அழிச்சி, நிலத்த, நீர, காத்த மாசுபடுத்தி, நாங்க இயல்பா வாழுற பறவை, விலங்கெல்லாம் ஸ்வாஹா பண்ணீங்கனா, நாங்க எங்க போவோம்?” எனக் கேட்கலாம் அல்லவா?

அடிப்படையில், கொரோனா வைரஸ் இந்த உலகில் தன் சந்ததியின் இருப்பைத் தக்க வைக்க நடத்தும் போராட்டமாகக் கூட இந்தப் பெருந்தொற்றைப் பார்க்கலாம் அல்லவா?

எப்படியாயினும், இந்த போரில் 99% ராமன் (நம் உடல்) ராவணனை (கொரோனா) ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறார், இயற்கை இப்போதுவரை ராமன் பக்கமே. ஏனெனில், ராவணனுக்கான நியாயத்தை ராமன் நிச்சயம் வழங்குவார் எனும் நம்பிக்கை இயற்கைக்கு உண்டு.

ஐ.நா மன்றம் வெளியிட்ட “பெருந்தொற்றில் இருந்து ஆரோக்கியமாக மீளும் வாக்குறுதிகள்” எனும் அறிக்கையில், இயற்கையை/சுற்றுசூழலை பாதுகாப்பதே மனிதகுல ஆரோக்கியத்திற்கான ஒரே வழி என முன் மொழிந்திருப்பது மிகப்பெரும் நம்பிக்கை

ஆகவே, நமக்குள் இருக்கும் ஸ்ரீ ராமர்கள் அவசரகதியில் விழிப்படைய வேண்டும். பூமியின் உடலை வைரஸ் போல தின்று செரிக்காமல், சத்குரு போன்ற மாமனிதர்கள் சொல் கேட்டு, விழிப்புணர்வாக, நிலம், நீர், காற்றை மென்மையாகக் கையாள வேண்டும். உலகை அனைத்து உயிர்களுக்குமான இடமாகப் பேண வேண்டும். ஏனெனில், இன்னொரு பெருந்தொற்றை நம் சந்ததிகள் தாங்க மாட்டார்கள்.

Photo by Martin Sanchez on Unsplash

Photo by Edwin Hooper on Unsplash

IYO-Blog-Mid-Banner