காபி நல்லதா, கெட்டதா?
உலகில் பலர் காலை உணவு இல்லாமல்கூட இருப்பார்கள்; ஆனால், காபி-டீ இல்லாமல் இருக்கமாட்டார்கள்! இதில் காபி குடிப்பதை ஃபேஷனாகவும் தங்களின் சுதந்திரமாகவும் கூட பலர் கருதிக்கொள்கிறார்கள். சரி... இங்கே காபி-டீ குறித்த சில ஆராய்ச்சிகளோடு, சத்குருவின் பார்வை என்ன என்பதையும் படித்தறியுங்கள்!
 
 

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

 

பரந்துபட்ட உலகின் பல்வேறு உணவு கலாச்சாரங்களையும் ஒருசில புள்ளிகள் ஒன்று சேர்க்கின்றன. அதில் இந்த இரட்டையர்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

 

ஆறு மாதம் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளி இல்லாது, காஃபி அருந்துங்கள். அதன்பின், ஒரே ஒரு நாள் நிறுத்திப் பாருங்கள். உங்கள் உடலும், மனதும் நிலைகொள்ள முடியாமல் எதிர்வினை புரியும். இப்படி ஒரு தன்மை காஃபி க்கு உண்டு எனில், உடலுக்கு தீங்குதானே?

 

சுண்டியிழுக்கும் நறுமணம்; கிறங்கடிக்கும் சுவை; உள்ளிருக்கும் நாடி நரம்புகளில் மடைதிறந்து சட்டெனப் பாயும் உற்சாக வெள்ளம் என மனிதகுலத்தின் முக்கால்வாசி பேர் இவர்கள் கட்டுப்பாட்டில்தான்!

பலரின் காலைப்பொழுதுகளுக்கு சூரியனே இல்லையெனினும் பரவாயில்லை; ஆனால், இவர்கள் இருந்தாக வேண்டும்! காபி, டீ என தமிழில்?! அன்போடு அழைக்கப்படும் இவர்கள் குறித்த சங்கதிகளைப் பகிர்ந்துகொள்வோம்.

 

ஃப்ளாஷ் பேக்

 

1800கள் வரை இந்த தேசத்தில் காபி, டீ இல்லை. பெரும்பான்மை இல்லங்களில் கொதிக்கும் நீரில் சுக்கு (காய்ந்த இஞ்சி) தட்டி, சுவைக்கு கருப்பட்டி சேர்த்து பருகும் பழக்கம்தான் நிலவி வந்தது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான், ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியின் வியாபார, விளம்பர யுக்திகள் மூலம் ஃகாபி, டீயை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்றனர்.

கம்பெனிக்காரர்கள் கிராமம், கிராமமாக முரசடித்து மக்களை கூட்டுவார்களாம். ஊர்த் தலைவர்கள் முன்னிலையில் அங்கு கூடியிருக்கும் தாத்தா, பாட்டி முதல் நண்டு சிண்டு வரை அனைவருக்கும் காபி யும், டீயும் இலவசமாக வழங்கப்படுமாம். அக்காலத்தில் இரயில் நிலையங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் இணைக்கும் கண்ணிகளாக செயல்பட்டன. இதனைச் சரியாகப் பயன்படுத்திய ஆங்கில அரசு இரயில் பயணிகளுக்கு ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் காஃபி, டீயை இலவசமாக வழங்கியது. இதன்மூலம், தேசம் முழுதும் மக்களை இதன் சுவைக்கு அடிமையாக்கி தங்கள் வியாபாரத்தை விஸ்தரித்தனர். பின்னர் நடந்த 200 ஆண்டுகால அடிமை ராஜ்ஜியத்தின் ஆரம்பப் புள்ளிகளில் டீ உற்பத்திக்கும், வணிகத்திற்கும் ஓர் முக்கிய இடம் உண்டு!

இந்தப் பின்னணியை சிறிது கூர்ந்து நோக்கினால் ஒன்று புலப்படுகிறது. அரசியலில் அதிகார சுதந்திரம் அடைந்துவிட்டாலும், கொள்கை அளவில் மேற்கத்திய கல்விமுறை, மேற்கத்திய உடை பாணி, மேற்கத்திய உணவு முறைகள் என பெருமளவில் அடிமைத்தனம் நம்மை இன்னும் ஆக்கிரமித்து கொண்டுதான் உள்ளது. இதற்கு நீங்கள் காலையில் சுவைத்து உறிஞ்சும் ஒரு கப் காஃபி யே சாட்சி!

இது ஒருபுறம் இருந்தாலும், காஃபிகுறித்த உடல் ஆரோக்கிய ரீதியான அம்சங்களை மேற்கத்திய மற்றும் யோக அறிவியல் ரீதியில் காண்பது அவசியம்.

 

காஃபி குறித்த அறிவியல் பார்வை

 

காபி மற்றும் டீயில் உள்ள ‘கஃபைன்’ எனும் வேதிப்பொருள்தான் விவாதத்திற்கும், ஆய்வுக்கும் உட்படுத்தப்படும் மூலக்கூறு. காஃபியைவிட டீயில் ‘கஃபைன்’ அளவு குறைவு.

கஃபைன் மைக்ரைன் ஒற்றைத் தலைவலிக்கும், ஆஸ்துமா நோயாளருக்கு தரப்படும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. மூளை நரம்புகளைத் தூண்டும் செயலில் ஈடுபட்டு விழிப்பு நிலையை ஏற்படுத்துகிறது. கஃபைன் இதய படபடப்பு, தூக்கமின்மை, மனப்பதட்டத்தை அதிகரிக்கும்.

வயோதிக மூளை மந்தநோய் (அல்சைமர்ஸ்) மற்றும் சில புற்றுநோய்கள் வருவதற்கான ரிஸ்கை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

கஃபைன் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள், நோய்கள் மற்றும் நோய்களின் தன்மை குறித்த அளவிலேயே மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால், தினசரி காஃபி அருந்துவதால் நேரடியாக ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நல்லது தீயதை அறியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவே இல்லை.

இதன் காரணத்தை அமெரிக்க ஹார்வேர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் திரு. ஹென்ஸ்ருட், நகைச்சுவையாக விளக்குகிறார். “காஃபியின் நேரடி விளைவை ஆராய்வது சுவாரசியமானதுதான். ஆனாலும், இது நடக்கவில்லை. ஏனெனில், இதற்கு பல நூறு கோடி ரூபாய் செலவாகும். செலவழிக்கக்கூடிய மருந்து கம்பெனிகள் காஃபியை வைத்து வியாபாரம் செய்யப் போவதில்லை. அதேபோல், காஃபி தயாரிப்பு நிறுவனங்களுக்கோ ஆய்வு நடத்தவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், காஃபி பிரியர்கள் எப்படியும் காஃபியை வாங்கியே தீருவார்கள்.” என்கிறார்.

ஆக, காஃபி குறித்த மேற்கத்திய அறிவியல் பார்வையும், ஆய்வுகளும் கூட இன்னும் தீர்க்கமாய் இல்லை என்பதை அறியலாம்.

 

சத்குருவின் கோணம்

 

“எந்த ஒரு விஷயத்தையும் சமூக மதிப்பீடுகளின் வழி அணுகாமல், உள்நிலை மற்றும் உயிர்சார்ந்த நோக்கத்தில் மட்டுமே வெளிப்படுத்தும் நம் குருநாதர் காபி குறித்து கூறுவதென்ன?

“ஈஷாவின் முதல்நிலை யோக வகுப்புகளில் காபி, பிராண சக்திக்கு எதிர்மறையாய் (Negative Pranic) செயல்படுவது குறித்த செய்திகள் பகிரப்படும்போது, அதில் கலந்துகொண்ட அரசாங்க உயரதிகாரி ஒருவர், “காபி எனக்கு மிகப்பிடித்த சமாச்சாரம். காலையில் ஒரு கப் சாப்பிடாமல் எனக்கு பொழுதே ஓடாது. எனக்கு காஃபி என்றால் உயிர். என் காபி, என் உரிமை. அது என் சுதந்திரம்” என புரட்சிகரமாக முழங்கி இருக்கிறார்.

அதற்கு நம் ஈஷா ஆசிரியர், அவர் சொன்ன விஷயத்தையே வேறு பாணியில் கேள்வி ஆக்குகிறார்.

“காஃபியிலதான் உங்க உயிரே இருக்குன்னு சொல்றீங்க. உங்க வாழ்க்கைல ஒரு நாள் கூட காஃபி இல்லாம இருக்க முடியாதுன்னும் சொல்றீங்க, அப்புறம் எப்படி இது சுதந்திரம் ஆகும்? ஒரு கப் காஃபியில அல்லவா சிக்கி போயிட்டீங்க?! இதில் சுதந்திரம் எங்க இருக்கு? இது வடிகட்டுன அடிமைத்தனம்தானே?” என கேட்ட பிறகுதான் அவரது சிந்தனை வேறுவிதமாய் செயல்பட்டிருக்கிறது.

ஈஷா வகுப்புகளில் எந்த ஒரு அம்சமுமே திணிக்கப்படுவதில்லை. யோகப் பயிற்சியை கடைப்பிடித்துப் பாருங்கள்; விழிப்புணர்வு நிலை உயரும். அந்நிலையில் உணர்ந்து பாருங்கள், காபியோ, டீயோ உங்கள் உடலுக்கும் உயிருக்கும் ஏற்றதா என்று. பின்னர் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

ஒரு பரிசோதனை கூட செய்து பார்க்கலாம். இரு மாதங்கள் நீங்கள் காஃபியை சுத்தமாக நிறுத்திவிடுங்கள். பின் ஒருநாள் ஸ்ட்ராங்கான ஒரு கப் காஃபியை அருந்துங்கள். உங்கள் கை கால்களில் வெலவெலப்பும், நடுக்கமும் ஏற்படுவதை உணர்வீர்கள். அதேபோல், ஆறு மாதம் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளி இல்லாது, காஃபி அருந்துங்கள். அதன்பின், ஒரே ஒரு நாள் நிறுத்திப் பாருங்கள். உங்கள் உடலும், மனதும் நிலைகொள்ள முடியாமல் எதிர்வினை புரியும். இப்படி ஒரு தன்மை காஃபி க்கு உண்டு எனில், உடலுக்கு தீங்குதானே?

எனினும், நான் இங்கு இருப்பது, நீங்கள் எதை உண்ண வேண்டும், எதை அருந்த வேண்டும் என சொல்வதற்காக அல்ல. இந்தப் பொருள் உங்களுக்குள் என்ன செய்கிறது என்பதை மட்டுமே சொல்கிறேன். உங்களுக்கு என்ன நிகழ வேண்டும் என முடிவு செய்வது நீங்கள்தான்; முடிவை அறியாமையில் எடுக்காதீர்கள். நான் சொல்வது யாதெனில், மரணத்திற்குள் நீங்கள் பிரவேசித்தாலும், அதனை விழிப்புணர்வுடன் நடத்துங்கள் என்பதே.

 

என்ன செய்யலாம்?

 

இதே கேள்வி ஈஷா வகுப்பு செய்த பின்னர் எனக்கும் தோன்றியது. பரிசோதனை செய்ய சித்தமானேன், செய்து முடித்தேன். காஃபி யை நான் விடவில்லை! காஃபி என்னை விட்டுப் பிரிந்து ஏழு வருடங்களாகின்றது.

ஆக, காஃபி குடித்துக் கொண்டே சிந்திப்பதைவிட, பருகுவதற்குமுன் சிந்தித்துப் பார்ப்பதில் தவறேதுமில்லை!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1