BSF வீரர்களின் உள்நன்மைக்காக ஈஷா யோகா!
எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் கோவை ஈஷா மையத்திற்கு வருகைதந்து கற்றுக்கொண்ட யோகப் பயிற்சிகள் பற்றியும், BSF வீரர்கள் யோகா கற்றுக்கொள்வது பற்றிய சத்குருவின் பார்வை என்ன என்பதையும் படித்தறியலாம் இங்கே!
 
 

காவல் புரிவதென்பது நம் கலாச்சாரத்தில் புனிதமான பணியாகவே எப்போதும் பார்க்கப்பட்டு வந்துள்ளது. நம் கிராமங்களில், ஊரின் எல்லையில் நிற்கும் காவல் தெய்வங்களே இதற்கு அத்தாட்சி! ஒரு நாட்டின் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபடும் நம் இளைஞர்கள் இரவு - பகல் பாராமல், உடல் மற்றும் மன அளவிலான பலவித அசௌகரியங்களுக்கு இடையில் தங்கள் கடமையாற்றுவதைப் பார்க்கிறோம்.

நம் தேச பாதுகாப்பிலுள்ள சவால்களினால் எல்லைப் பாதுகாப்பு படையில் உள்ளவர்களுக்கு இடையறாத பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் மோசமான சீதோஷன நிலைகளை எதிர்கொள்வதென்பது வாடிக்கையாகவே உள்ளன. இதன் காரணமாக நெடுங்காலமாக இவர்கள் அமைதியின்றியும் குடும்பத்தினரின் துணையின்றியும் உடல் மற்றும் மனநிலைகளில் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டு  சத்குரு எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் கலந்துரையபோது, மிகவும் தொன்மையான யோக விஞ்ஞானத்தை நம் தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு அளிப்பதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டார். BSF வீரர்களுக்கு யோகப் பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்கள் தங்களை உள்நிலையில் சிறந்த முறையில் நிர்வகிக்கவும், நாட்டின் எல்லையை திறம்பட பாதுகாக்கவும் இந்த யோகா பயிற்சிகள் உறுதுணையாய் இருக்கும் என சத்குரு தெரிவித்தார்.

இதனையடுத்து கடந்த 2017 டிசம்பரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 99 பேர் கொண்ட குழுவினர் ஈஷா யோகா பயிற்சிகளைப் பயின்று சென்றனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதத்தில் ஈஷா யோக மையத்தில் எல்லைப் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் 19 பேர் இன்னர் இஞ்சினியரிங் ரிட்ரீட் எனும் யோகா வகுப்பில் கலந்துகொண்டனர். 6 நாட்கள் நிகழ்ச்சியான இந்த வகுப்பு மார்ச் 17ஆம் தேதி நிறைவுற்றது!

இந்நிகழ்ச்சியில் BSF அதிகாரிகளுக்கு  உப யோகா, சூரிய  க்ரியா, ஷாம்பவி மஹாமுத்ரா போன்ற சக்திவாய்ந்த மற்றும் பாரம்பரிய யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன.

கூடுதல் டைரக்டர் ஜெனரல், இன்ஸ்பெக்டெர் ஜெனரல்கள், துணை இன்ஸ்பெக்டெர் ஜெனரல்கள் மற்றும் கமேண்டன்ட்ஸ் ஆகிய பதவிகளிலுள்ள அதிகாரிகள் அடங்கிய இந்த குழுவில் சிலர் தங்கள் துணைவியர்களுடனும் இந்த வகுப்பில் கலந்துகொண்டனர். இவர்கள் தற்போது பல்வேறு தளங்களில் தலைமையிடங்களிலும் மற்றும் படைத் தலைமை இடத்திலும் பணியில் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது அதிகாரிகள் ஈஷா யோகா மையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஈஷா வித்யா பள்ளிக்கு வருகைபுரிந்து, அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். மேலும், சிறப்புமிக்க ஆதியோகியின் 112 அடி உயர திருமுகத்தின் தரிசனத்தை பெற்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் 14 நாட்கள் நிகழ்ந்த யோகா நிகழ்ச்சியில், ஈஷா யோக மையத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள்  மற்றும் வீரர்கள் சக்திவாய்ந்த மற்றும் பாரம்பரிய யோகப் பயிற்சிகளை கற்றுக்கொண்டனர்.  இவற்றை கற்றுக்கொண்ட வீரர்களுக்கு தங்களுடன் பணியாற்றும் சக வீரர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகளின் அனுமதிக்குப் பிறகு  இவர்கள் அனைத்து எல்லைப் பாதுகாப்பு முகாம்களிலும் இப்பயிற்சிகளை கற்றுக்கொடுக்க உள்ளனர். இதன்மூலம் படிப்படியாக யோகாவின் பலன்களை தேசமுழுக்க உள்ள ஒவ்வொரு பாதுகாப்பு படைவீரரும் பெற்று சிறப்புறுவர்!

உள்நிலை நன்மைக்கான கருவியின் துணையுடன், நம் எல்லைப் பாதுகாப்பு படையினர் அமைதியும் ஒத்திசைவும் கொண்டு, தங்கள் உன்னத கடமைகளை ஆற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1