நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 4

பேருந்தில் இடம்பிடிக்க எத்தனைப் போராட்டம்... பின்வரும் வாகனத்திற்கு இடம்விட்டு விலகுவதற்கு எத்தனைத் தயக்கம், 'இந்த இடம் இவருக்குப் பாத்தியப்பட்டது' என நிலமெங்கும் விளம்பரப் பலகைகள். உலகம் இப்படியிருக்க, உண்மையில் இந்த பூமி யாருக்குச் சொந்தம் என நம்மாழ்வார் கூறுவதைக் கேட்கும்போது, கொஞ்சம் உறைக்கவே செய்கிறது!

நம்மாழ்வார்:

இந்த மானுடத்தின் அத்தனை பேருக்குமாக ஒரு தாய் உண்டு. அவளே... ‘பூமித்தாய்’. சூரியக் குடும்பத்தில் பூமித் தாய்க்கு மட்டுமே கோடானுகோடி மக்கள் உண்டு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமி என்பது ஒரே கண்டம். 18 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் நில நடுக்கத்தால், பல பகுதிகள் நீருக்குள் மூழ்கியது. பல பகுதிகள் தரைக்கு மேல் உயர்ந்தன. இன்று உலகிலேயே உயர்ந்த சிகரமாக இருக்கிற எவரெஸ்ட், அந்தப் பெருநடுக்கத்துக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்திருக்க வேண்டும் என்று கணிக்கிறார்கள். தாய் இறந்து போவதும், மகள் வளர்ந்து தாய்மை அடைவதும் காலத்தின் சுழற்சி. ஆனால், பூமித்தாய் நலிந்து, சிதைந்து போனால் இங்கே யாருமே வாழ முடியாது. பூமித்தாய் லேசாக நடுங்கும்போதே, எவ்வளவு பேரழிவுகளைச் சந்திக்கிறது உலகம்.

மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட தடயங்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர் பயிர்ச் சாகுபடி நுட்பம் அறிந்து இருந்ததைச் சொல்கிறது. ஆனால், இந்த இருபதாம் நூற்றாண்டில், விஞ்ஞானம் வீரியமாய் வளர்ந்த நிலையில், விளைநிலங்கள் கொலைக்களங்களாக மாறி வருவது ஏன்? வளர்ச்சி என்ற பெயரிலே ‘நிலமகள்’ சின்னாபின்னப்படுத்தப்படுகிறாள்.

மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட தடயங்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர் பயிர்ச் சாகுபடி நுட்பம் அறிந்து இருந்ததைச் சொல்கிறது.

‘கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவையெனும் அறிவும் இலார்’ என பாரதியார் பாடினார். நமது வறுமைக்கான வேரை அறியாமல் அதிலிருந்து விடுபட முடியாது. அதற்கு நமது வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கொஞ்சம் புரிவோம்... தெளிவோம்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்கள் ஆங்காங்கே இருந்த சிற்றரசர்களை நண்பர்களாக்கிக் கொண்டார்கள். ‘வரி’ என்ற பெயரில் விளைச்சலை வாரிக்கொண்டு போனார்கள். வன விலங்குகளைக் கொன்று குவித்தார்கள். பெருமளவு காடுகளை அழித்து தேயிலைத் தோட்டம், காபித் தோட்டம், ரப்பர் தோட்டம் போட்டார்கள். வணிகத்தைப் பெருக்க தண்டவாளம் பதித்தார்கள்.

நாம் சுதந்திர இந்தியாவிலும் அன்னியர்களைப் போலவே நடந்து கொண்டோம். பூமித்தாய் போர்த்தியிருந்த பச்சைப் போர்வைகளை நம் சுயநலத்துக்காகச் சுருட்டினோம். வனத்தையும், நிலத்தையும், நீரையும் மதிக்காமல் தவறாய் பயன்படுத்தினோம்.

குறைந்தபட்சம் 166 பயிரினங்கள் நமது நாட்டில் உண்டு. நெற்பயிரில் மட்டும் 50,000 இனங்கள் உண்டு. சோளத்தில் 5000 ரகம் உண்டு. மிளகுப் பயிரில் 500 வகையும் மாமரத்தில் 1000 வகையும் உண்டு. ஒவ்வொரு விலங்கினத்திலும் பலவகை உண்டு. வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கால்நடையில் 30 வகை, கோழியில் 18 வகை, இப்படியாக சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே இவை பரிணமித்துள்ளன. இந்த உயிரினங்களில் மனிதன் கோடியில் ஒரு துளி. நாம் மட்டுமல்ல... இத்தனை உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு.

இதைப் புரிந்துகொண்டு சுயநலமற்ற வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம். மண்ணின் துயர் போக்கலாம். அந்த அன்பின் தாய்க்கு நல் மக்களாய் மகிழ்ந்து வாழலாம்!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.

 

Photo Courtesy: @Doug88888, Al_HikesAZ, Ben Sutherland, blmiers2, Diganta Talukdar, dotcompals, Loimere, mondays child, Stewart Ho, tiltti, Valerii9116, Pensive glance @ flickr