நிறைவு நாளான 7ஆம் நாள் யக்ஷா திருவிழா, உங்கள் கண் முன்னே!

'யக்ஷா' திருவிழாவின் நிறைவு நாளான இன்றைய ஏழாம் நாள் கொண்டாட்டத்தில், விதூஷி பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் கர்நாடக வாய்ப்பாட்டு இசைநிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் சில அற்புத ராகங்களை ஆலாபனை செய்து ஒரு உன்னத இசைப்பொழுதை வழங்கினார். அந்த அற்புத இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாகத் திகழும் பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பல தெய்வீக இசைத் தொகுப்புகளை எழுதி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜயராஜ், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பல வெற்றித் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். அவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடர் ஆவார்.

நாளை (பிப்ரவரி, 17) மாலை 6 மணி முதல் இரவு முழுவதற்கும் இசை, நடனம், சத்குருவுடன் அருளுரை, சக்திவாய்ந்த தியானங்கள் என மஹாசிவராத்திரிக் கொண்டாட்டங்கள் ஈஷா யோகா மையத்தில் களைகட்டுகின்றன. இந்நிகழ்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். நிகழ்ச்சிகள் பொதிகைத் தொலைக்காட்சியிலும், http://mahashivarathri.org/ta/live/ என்ற இணைய முகவரியில் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.