நவராத்திரி திருவிழாவின் மூன்றாம் நாளான இன்றைய கொண்டாட்டத்தில் சித்ரா நாயர் மற்றும் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நவராத்திரி திருவிழாவின் மூன்றாம் நாளான இன்றைய கொண்டாட்டத்தில் சித்ரா நாயர் மற்றும் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.30 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை ஆயிரக் கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
பரதநாட்டிய பயிற்சி வழங்குவதில் தனித்துவமிக்க நிறுவனமாக உள்ள சென்னை கலாஷேத்ராவில் பட்டம்பெற்றுள்ள திருமதி.சித்ரா நாயர் அவர்கள், 2010ல் ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் நடன ஆசிரியராக தனது கலைப்பணியைத் துவங்கினார்.
தற்போது கோவை பாரதிய வித்யா பவனின் பைன் ஆர்ட்ஸ் துறையிலும், இந்தியன் பப்ளிக் ஸ்கூலிலும் பணிபுரிந்து வரும் சித்ரா நாயர் அவர்கள், இன்றைய நிகழ்ச்சியில் தனது மாணவர்களுடன் இணைந்து நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினார்.
ஆதிசிவனைப் போற்றும் நடனங்களை வழங்கிய இவர்கள், முதல் பாடலாக மாணிக்க வாசகர் இயற்றியுள்ள ‘நமச்சிவாய வாழ்க’ எனும் பாடலுக்கு தங்கள் நாட்டியத்தை வழங்கி ‘அலாரிப்பூ’ சமர்ப்பணம் செய்தனர். அடுத்த பாடல், சிவன் குடிகொண்டுள்ள வேதபுரி ஆலயத்தின் தெய்வீக ஊர்வலத்தை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது. மூன்றாவதாக “சிவாய” எனும் வார்த்தையை விளக்குவதாய் அமைந்த சிவபஞ்சாட்சர ஸ்தோத்திரமாக அமைந்தது. நான்காவதாக பிரபஞ்ச நடனமாடும் சிவனைக் குறிப்பிடும் விதமாக “ஆனந்த நடமிடும் பாதம்” எனும் பாடல் அரங்கேறியது. இறுதியில் தில்லானா ஆடிய நாட்டியக்குழுவினர் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றனர்.
அந்த அற்புத நாட்டிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிப்பாள். மூன்றாம் நாளான இன்று, குங்கும அலங்காரத்தில் காட்சியளித்த லிங்கபைரவி தேவி, பக்தர்களுக்கு அருளை வாரிவழங்கினாள்.


நாளை...

நாளைய நான்காம் நாள் கொண்டாட்டத்தில், திரு. மாதவப்பெடி மூர்த்தி மற்றும் குழுவினரின் குச்சிப்புடி நடனம் நிகழவிருக்கிறது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.