கடவுள் நம்பிக்கை எல்லாம் அறவே இல்லை. கோவில்களுக்கு சென்றதே இல்லை. ஆனால், ஈஷா வகுப்பு முடித்து, லிங்கபைரவியினால் ஆட்கொள்ளப்பட்டு, அவளின் அருளில் நனைந்துகொண்டிருக்கும் ஒருவரான டாக்டர்.பிரதீபா சுரேந்திரன் அவர்கள் தன் அனுபவங்களை மெய்சிலிர்க்க இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

டாக்டர். பிரதீபா சுரேந்திரன்:

நான் கடந்த 4 வருடங்களாக ஈஷாவில் முழு நேர தன்னார்வத்தொண்டராக இருக்கிறேன். சென்னை ஈஷா ஆரோக்யாவில் அலோபதி மருத்துவராக செயல்படுகிறேன். சிறு வயது முதலே கடவுள், கோவில்கள் இவற்றில் பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை. தேர்வு சமயங்களில் வேண்டிக்கொள்வதைத் தவிர கோவில்களுக்கு காற்று வாங்க, கடைகளை வேடிக்கை பார்க்க மட்டுமே செல்வேன்.

என் வெளிசூழ்நிலைகளை சரி செய்ய லிங்கபைரவியிடம் நான் வைத்த வேண்டுதல்கள் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பித்தன.

கல்லூரி சமயங்களில் தஞ்சை பெரிய கோவில் வெளிப்பிரகாரத்தில் மட்டும் உட்கார்ந்துவிட்டு உள்ளேயே செல்லாமல் வந்த நாட்கள் பல. "என்னதான் சொல்கிறார்கள் இந்த யோகா க்ளாஸில்" என்ற ஆர்வத்துடன் ஷாம்பவி மகாமுத்ரா பயிற்சி முடித்து, "அட நல்லா இருக்கே" என்று வாலண்டியரிங் செய்து, அடுத்தடுத்த மேல்நிலை வகுப்புகள் செய்தபோது, சத்குரு என்னை முழுமையாக ஆட்கொண்டிருந்தார். முழுமையான நன்றியுணர்வை முதன்முதலாக உணர்ந்த அந்தக் கணங்கள் ஆனந்தமயமானவை.

என்னுள் பக்தி என்னும் மேலான உணர்வை உணரவைத்த என் குருவினால் உயிர் கொடுக்கப்பெற்ற பெண் தெய்வம் என்றுதான் லிங்கபைரவி எனக்கு அறிமுகம். என் குருவிடம் வேண்டுதலாக எதையுமே கேட்க தோன்றியதே இல்லை. ஆனால், என் வெளிசூழ்நிலைகளை சரி செய்ய லிங்கபைரவியிடம் நான் வைத்த வேண்டுதல்கள் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பித்தன. என் பெற்றோர்க்கும் வீட்டில் வைத்துக் கொள்ள லிங்கபைரவி குடி வாங்கிக் கொடுத்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நவராத்திரிக்கு 1 வாரத்திற்கு முன்பு ஒரு நாள் இரவு தூக்கம் கண்களைத் தழுவிய நேரத்தில் ஈஷா ஆரோக்யாவில் நமது கலாச்சார முறைப்படி கொலு வைக்க வேண்டும், லிங்கபைரவிக்கு பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று தோன்றியது. விழித்துக்கொண்ட நான் என்னடா இது, கொலுவா, நமக்கு என்ன செய்யணும்னே தெரியாதே, ஸ்கூல் படிக்கறப்போ ஒரு பிரெண்டு வீட்டுக்கு போனப்ப பாத்ருக்கோம், சுண்டல் கொடுப்பாங்கன்னு கேள்விபட்டிருக்கோம். இது எதுக்காக பண்றாங்கன்னு கூட தெரியாதே என்று மனம் ஒருபுறம் நினைக்க, உள்ளே கொலு வைக்க வேண்டும் என்ற எண்ணம் நிமிடத்துக்கு நிமிடம் தீவிரமாகிக் கொண்டே வந்தது.

கண்களை மூடவே முடியவில்லை. அன்று எனக்கு சிவராத்திரிதான். அடுத்த நாள் கொலு எதற்காக வைக்கிறோம், என்னென்ன செய்ய வேண்டும், தினம் என்ன கலர் பூக்கள், எதற்காக என்றெல்லாம் வருடா வருடம் செய்து வரும் சிலரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

லிங்கபைரவியே இந்த எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தி தனக்கு தேவையானதை செய்து கொண்டது போல் தோன்றியது.

அன்றே ஒரே ஒரு கலச பொம்மை மட்டும் வாங்கினேன். இதற்காக எங்களுக்கு தனி பட்ஜெட் கிடையாது. அதனால் அடிக்கடி நமது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிலரிடமும், ஒரு சில தன்னார்வத் தொண்டர்களிடமும் அவர்களிடம் பழைய கொலு பொம்மைகள் இருந்தால் தருமாறு கேட்டிருந்தேன்.

இரண்டே நாட்களில் நான் வெளியில் இருந்தபோது நமது மருத்துவமனை ஊழியரிடமிருந்து போன் வந்தது - "ஒரு அக்கா 5 பெட்டிகளில் புது பொம்மைகள் கொண்டு வந்திருக்கிறார்கள்" என்று சொன்னார் அவர். அந்த அக்காவிடம் நான் கேட்கவே இல்லை, அவருக்கு யாரோ ஒருவர் இந்த விஷயத்தைக் கூற அதைக் கேள்விப்பட்டு லக்ஷ்மி, சரஸ்வதி, தசாவதாரம் செட் என்ற பலவித புது கொலு பொம்மைகள் வாங்கி வந்திருக்கிறார். இன்னொரு அம்மா 18 சித்தர்கள் செட் வாங்கிக் கொடுத்தார்.

அடுத்து, படி எப்படி செய்வது என்று யோசித்தபோது ஒரு அண்ணா எங்களிடம் இருந்த ஸ்டாண்ட்-ஐ வைத்தே அழகாக அமைத்துவிட்டார். படியும் ரெடி. இன்னொரு அக்கா வந்து எந்தெந்த படியில் எதுஎது இருக்க வேண்டும் என்று அழகாக அமைத்துக் கொடுத்தார்கள். அனைத்தும் மளமளவென என் முயற்சி இல்லாமலேயே நடந்தன.

நவராத்திரி முதல் நாளன்று 18 சித்தர்களும் சித்தர்கள் பாடல், தேவாரம், திருவாசகம் ஒலிக்க படிகளில் அமர்ந்தனர். கலாச்சார முறைப்படி அனைத்து பொம்மைகளையும் வைத்து நடுநாயகமாக லிங்கபைரவியின் போட்டோவையும் வைத்தவுடன் அந்த இடமே ஷக்திமிக்க கோவிலாக காட்சி தந்தது.

தினம் மாலை ஒவ்வொரு வாலண்டியராக வீட்டிலேயே சுண்டல் செய்து வந்து மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு கொடுத்தனர். காலை, மாலை இரு வேளைகளும் ஆரத்தி நடந்தது. வரும் குழந்தைகள், பெரியவர்கள் உட்கார்ந்து பாட, மிக அழகாக இருந்தது. இறுதி நாளன்று சுமார் 50க்கும் மேற்பட்ட தன்னார்வத்தொண்டர்கள் கூட, லிங்கபைரவி ஸ்துதி, ஆரத்தி செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து முடித்தோம்.

லிங்கபைரவியே இந்த எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தி தனக்கு தேவையானதை செய்து கொண்டது போல் தோன்றியது. பலருக்கு அருள்பாலிப்பதற்காக, என்னுள் இப்படி ஒரு எண்ணத்தை விதைத்து, அவள் செயலுக்கு என்னை கருவியாக்கிய தாய்க்கு நன்றி என்ற சொல் பத்தாது. இது முடிந்த 4 மாதத்திலேயே 5 பெட்டிகளில் புது பொம்மைகள் கொடுத்த அக்கா வீட்டிற்கு பைரவி, யந்த்ரா வடிவில் குடியேறினாள்!

எனக்கு வெகு நாட்களாக லிங்கபைரவி குடி வாங்கி மருத்துவமனையில் வைக்க வேண்டும் என்று விருப்பம். இதற்கென்று தனி பட்ஜெட் இல்லாத காரணத்தினால் வாங்க இயலாமல் இருந்தது. 2014 புது வருடப்பிறப்புக்கு 5 நாட்கள் முன்பு என் விருப்பத்தை ஒரு அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் நீங்கள் ஈஷா ஒருங்கிணைப்பாளரிடம் சொல்லி வையுங்கள், யாராவது கொடுத்தால் சொல்வார்கள் என்றார். நான் எதுவும் செய்யவில்லை. ஆனால் என்னுள் இருந்த விருப்பம் மட்டும் அதிகமாகிக்கொண்டே வந்தது.

ஜனவரி 1, 2014, மருத்துவமனையின் 3வது ஆண்டு துவக்க விழாவுக்காக தயாராகிக்கொண்டிருந்தோம். பரபரப்பாக இருந்த சமயத்தில் ஒரு அக்கா வந்தார், கையில் லிங்கபைரவி குடி! "நான் அமெரிக்கா செல்கிறேன். என்னிடம் அங்கு ஒரு குடி இருக்கிறது. இங்கு இருந்த வீட்டில் இதனை வைத்திருந்தேன். இதை நீங்கள் இங்கு வைத்துக்கொள்கிறீர்களா? வருபவர்களுக்கு பைரவி அருள் கிடைக்குமே?" என்றார்... என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர்... அவருக்கு என் உடலின் ஒவ்வொரு அணுவும் நன்றி சொல்லியது. அவர் சென்றுவிட்டார். நான் இருந்த மனநிலையில் அவர் பெயர்கூட கேட்க மறந்து விட்டிருந்தேன்! அவர் பெயர் லிங்கபைரவியோ என்று தோன்றியது! 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்களை வாழ்த்தி வந்துவிட்டாள் பைரவி...
பைரவி குடியின் வடிவில் நிரந்தரமாக இங்கு இருக்கிறாள். ஊழியர்கள் அனைவரும் பக்தியுடன் தினமும் அவளை வணங்குவது, நெய்வேத்யம் செய்வது, விளக்கேற்றுவதை பார்த்து ஆனந்தமாக இருக்கிறது. எங்கெங்கோ பார்த்து சரியாகாமல், இங்கு நமது சித்த மருத்துவத்தில் குணமான நோயாளிகள், அவர்களே ஏதோ ஒன்று வாங்கி வந்து பைரவிக்கு படைத்து நன்றி கூறிச்செல்கிறார்கள்.

பக்தியுடனும் தீவிர விருப்பத்துடனும் கேட்கும் எதையுமே தேவி கொடுப்பாள்..

ஜெய் பைரவி தேவி!!

பைரவி பக்தையான மருத்துவர்!, Bhairavi bakthaiyaana maruthuvar!