மனமிருந்தால்...

உலகையே சின்னாபின்னப் படுத்தி கலைத்துப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ் நமது தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள மக்களிடமிருந்து மிகச் சிறந்ததையே வெளிக்கொண்டு வந்திருக்கிறது. வேறு வழி இல்லாமல் நாடு முழுவதும் தங்கள் விளைபொருட்களை பெரும்பாலான விவசாயிகள் விரக்தியுடன் தெருவில் கொண்டு வந்து கொட்ட, நமது தொண்டாமுத்தூர் விவசாயிகள் தாங்கள் முற்றிலும் வேறுவிதமான மக்கள் என்பதைக் காட்டுகிறார்கள்.

நல்லூர்வயல் கிராமத்தில், நமது தன்னார்வலர்கள் தங்களுக்காக அதிகாலையிலிருந்து அந்தி சாயும் வரை உழைப்பதை கண்ட இரு விவசாயிகள் நவீன் அண்ணாவை தொடர்பு கொள்கிறார்கள்.ஈஷாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி கேட்டறிந்து கொண்டு, தாங்களும் இதில் எங்காவது பங்கேற்க வேண்டும் என்ற தீர்க்கத்துடன் முடிவெடுக்கிறார்கள். அங்கேயே அவர்களுக்கான ஒரு வாய்ப்பு காத்திருந்தது. நாம் தினமும் மக்களுக்கு உணவு தயாரித்து அளிப்பதை கேட்டறிந்தவர்கள், தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களாகவே முடிவு செய்தார்கள். சிறிதும் தயங்காமல் தங்கள் நிலங்களில் விளைவித்திருந்த 120 கிலோ தக்காளிகளை அப்படியே கொண்டு வந்து இறக்கினார்கள். தங்களிடம் என்ன இருக்கிறதோ, அதை முழுவதுமாக கொடுக்கும் மனம் அபூர்வமாக தெரிகிறது..? ஆனால் இது இத்துடன் முடியவில்லை.. வெறும் ஆரம்பபுள்ளிதான் இது.

நெஞ்சம் உண்டு...

மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பது இயல்பாகவே விவசாயிகளின் இரத்தத்தில் ஊறியிருக்கிறது போலும். எந்தக் காலமாக இருந்தாலும் சரி, இந்த தேசத்திற்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் மண்ணில் புரண்டு எழும் புகழ் வெளிச்சம் படாத எளிய மக்கள் இவர்கள். நல்லூர் கிராமத்தில் நமக்கு நேர்ந்ததைப் போலவே, முண்டன்துறை மற்றும் தென்கரை கிராமங்களில் பங்கேற்ற தன்னார்வலர்களும் இதே ஆச்சரியத்தை பகிர்ந்துகொண்டார்கள். முண்டன்துறை கிராமத்தை சேர்ந்த இரு விவசாயிகள் 20 கிலோ வெண்டைக்காயை அன்புடன் வழங்கியதுடன், இனிவரும் நாட்களிலும் வழங்குவோம் என்று உறுதியுடன் நம்மோடு தோள் சேர்ந்து நிற்கிறார்கள். தென்கரை கிராமத்தில் 100 கட்டு கொத்தமல்லி வழங்கிய விவசாயிகள், சுமார் 60 கிலோ வெண்டைக்காய் மற்றும் 400 கிலோ தக்காளியையும் வழங்கியுள்ளார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வைரசால் எதை வேண்டுமானாலும் எடுத்துச்செல்ல முடியும், ஆனால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அக்கறை, இரக்க உணர்வு, மனிதநேயம் இவற்றை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது என இந்த சவாலான நேரத்தில் மின்னுகிறார்கள் தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள். தங்களின் அதே அமைதியான தீர்க்கமான வழிகளில் இந்த கிராம மக்கள் தெளிவான ஒரு செய்தியை நமக்கு வழங்குகிறார்கள் : வைரஸால் நம்மை வெல்ல முடியாது, நாம் இந்த வைரஸை வெல்வோம்

மகராசனா நல்லா இருக்கணும்..

தன்னார்வலர்களுக்கு உத்வேகமும் உந்து சக்தியும் எப்படி கிடைக்கிறது தெரியுமா உங்களுக்கு? இந்த சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்களை தாங்கியபடி நிற்காமல் ஓடும் வேகத்தையும், எங்கே வேண்டுமானாலும் பதுங்கி இருக்கக்கூடிய கண்ணுக்கு தெரியாத அபாயத்தையும் அவர்கள் எப்படி கடந்து செல்கிறார்கள்? "மகராசனா நல்லாயிருக்கணும்..." வாழ்த்தைத் தவிர தன்னிடம் வழங்க எதுவுமில்லாத முதியவர் ஒருவரின் மனம் நிறைந்த வாழ்த்துதான் இது.

blog_alternate_img
 

ஒரு பக்க்தர் கூறுவதாவது, கடவுள் தற்காலிகமாக வெளியேறிவிட்டார், ஏனெனில் அவரது பக்தர்கள் இனி அவரது பூமிக்குரிய தங்குமிடமான கோவிலுக்கு வருவதில்லை.

விசித்திரம்

தாணிக்கண்டி கிராமத்தில் ஜெயக்குமார் அண்ணா பார்த்தது இது. தங்கள் குழந்தைகளா இது, அதே சேட்டைக்கார பயதானா என ஆச்சரியமாக தங்களின் பெற்றோரை வியக்க வைத்திருக்கிறார்கள். ஆம், தங்கள் சேட்டைகளை எல்லாம் கொஞ்சம் ஓரம்கட்டிவிட்டு இளைய தன்னார்வ படையாக களத்தில் நிற்கிறார்கள் தாணிக்கண்டி குட்டீஸ்கள்.

நம் தன்னார்வத் தொண்டர்கள் தினமும் மக்களுக்காக தயாரிக்கும் உணவை பாக்கெட்டுகளில் நிரப்பி தருவதற்காக களமிறங்கியது தாணிக்கண்டி இளைஞர்கள்தான். அவர்களோடு பின்னாலேயே வந்து சேர்ந்தார்கள் இளம் தன்னார்வ படையினர். கடும் வெயிலாக இருந்தால் என்ன.. எதுவாக இருந்தால் என்ன.. என்றபடி தங்கள் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று நிலவேம்பு கசாயம் கொடுக்க துவங்கினார்கள். "வீட்டில் சுண்டு விரலைக்கூட அசைக்காத அதே பயலுக இது என்ன இப்படி கிளம்புதுக" என பெற்றோர்களை வியக்க வைத்து இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, விழிப்புணர்வு நோட்டீஸ்களோடு மக்களுக்கு பரிட்சை வைக்கிறார்கள். இதில் முக்கியமான அம்சம், விழிப்புணர்வோடு சமூக இடைவெளியை கடைபிடித்து, மக்களிடம் பணிவுடன் அணுகுவது, நன்றி தெரிவித்து விடைபெறுவது என இவர்கள் இருப்பதே 'வேற லெவல்'. படிக்க முடியாத மக்களுக்காக நோட்டீசை நம்பிக்கை பொங்க வாசித்துக் காட்டுவது, அதை கடைபிடிக்க அதிகாரம் செலுத்துவது என தூள் பறத்துகிறார்கள் இந்த குட்டீஸ்கள். ஒலிபெருக்கிகளை எடுத்துக்கொண்டு தேர்ந்த அறிவிப்பாளர் தொனியில் அறிவிப்புகளை செய்வதும் அவர்கள்தான். நீங்களே பாருங்கள்.. 'எனக்கு போரடிக்கிறது' என்ற வார்த்தையே தாணிக்கண்டி அகராதியில் தடை செய்யப்பட்டு விட்டது.