அழிந்து கொண்டிருக்கும் சென்னைப்பட்டணம் !
சென்னை அழிந்து போக ஒரு குண்டு வீச வேண்டும், பல பேருடைய தலை உருள வேண்டும் என்பதல்ல, இந்தியக் கலாச்சார தலைநகரத்தின் ஆணிவேரான பாரம்பரியத்தை சற்று ஆட்டுவித்தாலே போதும்! வணிக மயமாதலும், நம் பேராசையும் சற்று அசைத்துப் பார்த்ததால் அசைந்து கொடுத்தது மட்டுமல்ல, ஆடியும் போயிருக்கிறது சென்னை... விழித்துக் கொள்வோமா?
 
 

சென்னை அழிந்து போக ஒரு குண்டு வீச வேண்டும், பல பேருடைய தலை உருள வேண்டும் என்பதல்ல, இந்தியக் கலாச்சார தலைநகரத்தின் ஆணிவேரான பாரம்பரியத்தை சற்று ஆட்டுவித்தாலே போதும்! வணிக மயமாதலும், நம் பேராசையும் சற்று அசைத்துப் பார்த்ததால் அசைந்து கொடுத்தது மட்டுமல்ல, ஆடியும் போயிருக்கிறது சென்னை... விழித்துக் கொள்வோமா?

பிழைப்பு தேடி செல்வதற்கு சென்னை; படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை சென்னை; வெளிநாடு செல்ல நல்ல அடித்தளம் சென்னை; பொருளாதார வளத்திற்கு சென்னை என்று இன்று சென்னையை நாடி வருபவர்களின் தேவைகள் பலவிதம். ஆனால் பல ஆயிரம் வருடங்களாக சென்னைபட்டினம் மதராஸ் ஆவதற்கு முன்பும் சென்னையாக ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பும் கூட நாயன்மார்களும் ஆன்மீகத் தேடுதலில் உள்ளோரும் தேடி வரும் ஸ்தலமாக இருந்தது உங்களுக்கு தெரியுமா?

சென்னையை சுற்றி வந்தால் அடிக்கொரு கோவில், வழிபாட்டு முறைக்கு ஏற்றவாறு பிம்பம் என்று பழைய சென்னையின் கசடாய் இன்றும் பல விஷயங்கள் தள்ளாடி நின்று கொண்டுதான் இருக்கின்றன. நம் நினைவில் உள்ளவரை திரும்பிப் பார்த்தால், இரண்டு அடியில் வள்ளுவம் எழுதியவர் தொடங்கி, நம் காலத்திற்கு சற்று முன்பு வாழ்ந்து தன் உடல் துறந்து சென்ற வள்ளலார் வரை பலரும் கால்தடம் பதித்த புண்ணிய பூமி, சென்னை.

AnandaAlai-AboutTemple-21stAug2013-3
AnandaAlai-AboutTemple-21stAug2013-4 AnandaAlai-AboutTemple-21stAug2013-5
AnandaAlai-AboutTemple-21stAug2013-6
AnandaAlai-AboutTemple-21stAug2013-10 AnandaAlai-AboutTemple-21stAug2013-13
AnandaAlai-AboutTemple-21stAug2013-15 AnandaAlai-AboutTemple-21stAug2013-14

 

சென்னையின் ஆன்மீக வரைபடத்தின் பழைய பதிப்பை மறந்தோருக்கு திருவேற்காடு, கபாலீஷ்வரர், திருவொற்றியூர், திருவான்மியூர், மருதீஷ்வரர், மாங்காடு, சைதை காரணீஷ்வரர் என நினைவூட்டல்கள் ஏராளம். தன்னகத்தே மட்டுமல்ல, தன்னைச் சுற்றியும் ஒருபுறம் காஞ்சி, மறுபுறம் திருவண்ணாமலை என சுற்றிலும் பல ஷேத்திரங்களை தன் ஆன்மீக விசையால் இணைத்துக் கொண்டிருக்கிறது சென்னை.

இங்கு வாழ்வதற்கு மட்டுமல்ல இங்கு தன் உயிர் நீக்கவும், சமாதி நிலை அடையவும் தவம் புரிந்து, முக்தியடைந்த சித்தர்கள் பலர். இன்றும் சென்னையில் அவர்கள் தம் சமாதிகளின் சக்தி அலைகளின் மூலம் நம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பது அனுபவ சாட்சியான உண்மை. நம் பார்வை ஓரங்களில் அவ்வப்போது பட்டுச் செல்லும் இதுபோன்ற இடங்கள் பலர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருந்தாலும் எப்போதாவது நம்மை யோசிக்க செய்திருக்கிறதா? இதோ இவர் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திய ஒரு கோவில், புதிய மலர்ச்சி ஒன்றுக்கு வித்தாய் உருவாகி இருக்கிறது.

திரு. நாராயணன் அவர்கள் எழும்பூர் வாசியல்ல, எழும்பூரை கடந்து செல்லும் நகரவாசிகளில் ஒருவர். அர்த்தநாரீஷ்வரரின் மேல் அவர் கொண்டிருந்த காதல், எழும்பூர் அர்த்தநாரீஷ்வரர் ஆலயத்தை அவர் கடந்து செல்கையில் ஆழ்ந்த ரண வேதனையாய் மாறியது. ஸ்வாமியின் லிங்கம் வரை தேங்கியிருந்த மழை நீர், அந்த வேதனையை பல மடங்கு பெருக்கியது.

AnandaAlai-AboutTemple-21stAug2013-16
AnandaAlai-AboutTemple-21stAug2013-21 AnandaAlai-AboutTemple-21stAug2013-22
AnandaAlai-AboutTemple-21stAug2013-18
AnandaAlai-AboutTemple-21stAug2013-23 AnandaAlai-AboutTemple-21stAug2013-25
AnandaAlai-AboutTemple-21stAug2013-27
AnandaAlai-AboutTemple-21stAug2013-20 AnandaAlai-AboutTemple-21stAug2013-24
AnandaAlai-AboutTemple-21stAug2013-17

 

கோவிலின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தபோது, பல ஏக்கர் நிலமும், இதர சொத்துக்களும். ஏழு அடுக்கு கோபுரமும் சுருங்கி இன்று வெறும் கர்ப்ப கிரகம் மட்டும் தப்பிப் பிழைத்த செய்தி அவரைக் கிழித்தது. ஏறி இறங்கியது பல அலுவலகப் படிகளை, கோவில் சொத்துக்களை மீட்டு புதுப்பொலிவு அளிக்க உருகியது அவரது உள்ளம். ஆனால் கோவில் உருவாக்கத்தை பற்றி ஒன்றும் தெரியாதே? இத்தனைக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட அமைப்பாயிற்றே, கோவிலைப் பற்றி எதுவும் தெரியாமல் எப்படி அதனை நிர்மாணம் செய்வது என்கிற கேள்வி எழும்ப; ஈஷா யோகா வகுப்பு செய்து, சத்குருவுடன் தியான யாத்திரை சென்று, பல சத்சங்கங்களில் அவர் தரிசனம் பெற்றிருந்த நாராயணன் அவர்களுக்கு கிட்டியது குருவருள்.

கடிதத்தில் இந்தப் பழைய கோவிலை புனரமைக்க விருப்பம் தெரிவித்து எழுதினார் சத்குருவிற்கு. விடை தேடி சத்குரு சென்ற இடத்திற்கெல்லாம் உடன் சென்று விடை கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தார். ஏக்கத்திற்கு விடையாய், 'இப்படி செய்யுங்கள்' என்று பதில் கிடைத்தது குருவிடமிருந்து. விடை மட்டுமா உடலளவில் நாராயணனுடன் சத்குரு இல்லை என்றாலும், நாராயணன் செய்த ஒவ்வொரு செயலிலும் ஏணிப்படியாய் உடனிருந்து மேலேற்றிவிட்டிருக்கிறார்.
AnandaAlai-AboutTemple-21stAug2013-26
திரு. நாராயணன் அவர்களின் வார்த்தைகளில் சொல்லப் போனால், குருவருள் இல்லாமல் இப்படியொரு காரியத்தை செய்வது முடியவே முடியாது. குருவிடமிருந்து 'செய்யுங்கள்' என்று பதில் கிடைத்தவுடன் எங்கிருந்து எனக்கு வந்தது அந்த சக்தி என்றே தெரியவில்லை. நினைக்காத இடங்களிலிருந்தெல்லாம் பணம், பொருள், மனிதர்கள் என தேடித் தேடி வந்தன உதவிகள். மூன்று வருடங்களில் சத்குரு அளித்த குறிப்புகளின்படி படிப்படியாய் அழகுற நிறைவேறியது கோவில் திருப்பணி என்கிறார்.

திரு. நாராயணன், திரு. சதீஷ், திருமதி. அனு அவர்கள் மூவரும் இந்த ஆலயப் பணிக்காக தன்னையும் அறியாமல் ஒன்றிணைந்தனர். இந்த மூவர் குழு உருவானது எப்படி? மூவரும் சென்னை. மூவரும் ஒரே கைலாஷ் யாத்திரைக்கு சத்குருவுடன் சென்றவர்கள். மூவரும் ஈஷா யோகா கற்றவர்கள். மூன்று பொருத்தங்களைத் தவிர வேறு எந்த வகையிலும் ஒருவருக்கு ஒருவர் தெரியாது, முன்பின் பார்த்ததுமில்லை, தொடர்பும் இல்லை.

ஆலயப் பணியை துவங்க வேண்டும் என்று நாராயணன் அவர்களுக்கு எண்ணம் எழுந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு ஏற்பட்டு, கோவில் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தில் இவர்கள் கைகோர்த்ததை சத்குருவின் அருள் என்று சொல்வதைத் தவிர வேறு எப்படியும் சொல்ல முடியாது என்கின்றனர். எங்களை இணைப்பதற்காக நடந்த சம்பவங்கள் யாவும், சத்குருவின் சித்தப்படி நாங்கள் ஒன்றிணைந்ததைப் போல் உள்ளது. அவர் விருப்பப்படி இந்தக் கோவில் சிறப்பான முறையில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது, என்று சிலிர்ப்புடன் கூறுகின்றனர். சத்குருவிற்கு அழைப்பிதழ் விடுத்து காத்திருந்த இவர்களுக்கு இன்பமளிக்கும் செய்தியாய், சத்குரு தன் பிரம்மச்சாரிகளை அனுப்பி வைத்ததை குறிப்பிட்டு நினைவு கூர்கிறார்கள்.

கோவில் பணி என்பது சாதாரண விஷயமல்ல. அரசாங்க அலுவலகங்களிலிருந்து, நிதி திரட்டும் நிகழ்வு வரை, பக்கத்து காம்பவுன்ட் சண்டையிலிருந்து வீட்டில் எழும்பும் தடைகள் வரை என பலவகை பிரச்சனைகளை ஒருசேர கையாள உறுதி மட்டும் போதாது, அயராத கடின உழைப்பும், விடா முயற்சியும் அனைத்திற்கும் மேலாக அருளும் வேண்டும். அத்தனை தடைகளையும் கடந்து இன்று அழகுடன் வீற்றிருக்கிறது சென்னை எழும்பூர் தாசபிரகாஷ் எதிரே இருக்கும் அர்த்தநாரீஷ்வரர் திருக்கோவில்.

மழை நீருக்குள் புதைந்து போயிருந்த கோவில் இன்று பல பேரின் பங்களிப்போடு அழகுற எழுந்து நிற்கிறது. மழை நீருக்குள் மட்டுமல்ல இன்று நம் கவனக் குறைப்பாட்டால், சில இடங்களில் புகைப்பிடிப்போர் சங்கமாகவும், வேறு சில இடங்களில் கடை விரித்து வணிகம் செய்யும் வர்த்தக மையமாகவும், கோவிலைச் சேர்ந்தோர் சற்றே உறங்கினால் நாம் தங்க அழகிய அபார்ட்மென்டாகவும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன கோவில் வளாகங்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

சுனாமி மீட்புப் பணியில் ஈஷா களமிறங்கியபோது சிதம்பரம் கோவிலின் நிலைகண்ட சத்குரு, இந்த கோவிலை நீங்கள் புனர் நிர்மாணம் செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கை சில வருடங்களில் நம் நெய்வேலி, சிதம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தன்னார்வத் தொண்டர்களால் நனவாக்கப்பட்டது. இன்றும் நித்தம் நித்தம் நிகழ்ந்து வரும் இவர்களின் திருப்பணி இராமேஷ்வரம் திருக்கோவில் வரை விரிந்தது, பிரபலம் செய்யப்படாத ஒரு வரலாறு.

கல், உளி, உடல் பலம் மட்டுமே ஆயுதமாய், பக்தி ஒன்றே வாழ்வாய் வாழ்ந்து மறைந்துபோன அந்தத் தலைமுறை மனிதர்களின் நெஞ்சுரத்தை நினைத்துப் பார்த்தால் கிரேனை பயன்படுத்தி, கான்கிரீட் மிக்ஸரால் சிமென்ட் வாரி இறைத்து கட்டும் நம் கட்டிடப் பாணி எம்மாத்திரம் என்றே எண்ணத் தோன்றுகிறது. நினைத்தாலும் இனி உருவாக்க முடியாத அற்புதமாய் கோவில் கொண்டிருக்கும் இந்த சக்தி ஸ்தலங்களை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு நம் கையில் உள்ளது.

பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் வாழும் பேறு அனைவருக்கும் உண்டு என்று சத்குரு தமிழ் பூமியில் பேசிய வார்த்தைகள், அவர் வார்த்தைகளுக்கு உதாரணமாய் வாழ்ந்த இந்த மண்ணில் என்றென்றும் நிலைத்து நிற்கட்டும். ஆலயம் புனர் நிர்மானம் செய்வோம், இனியொரு புது தமிழகம் செய்வோம்.

 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

நமஸ்காரம் திரு நாராயணன் அவர்களே உங்களுடைய இந்த பணியானது எங்களை மேலும் உத்வேகம் கொள்ள செய்கிறது .மகத்துவமான இந்த பணி தொடரட்டும் சத்குருவின் அருள் உங்களுக்கு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்......

4 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

BLESSINGS.