அழிந்துவரும் கிராமிய கலைகளுடன் களைகட்டிய ஈஷா கிராமோத்சவ மண்டல போட்டிகள்!
ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான இரண்டாம் கட்ட வாலிபால் போட்டிகள் கோவை, திருச்சி, ஈரோடு, விருதாச்சலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, கரூர், ராஜபாளையம், திருப்பத்தூர், மேட்டூர் ஆகிய மண்டலங்களில் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெற்றன.
 
 

“ம்... அடுத்ததாக சைக்கிள் டயர் ரேஸ்! கலந்துக்கறதுக்கு பேர் குடுத்திருக்கிற அண்ணால்லாம் ட்ராக்குக்கு வாங்க ப்ளீஸ்!” ஈஷா கிராமோத்சவ மண்டல போட்டிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த அந்த தன்னார்வத் தொண்டர் ஒலிபெருக்கியில் அறிவித்தார்! உடனே, தங்கள் பால்ய காலத்தில் விளையாடிக் களித்த சைக்கிள் டயர் உருட்டும் விளையாட்டை தயக்கமேதும் இல்லாமல் விளையாட ட்ராக்கில் வந்து நின்றனர் பங்கேற்பாளர்கள். சமூகத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் அவர்கள் ஈஷா கிராமோத்சவத்தில் அன்று மீண்டும் தங்கள் குழந்தைப் பருவத்தை வாழ்ந்து பார்த்தனர் என்றே சொல்லவேண்டும்!

ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான இரண்டாம் கட்ட வாலிபால் போட்டிகள் கோவை, திருச்சி, ஈரோடு, விருதாச்சலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, கரூர், ராஜபாளையம், திருப்பத்தூர், மேட்டூர் ஆகிய மண்டலங்களில் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெற்றன. அதேபோல் பெண்களுக்கான எறிபந்து போட்டிகளும் தமிழகமெங்கும் நடைபெற்றன. மேலும், அன்று மாலை மறக்கப்பட்டுவரும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு விளையாட்டுகள், கிராமிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் என மிகவும் கோலாகல நிகழ்வுகள் வெகுசிறப்பாக நடந்தன.

 

மேற்சொன்ன 10 ஊர்களிலும் குறிப்பிட்ட பள்ளி-கல்லூரி வளாகங்களிலும் தனியார் இடங்களிலும் இந்த நிகழ்வுகள் வெகுசிறப்பாக நிகழ்ந்தேறின. சமூக முன்னேற்றத்திற்காக ஈஷாவால் நிகழ்த்தப்படும் இதுபோன்ற ஒரு சிறப்புமிக்க நிகழ்விற்கு தாங்கள் இடம் கொடுத்து உதவுவதில் பெருமைகொள்வதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
ஈஷா கிராமோத்சவ மண்டல போட்டிகள் நிகழ்வில், தங்கள் லீக் ஆட்டங்களில் (ஆண்கள்-வாலிபால் மற்றும் பெண்கள்-எறிபந்து) வெற்றிபெற்று அடுத்த கட்டபோட்டிகளுக்கு முன்னேறும் தீவிரத்தில் வீரர்-வீராங்கனைகள் ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் கோலப்போட்டியில் வண்ணம் தீட்டும் மும்முரத்தில் ரங்கோலிப் பெண்கள் இருந்தனர்!

கிராமங்களில் நிகழும் நமது பாரம்பரிய நிகழ்வான "பொங்கல் வைத்தல்" ஒரு கொண்டாட்டமாக நடந்தது. ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் விறகு அடுப்பு மூட்டி, பச்சரிசியுடன் சர்க்கரை பொங்கல் வைத்து, குலவையிட்டு கொண்டாடினர்.

கேளிக்கை விளையாட்டுப் போட்டிகள்!

பலூன் உடைத்தல் போட்டியில் கலந்துகொண்டு உற்சாகப் பரவசத்தில் களித்தனர் குழந்தைச் செல்வங்கள்! சிறுவர்களுக்கான ‘லெமன் ஆன் த ஸ்பூன்’ ஓட்டப் போட்டியில் சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை! ஆனால், அங்கு குழந்தைகளாக மாறி, லெமன் ஆன் த ஸ்பூன் போட்டியில் கலந்துகொண்ட பெரியவர்களைப் பார்த்தபோது பார்வையாளர்களுக்கு நிச்சயம் வியப்பைத் தந்திருக்கும். குழந்தைகளுக்கான சாக்கு ஓட்டப் போட்டி நடக்கும்போது, சாக்கு மூழ்கும் உயரத்திலுள்ள குட்டிக் குழந்தைகள் போட்டியில் கலந்துகொள்ள, ஒருங்கிணைப்பாளர்கள் அந்த சாக்கை லாவகமாக மடித்து அந்த குட்டீஸ் கைகளில் கொடுத்தனர்.

கால்களைக் கட்டிக்கொண்டு ஓடும் மூன்றுகால் ஓட்டப் போட்டியில் தம்பதியர் தங்கள் இணைகளுடன் கைகோர்த்து ஒன்றாக ஓடியதை பார்வையாளர்கள் வெகுவாக இரசித்து ஆரவாரம் செய்தனர். உறியடி விளையாட்டில் உடைபடுவதற்குத் தயாராக காத்திருந்த மண்பானைகளை தங்கள் கண்களைக் கட்டிக் கொண்டு உறியடி வீரர்கள் உடைத்து நொறுக்கினர்!

ஆண்களும் பெண்களும் தனித்தனியே இரண்டு அணிகளாகப் பிரிந்து, கயிறு இழுக்கும் போட்டியில் கலந்துகொண்டு தங்கள் புஜபலத்தை காட்டினர். கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, பறை இசைக்குழுவினர் இடையிடையே பறையடித்து மகிழ்வித்தனர்.

மாலைநேர கலை நிகழ்ச்சியில், அரங்கேறியது நாட்டுப்புற கலைகள்!

சிலம்பாட்டம், தீப்பந்தம், ஜிக்காட்டம், பறையாட்டம், ஜமாப் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகள் கோயமுத்தூரில் அரங்கேறின. சலங்கையாட்டம், சிலம்பாட்டம் ஆகிய கிராமிய ஆட்டங்கள் ஈரோட்டிலும், பறையாட்டம் மற்றும் ஒயிலாட்டம் மேட்டூரிலும் பார்வையாளர்களின் இரசனைக்கு விருந்தாகின. திருவண்ணாமலையில் மயிலாட்டமும் திருப்பத்தூரில் கொக்கிலி ஆட்டம், பறையாட்டம் மற்றும் ஒயிலாட்டம் ஆகிய ஆட்டங்களும் நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தன.

விருத்தாச்சலத்தில் சாட்டைக்குச்சி ஆட்டமும் திருநெல்வேலியில் வில்லுப்பாட்டு, கனியன் கூத்து (மகுடம்), பறையாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நையாண்டி மேளம் என ஒரு கிராமிய கலைவிருந்தே படைக்கப்பட்டது! மேலும், திருச்சியில் சக்கை குச்சியாட்டம், பறையாட்டம் மற்றும் ஒயிலாட்டம் ஆகிய ஆட்டங்கள் கலைஞர்களால் வெகு சிறப்புற வழங்கப்பட்டன.

இராஜபாளையம் மண்டல போட்டி நிகழ்வில் அறுவடை ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கரகாட்டம் ஆகியவற்றை ஆடி அசத்திய ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ‘கோடாங்கி’ நாட்டுப்புற இசைக்குழுவினர், தங்களைப் போன்ற நலிந்துவரும் கலைக்குழுவினருக்கு ஈஷா அறக்கட்டளை போன்ற தன்னார்வ அமைப்புகளின் ஆதரவு தொடர்ந்து தேவை என்பதைக் கூறினர். மேலும் மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கும் வகையில் வழங்கப்பட்ட தோல்பாவைக் கூத்து நிகழ்வில் முத்தாய்ப்பாய் அமைந்தது!

அழிந்து வரும் அரிய கலை தோல்பாவைக் கூத்து!

அழிந்துவரும் கிராமிய கலைகளுடன் களைகட்டிய ஈஷா கிராமோத்சவ மண்டல போட்டிகள்!, Azhinthuvarum kiramiya kalaigaludan kalaikattiya isha gramotsavam

அழிந்துவரும் கிராமிய கலைகளுடன் களைகட்டிய ஈஷா கிராமோத்சவ மண்டல போட்டிகள்!, Azhinthuvarum kiramiya kalaigaludan kalaikattiya isha gramotsavam

நாட்டுப்புற கலைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளரான டாக்டர்.முத்துராஜா அவர்கள் அழிந்துவரும் கிராமியக் கலைகள் குறித்து பேசும்போது தேவராட்டம், கனியன் கூத்து, வில்லுப்பாட்டு போன்ற வழிபாட்டு முறைகளுடன் தொடர்புடைய கலைகள் ஓரளவிற்கு பிழைத்து வந்தாலும், கேளிக்கைசார்ந்த கிராமிய கலைகளான பறையாட்டம், கரகாட்டம், தோல்பாவைக் கூத்து, ஒயிலாட்டம் போன்ற பல கலைகள் வெகுவாக அழிந்து வருவதை வருத்தத்துடன் தெரிவித்தார். கிராமியக் கலைகளின் சிறப்புகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், இத்தகைய கலைகளைக் காப்பதற்கு ஈஷா முன்னெடுத்துள்ள இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என அவர் தெரிவித்தார்.

தோல்பாவை கூத்து குறித்து அவர் சொல்லும்போது...

“தோலினால் ஆன பாவைகளைக்கொண்டு திரைக்குப்பின்னால் இயக்கி, இராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிகாசங்களை அரங்கேற்றுவார்கள். பாவைகளை இயக்கும் அந்த கலைஞர் 20க்கும் மேற்பட்ட குரல்களில் பேசக்கூடிய திறமை கொண்டவராக இருப்பார். அனைத்து பாவைகளுக்கும் அவரே பின்னணி குரல் கொடுப்பார்.

அறுவடை ஒயிலாட்டம்...

பாரம்பரியமாக நம் விவசாய குடிமக்கள் அறுவடைக்கு கூலியாக பணம் வாங்குவதில்லை! மாறாக, விளைந்த கதிர்மணிகளை பெற்று ஆடிப்பாடிக் கொண்டாடுவதே அறுவடை ஒயிலாட்டம்! அதுபோல் போர் அறிவிப்பு முதல், திருவிழாக்கள் மற்றும் மங்கள காரியங்களுக்கும் கூட நமது கலாச்சாரத்தில் பறையிசை முழக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வந்தது, ஆனால் தற்போது பறையாட்டம் என்பது அழிந்து வரும் ஒரு கலையாக மாறிவருகிறது.” என்று அவர் தெரிவித்தார்.

பாரம்பரிய உணவுத் திருவிழா

கலை நிகழ்ச்சிகள் ஒருபுறம் அரங்கேற, நவீன யுக மக்கள் மறந்துவிட்ட சுவையும் சத்தும் மிக்க பாரம்பரிய உணவுப் பதார்த்தங்கள் உணவுத் திருவிழாவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானிய உணவுகள் மட்டுமல்லாது, செம்பருத்தி சர்பத், மூலிகை டீ போன்ற மருத்துவ குணம் வாய்ந்த பானங்களும் பொதுமக்களின் ருசிக்கு விருந்தாகின.

பரிசளிப்பு விழா...

மாலையில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கும் Runner up அணிக்கும் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும், கேளிக்கை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

செப்டம்பர் 4ல் காத்திருக்கிறது மாபெரும் கொண்டாட்டம்!

சத்குரு அவர்களின் தலைமையில் ஈஷா கிராமோத்சவ திருவிழாவின் மாபெரும் நிறைவு விழா கொண்டாட்டம், பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகளுடனும் விளையாட்டுகளுடனும் கோவை கொடிசியா மைதானத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த திருவிழாவில் அனைவரும் கலந்துகொண்டு கிராமிய கலைகளையும் விளையாட்டுகளையும் மீட்டெடுப்போம்!

ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம்!

கிராமப்புற மக்களின் உடல், உள்ளம், பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பாட்டை எடுத்து வந்து, அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை கொண்டு வருவதற்காக சத்குரு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம். இந்த இயக்கத்தின் மூலம் 2003ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் கிராமங்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதோடு, வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 100 கிராமிய கலைகள் இருந்ததாக சொல்கிறார்கள். அதில் 50 கலைகள் அழிந்தே போய்விட்டன. மீதமுள்ள 50 கலைகளில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேலுள்ள கலைகள் கடைசி தலைமுறை கலைஞர்கள் கைவசம் உள்ளது. இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் மகத்தான பொறுப்பு நம் கைகளில்!

கலைகளின் காவலனாய் இந்தக் கடைசி தலைமுறை கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவிருக்கிறது ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1